June 03, 2018

இக்கட்டான நிலையில் நல்லாட்சி, சோபித தேரர் கூறியது என்ன...?


இலஞ்ச ஊழல் எதிர்ப்பும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புமே 2015 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினை மாற்றி புதியதோர் அரசாங்கத்தை நிறுவுவதற்கான பின்புலத்தை உருவாக்கியது. யுத்த வெற்றியின் பின்னர் சட்டத்தையும் நீதியையும் தமது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையிலும் உறுதிப்படுத்தும் விதத்திலும் அப்போதைய அரசாங்கம் செயற்படுத்தியமையினாலேயே மக்கள் மத்தியில் அந்த அரசாங்கம் மீது பாரிய வெறுப்பு ஏற்பட்டது. மறுபுறத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் தோரணையில் நிகழ்ந்த பாரிய நிதி மோசடிகளும் குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட சர்வாதிகார அரசியல் போக்கும் அந்த அரசாங்கத்தின் மீது மக்களின் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.

இந்தப் பின்னணியிலேயே மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்த அதே நேரத்தில் சகலவித பாதுகாப்பு அரண்களையும் கொண்டிருந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக நிச்சயம் வெற்றியீட்டக்கூடிய ஒருவரை களமிறக்க வேண்டிய கட்டாயம் ராஜபக்ஷ எதிர்தரப்பிற்கு ஏற்பட்டது. ஆயினும் இலஞ்ச ஊழலுக்கும் அராஜகத்திற்கும் எதிரான அந்த போட்டியில் போட்டியிட தகுந்தவரை தேடிப்பிடிப்பதென்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. காரணம் 70களின் நடுப்பகுதிக்கு பின்னரான இலங்கை அரசியல் இலஞ்சம், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஊறிப்போன சாக்கடையாக மாறியிருந்ததால் அந்த அரசியல் சாக்கடையிலிருந்து அழுக்குப்படாத ஒருவரை தேர்ந்தெடுப்பதென்பது மிக மிக அரிதான விடயமாகவே அமைந்திருந்தது.

இந்தப் பின்னணியிலே நீண்ட கால அரசியலில் ஈடுபட்டிருந்த போதிலும் இலஞ்ச ஊழலில் ஈடுபடாத, அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாத, கடும் இனவாதத்தை தமது அரசியல் சித்தாந்தமாகக் கொண்டிராத, கட்சி பேதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை சல்லடை போட்டுத் தேடும் முயற்சி ஆரம்பமானபோதே அப்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்குப் பக்கபலமாகவும் இருந்துவந்த மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக சகல தரப்பினரதும் சம்மதத்துடன் களமிறக்கப்பட்டார்.

அந்த தேர்தல் மேடைகளில் பெரிதும் பேசப்பட்ட இலஞ்ச ஊழல் பற்றிய குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் உடனடியாக சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு உண்மையாகவே மக்களின் பொதுச்சொத்தை அவர்கள் சூறையாடியிருக்கின்றார்கள் என்பது சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டு அக்குற்றங்களுக்கான தகுந்த தண்டனை அவர்களுக்கு புதிய அரசினால் பெற்றுக் கொடுக்கப்படும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அது தொடர்பில் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எமது மக்கள் எதிர்பார்த்திருந்த அளவு சிறந்த முறையில் நடைபெறவில்லை என்பதே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு தோள் கொடுத்தவர்களின் விமர்சனமாக இருந்து வருகின்றது. நல்லாட்சி அரசிற்கு மூன்றாண்டுகள் கடந்த பின்னரும் அந்த எதிர்பார்ப்புகள் பூரணப்படுத்தப்படாத பின்னணியிலேயே இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆதங்கம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதியின் விமர்சனத்தின்படி, நல்லாட்சி விரும்பிகளின் எதிர்பார்ப்புகள் சிதைந்து போனதற்கு அவர் காரணமாக அமையவில்லை என்பதும் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு எதிரான பல சூழ்ச்சிகள் திரைமறைவில் நடந்தேறின என்பதும் இன்று ஜனாதிபதியினால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. நமது பிராந்திய நாடாகிய மலேசியாவின் இன்றைய முன்னேற்றத்தின் ஆதிகர்த்தாவாகிய மஹதீர் மொஹமட் இலஞ்ச ஊழல்மிகு கடந்த அரசாங்கத்தை பதவியிலிருந்து விலக வைத்தே அந்நாட்டின் ஆட்சியை இன்று மீண்டும் கைப்பற்றியிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நமது நாடு முகங்கொடுத்திருந்த பிரச்சினைகளுக்கு சமமான பிரச்சினைகளையே மலேசியாவும் முகங்கொடுத்திருந்தது. அதனால் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக மஹதீரின் அரசாங்கம் எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகின்றபோது நமது அரசு காத்திரமான அளவில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவில்லை என்ற குற்ற உணர்வையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்.
அரசியல் ஒழுக்கத்தை இழந்திருந்த ஒரு சமூகத்தில் அந்த அரசியல் ஒழுக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலம் நீதிமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அப்போது ஆட்சி மாற்றத்திற்கு துணைபுரிந்த அனைவரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆயினும் அந்த எதிர்பார்ப்புகளை பெருமளவில் நிறைவேற்ற முடியாது போயுள்ளதென்பதே அந்த ஆட்சி மாற்றத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதங்கமாக இருக்கின்றது.

