Header Ads



மாகந்துர மதுசின் தென்மாகாண பொறுப்பாளர் சுட்டுக்கொலை

மாத்தறை, கம்புருபிட்டிய பிரதேசத்தில், இன்று -25- மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 'திலக்' என அழைக்கப்படும் மானெல் ரோஹண உயிரிழந்துள்ளார்.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த, மாகந்துர மதுஷ் என்பவருக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படும் திலக், வில்பிட்ட ​வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  உயிரிழந்த விடயத்தை  பொலிஸ் ஊடகப் போச்சாளர் ருவான் குணசேகர உறுதிப்படுத்தினார்.

ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் நடமாட்டம், குறித்த பிரதேசத்தில் காணப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த தேடுதல் வேட்டையின்போது, மாத்தறை, அக்குரஸ்ஸ வீதியில் போடப்பட்டிருந்த வீதி தடுப்பை மீறி முச்சக்கரவண்டி சென்ற நிலையில்,  அது வில்பிட்ட பகுதியில் வனப்பகுதிக்குள் நுழைந்ததோடு, முச்சக்கரவண்டியில் இருந்தவர்களால்  விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது விசேட அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் அதிரடிப்படையினரின்  துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கம்புறுபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்துள்ளார். மேலும் ஏனைய சந்தேகநபர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதோடு, அவர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை, விசேட அதிரடிப்படையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில் ரீ-56 ரக துப்பாக்கியொன்றுடன் உயிரிழந்த நபர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர், 'திலக்' எனப்படும் ஹேவா சுதுஹகுருகே மானெல் ரோஹன என்று அடையாளம் காணப்பபட்டுள்ளார்.

உயிரிழந்த மானெல் ரோஹன, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த, மாகந்துர மதுஷ் என்பவரின் வழிகாட்டலில், தென்மாகாணத்தில், பல்வேறு பாதாள உலக செயற்பாட்டை முன்னெடுத்துச் சென்றவர் என, பொலிஸ் ஊடகப் போச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.