Header Ads



“தலதா மாளிகையின் மீது, சத்தியம் செய்பவ​ருக்கே தேர்தலில் ஆதரவளிப்பேன்”


சட்டமா அதிபர் திணைக்களத்தில், அரசியல் கைக்கூலிகளாக இருப்பவர்களுக்குத் தீர்ப்பை மாற்றமுடியுமெனத் தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், “கடந்த அரசாங்கத்திலும், இந்த ஆட்சியிலும் நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.

அந்தப் பாடங்களின் அடிப்படையில், எந்தவோர் அரசியல்வாதியையும் நான் நம்பமாட்டேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

“2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, எந்தவோர் அரசியல்வாதி​யையும் நான் நம்பமாட்டேன். 1959ஆம் ஆண்டு புத்தசாசன ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மதம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக, தலதா மாளிகை மீது சத்தியம் செய்பவர்களுக்கே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஆதரவளிப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார். நாவல வீதி, இராஜகிரியவில் உள்ள, பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று (26) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

“பாதாள குழுக்களைப் பாதுகாத்து, திருடர்களைப் பாதுகாக்கும் இரண்டு முக்கிய அமைச்சர்களும், இவர்களுக்குத் தலைவராக இருப்பவரும், சட்டமா திணைக்களத்தின் அதிகாரிகளும் இணைந்து நீதிமன்றத்துக்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு, நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட இடமளிக்காமல், நீதிமன்றம் ஊடாக அழுத்தங்களைப் பிரயோகித்தே இவ்வாறான துரோகத்தைக் காவி உடைக்குச் செய்துள்ளனரென நாம் எண்ணுகின்றோம்” என்றார்.

“நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை மாற்றும் பலம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாகச் செயற்படுபவர்களுக்கே இருக்கிறது. எனவே, எமது பிரச்சினைகளைத் தெரிவிக்க சீனிகம தேவாலயமும், காளி கோவிலுமே உள்ளது. அங்கு சென்று சிதறுதேங்காய் அடித்துதான், எமது பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும்” என்றார்.  தான் இனியொரு போதும் எந்தவோர் அரசியல்வாதியையும் நம்பப் போவதில்லையென்று தெரிவித்த அவர், “தலதா மாளிகையின் மீது சத்தியம் செய்பவ​ருக்கே, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவளிப்பேன்” என்றார்.

No comments

Powered by Blogger.