இலஞ்ச ஊழலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு அரசின் கீழ் இன்று மத்திய வங்கியை மையமாகக் கொண்ட வரலாறு காணாத பாரிய நிதி மோசடி நடந்திருக்கின்றது என்பது கோப் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கின்றது. இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மிகப் பெரிய வங்கி மோசடியாகக் கருதப்படும் பிணைமுறி செயற்பாட்டுடன் தொடர்புபட்ட நிதி மோசடியானது இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தை வெகுவாகப் பாதித்திருப்பதுடன், உள்நாட்டு அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுவரை உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் இப்பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அதற்கும் மேலாக ஜனாதிபதி இப்போது வெளியிட்டிருக்கும் தகவல்களுக்கு அமைய நம் நாட்டின் அனைத்து அரச வங்கிகளையும் தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றிற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அதனை ஜனாதிபதி அவர்களே தடுத்து நிறுத்தியதாகவும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவலும் வெளியிடப்பட்டிருப்பதுடன் கடந்த ஆட்சிக் காலத்தின்போது கடுங்குற்றங்களைப் புரிந்ததன் காரணமாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய பலரையும் அவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்த விடாது தடுத்து நிறுத்தும் சில சக்திகளும் செயற்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல்வேறு தடைகளைத் தாண்டி உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான பங்குதாரிகளே இன்று மத்திய வங்கி பிணைமுறி நிதி மோசடியிலும் அதற்கும் மேலாக அரச வங்கிகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மை இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையை வழங்கி நல்லாட்சியை நாட்டில் நிலைநாட்டுவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சி பீடமேறிய அரசு மூன்றாண்டுகளின் முடிவில் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு நிறைவேற்றும் என்பதே இன்று கேள்விக் குறியாகியிருக்கின்றது.

இந்தப் பின்னணியிலேயே நல்லாட்சிக்காக மக்களின் ஆதரவைக் கோரியதனால் அதற்கான கடப்பாட்டை உணர்ந்திருக்கும் ஜனாதிபதி அவர்கள் இதுவரை காலமும் திரைமறைவில் இருந்து வந்த பல கசப்பான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இரு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கிய பின்னணியில் இதுவரை நாடு சந்தித்து வந்த அத்தனை முக்கியப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி இன்று எதிர்பாராத ஒரு இக்கட்டான நிலையை சந்தித்திருக்கின்றது. இந்த நிலையை எப்படிக் கடக்கப் போகின்றது என்பதிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது. அன்று நல்லாட்சியை உருவாக்குவதற்கு முழுமூச்சாக நின்று உழைத்த சோபித தேரர் “பொது அபேட்சகரைத் தேர்ந்தெடுத்து, அரசாங்கத்தை அமைத்து மத்திய வங்கியைக் கொள்ளையிடுமாறு சோபித தேரர் கூறவில்லை” என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

சுபத்திரன்

0 கருத்துரைகள்:

Post a Comment