Header Ads



பாராளுமன்றத்தில் ஹரீஸுக்கும், விஜேதாஸவுக்கும் நடந்தது என்ன..?? உபவேந்தர் நஜீமுக்கும் பாராட்டு


தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் பெறுவதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிற்குமிடையில் நேற்று பாராளுமன்றத்தில் சூடான வாதப்பிரதிவாதம் நடந்தது.

தென்கிழக்கு பல்கலைக்கழக, மாணவிகளிடம் விரிவுரையாளர்கள் பாலியல் லஞ்சம் பெறுவதாக அமைச்சர் பொதுவாக குறிப்பிட்டிருப்பது கவலை தரும் விடயம் எனவும் இதற்கு ஆதாரம் இல்லை எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் பதிலளித்து உரையாற்றியதோடு மாணவி ஒருவரிடம் விரிவுரையாளர் ஒருவர் பாலியல் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அமைச்சர் பொதுவாக குற்றஞ்சாட்டியிருப்பதால் மாணவர்களும் பெற்றோரும் கவலையடைந்திருப்பதாக பிரதி அமைச்சர் பதிலளித்தார்.

இருவருக்குமிடையில் சில நிமிடங்கள் வரை வாதப்பிரதிவாதம் நீடித்தது.

மத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,


தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பில் கவலையான விடயங்கள் எழுப்பப்பட்டது. அங்குள்ள விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் பற்றி விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. விரிவுரையாளர்கள் மாணவர்களிடமிருந்து பாலியல் இலஞ்சம் கோருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அங்கு பயிலும், பயின்றுவரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனையடைந்துள்ளனர். கல்விமான்கள் வேதனையடைந்துள்ளனர். நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற நிலையில் தென்கிழக்குப் பல்லைக்கழகம் பற்றி மாத்திரம் கருத்துக் கூறியிருப்பது பொருத்தம் இல்லையென நினைக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ,

பாலியல் இலஞ்சம் பெற்றது தொடர்பில் சாட்சி இருக்கிறதா? என பிரதி அமைச்சர் வினவினார். நான் பொறுப்பற்ற விதத்தில் எதுவும் கூறவில்லை. நான் சில விரிவுரையாளர்கள் மற்றும் உபவேந்தர்களை சந்தித்தேன். பெண்களிடம் பாலியல் இலஞ்சம் பெறுவதாக நான் பொதுவாக கூறிவில்லை. தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக மாணவி ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார். இது தொடர்பில் சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ள அவர் ஒலிப்பதிவு ஒன்றையும் முன்வைத்துள்ளார். தனக்கு பாலியல் இலஞ்சம் வழங்காவிட்டால் கை கால்களை உடைப்பதாகவும் அந்த விரிவுரையாளர் அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது என்றார்.

இதன் ​போது கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் ஹரீஸ், உங்கள் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் பொதுவாக விரிவுரையாளர்கள் பாலியல் இலஞ்சம் பெறுவதாக கூறப்பட்டிருந்தது என்றார்.

நான் பெயர் குறிப்பிட்டே இது பற்றி உரையாற்றினேன். இவ்வாறான முறைகேடுகளுக்கு இடமளிக்குமாறா கூறுகிறீர்கள்? ஏன் இதனை எதிர்க்கிறீர்கள் ? என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

பொதுவாக இந்தக் குற்றச்சாட்டை தெரிவிக்காவிடின் ஏன் அமைச்சின் ஊடகப்பிரிவினூடாக அது பற்றி தெளிவுபடுத்தவில்லை? என்று வினவிய பிரதி அமைச்சர், இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பல்கலைக்கழக மாணவிகளும் பெற்றோரும் கண்ணீர்விட்டு அழுததாகவும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வேதனை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பதிலளித்த அமைச்சர், ஒலுவில் பல்கலைக்கழகம் தொடர்பில் மறைப்பதற்கு எதுவுமில்லை. கட்டுப்பாடோ ஒழுக்கமோ இன்றி இருந்த பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் நஜீம் நியமிக்கப்பட்டார். அவர் அர்பணிப்புடன் பல்கலைக்கழகத்தை முன்னேற்றி வருகிறார். ஆனால் பதிவாளரும் சில விரிவுரையாளர்களும் அதற்கு இடையூறு செய்து வருகின்றார்கள். நான் விரிவுரையாளர்களை சந்தித்தேன். பெற்றோருடன் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு வந்த ஒரு மாணவி பாலியல் இலஞ்சம் தொடர்பில் முறையிட்டார். இவ்வாறான அநீதிகளுக்கு இடமளிக்கவா கூறுகிறீர்கள்? என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், ஊடகங்கள் பொறுப்பற்ற விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தை சிறப்பாக கட்டியெழுப்ப உதவ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments

Powered by Blogger.