June 26, 2018

"இதுதான் மீள்குடியேற்றம் தொடர்பான, யதார்த்த நிலை”

-சுஐப் எம்.காசிம்-

ஜனாதிபதியையும், பிரதமரையும் கொழும்பில் அடிக்கடி சந்தித்துப் பேச்சு நடாத்தும் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி அவர்களிடம் பேசி, தீர்வுகளைக் காணாது, மாவட்ட அபிவிருத்திச் சபை கூட்டங்களிலும், உள்ளூர்க் கூட்டங்களிலும் வீணான தர்க்கங்களிலும், விமர்சனங்களிலும் ஈடுபடுவது உகந்ததா? என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், வவுனியா மாவட்ட செயலகத்தில், மாவட்டச் செயலாளர் சோமரட்ன விதான பத்திரனவின் நெறிப்படுத்தலில், அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், பாரளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டம் இடம்பெற்ற போது வடக்கு மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகள் தொடர்பில், மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இந்த செயலணி ஒரு பக்கச்சார்பாக செயற்படுவதாகவும், மூவின மக்களையும் குடியேற்றுவதை விடுத்து, குறிப்பிட்ட இனங்களையே மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,

“வடக்கு மீள்குடியேற்றச் செயலணி, நீண்டகால அகதிகளை குடியேற்றுவதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட ஒன்று. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வட மாகாணத்தில் வாழ்ந்த சிங்கள சகோதரர்கள் வெளியேற்றப்பட்டும், வெளியேறியும் இருந்தனர். அதேபோன்று, 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்த மாகாணத்திலிருந்து ஒட்டுமொத்தமான முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர். 

“யுத்தத்தின் இறுதித் தறுவாயில் முல்லைத்தீவிலிருந்து சுமார் 03 இலட்சம் தமிழர்களும்  வெளியேறி மெனிக்பாமில் தஞ்சமடைந்திருந்தனர். யுத்த முடிவின் பின்னர், அகதிகளாகிய இந்தத் தமிழ் மக்களை அவசரமாக மீளக்குடியேற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அது மாத்திரமின்றி சர்வதேச அழுத்தமும் இருந்தது. இந்த நிலையில், அரசாங்கம் கொள்கைத் தீர்மானம் ஒன்றை எடுத்து, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் செயலணி ஒன்றை உருவாக்கி, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த எனக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. இறுதி யுத்தத்தில் வெளியேறி முள்வேலி முகாம்களுக்குள் தஞ்சமடைந்திருந்த இந்த மக்களுக்கு, மீண்டும் தமது வாழ்விடங்களில் தற்காலிகக் கொட்டில்களும், வாழ்வாதாரத் தேவைகளும் வழங்கப்பட்டன. கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு நீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மின்சார வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாடுகளினதும், வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடனும் “என்ட்ரிப்” போன்ற திட்டங்களின் மூலமும், அனைத்தையும் இழந்து வாழ்வில் நொந்துபோன தமிழ் மக்களுக்கு முடிந்தளவு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், நீண்டகால அகதிகளான சிங்கள, முஸ்லிம் மக்களை இந்த மீள்குடியேற்றத்துடன் ஏக காலத்தில் செய்வதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

“இந்த நிலையில், ஆண்டுகள் பல கடந்தும் நீண்டகால அகதிகளுக்கு எந்த விமோசனமும் கிடைக்காத போதுதான், இவர்களைக் குடியேற்ற விஷேட மீள்குடியேற்றச் செயலணி ஒன்றை உருவாக்கி அது, தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றது” என்று அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் குறுக்கீடு செய்த மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் “1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கிலிருந்து தமிழ் மக்கள் இடம்பெயரவில்லையா?” என்று கேள்வியெழுப்பியதுடன், யுத்தகாலத்தில் வவுனியாவின் எல்லைப்புறங்களில் உள்ள தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த மக்களும் இடம்பெயர்ந்து இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை எனவும், அவர்கள் துன்பங்களுடனேயே காலத்தைக் கழிப்பதாகாவும் தெரிவித்தார். அத்துடன், அவ்வாறான கிராமங்களின் பெயர்களையும் அடுக்கினார்.

“தமிழ் மக்கள் படுகின்ற கஷ்டங்கள் எனக்கும் தெரியும். என்னால் முடிந்த வரை நான் அவர்களுக்குப் பணியாற்றுகின்றேன். பணியாற்றியும் உள்ளேன். யாழ்ப்பாணத்திலும், வேறு மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் மீளக்குடியேற முடியாமல் அவதியுறுவது எனக்குத் தெரியும். எனவேதான் நீண்டகால அகதிகளுக்கென மீள்குடியேற்ற செயலணி உருவாக்கப்பட்ட போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் குடியேற்றுவதென முடிவு செய்யப்பட்டது. இதுதான் மீள்குடியேற்றம் தொடர்பான யதார்த்த நிலை” என்று அமைச்சர் ரிஷாட் பதிலளித்தார்.

“கொழும்பிலே உங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கின்றனர். பிரதமரைச் சந்திக்கின்றனர். அடிக்கடி இந்த சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் வாக்குகளைக் கூட ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றீர்கள். அவ்வாறாயின் இந்தப் பிரச்சினைகளை நீங்கள் அரச மேன்மட்டத்தில் தெரிவித்து, தீர்வைப் பெற்றுக்கொள்ள ஏன் தவறுகின்றீர்கள்? இங்கு வந்து அடிக்கடி எங்கள் மீது ஏன் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றீர்கள்?” என்று அமைச்சர் ரிஷாட் வினவிய போது, “அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும், வன்னி மாவட்ட பிரதிநிதியாகவும் இருக்கும் நீங்களும், எங்களுக்கு உதவ வேண்டும். தமிழ் மக்களும் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்” என்று மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் அச்சமயம் கூறினார். 
“தமிழ் மக்களுக்கு உதவ நான் ஒருபோதும் பின்நின்றவன் அல்ல. பின்நிற்கப் போவதும் இல்லை. நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும் குடியேற்ற நானும் உதவுவேன்” என்று அமைச்சர் ரிஷாட் உறுதியளித்தார். 

அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பூந்தோட்ட புனர்வாழ்வு நிலையத்தை இராணுவத்திடமிருந்து விடுவிப்பது மற்றும் காட்டு யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்தல், மல்வத்து ஓயா திட்டத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் ஆகியவை பற்றியும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
                    

1 கருத்துரைகள்:

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:8)
www.tamililquran.com

Post a Comment