Header Ads



முஸ்லிம்களின் நோன்பு பற்றி, பேராசிரியர் சந்திரசேகரனின் அற்புதமான விளக்கம்

இந்த நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் இல்லாமல் இந்த நாட்டில் எந்த அபிவிருத்தியும் ஏற்பட முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளின் இன ஒறுமைப்பாட்டின் அடிப்படையிலும் தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையிலும்தான் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களுக்கான சிநேகபூர்வ ஒன்றுகூடல் ஒன்றை நேற்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் நடத்தியது. 'சமூக நல்லிணக்கத்திற்கு ஊடகவியலாளர்களின் பங்கு' எனும் தலைப்பில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த இப்தார் மற்றும் இராப் போசன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,

தாங்கள் எழுதுகின்ற எந்த விடயமென்றாலும் அது இந்த நாட்டில் ஒற்றுமையையும் மக்கள் மத்தியில் சமூக இணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வோர் ஊடகவியலாளனும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் இனப் பிரச்சினை ஏற்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு பிரதானமான காரணம் ஊடகங்கள் வெளியிடுகின்ற செய்திகளும் கருத்துக்களும் கட்டுரைகளுமாகும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஒவ்வோர் ஊடகமும் ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு சமூகமும் இந்த நாட்டினுடைய அபிவிருத்திக்கு உதவ வேண்டுமென்றால் நிச்சயமாக சமூக இணக்கப்பாட்டில் அக்கறை செலுத்த வேண்டும்.

நாங்கள் நோன்பினுடைய மாண்பு மகிமை என்ற விடயத்தை எடுத்து நோக்குகின்றபோது ரமழான் என்பது நோன்பு நோற்கும் காலம் மட்டுமல்ல. ரமழான் காலத்தில் தியாகம் வளர்கிறது தாராள மனப்பான்மை வளர்கிறது தன்னைத்தானே அறிகின்ற உணர்வு வளர்கின்றது. முஸ்லிம் அல்லாத சமூகங்களில் ஆன்மிக காரணங்களுக்காக வழங்கப்படுகின்ற விடுமுறை நாட்களில் நிறைய கேளிக்கைகளும் வணிக நிகழ்வுகளும் இருக்கின்றன. ஆனால், முஸ்லிம் உலகில் ரமழான் காலம் முழுமையாக ஆத்மிக நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ரமழான் காலத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்று பசியையும் தாகத்தையும் மிகப் பொறுமையுடன் அனுபவிப்பதால் சாதாரண வறிய மக்கள் எவ்வாறு பசியால் வாடுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.

முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் குடும்ப உறவுகளையும் சமூக உறவுகளையும் பேணி நடக்கிறார்கள். இந்த உறவானது சகல சமூகங்களுடனும் சிறந்த உறவை பேணிக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு நோன்பு பரிந்துரைக்கப்படக் காரணம் தக்வாவை கற்றுக்கொளவதற்காக என்று அல்குர்ஆனிலே ஒரு வாக்கியம் இருக்கிறது. தக்வா என்றால் என்ன? அந்த அரபிச் சொல் இறை உணர்வைக் குறிக்கிறது. இறை அச்சத்தையும் சுய கட்டுப்பாட்டையும் குறிக்கிறது.

நாம் இன்று பல கஷ்டங்களை எதிர்கொள்வதற்கு பேராசைகள்தான் காரணம். எமது பேராசைகளெல்லாம் குறைத்து தூய்மையையும் எளிமையையும் எங்களுடைய வாழ்க்கையில் செயற்படுத்துவதற்கு நோன்பு எங்களுக்கு உதவுகிறது.

நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் ஆன்மிக உணர்வுடன் இறைவனை நெருங்குகிறார்கள். தமது வாழ்க்கையில் தமக்கு கிடைத்த எல்லாமே இறைவனின் அருளால் வழங்கப்பட்டது என்ற உணர்வை அவர்கள் பெறுகிறார்கள். தமது செல்வத்தில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற ஒரு சிந்தனை இஸ்லாத்திலே இருக்கிறது. தான தர்மங்கள் செய்வதில் ஒருவரின் செல்வம் குறைந்து விடுவதில்லை என அண்ணல் நபி கூறியுள்ளார்.

அண்மைக் காலத்திலே நோன்பு பற்றிய உடலியல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான ஆய்வுகளில் நான் ஈடுபட்டபோது உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நோன்பு எவ்வளவு பயனுடையது என்பதை பற்றி அறிந்து கொண்டேன். மொரோக்கோவில் உள்ள கஷாப் லங்காவில் நோன்பின் ஆரோக்கியம் என்ற ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலே பல உடலியல் நன்மைகளும் உளவியல் நன்மைகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உலகியல் நன்மைக்காக முஸ்லிம்கள் நோன்பு நோற்பதில்லை. அவர்கள் ஆன்மிகக் காரணங்களுக்காகவும் இறை நெருக்கத்துக்காகவுமே நோன்பு நோற்கின்றனர் என தெரிவித்தார்.

2 comments:

  1. We need thousands of persons like Prof Chandrasekeram to wipe out the black dots in the Hindu community which was made by persons like Schchithanandam. Good luck Prof

    ReplyDelete
  2. "ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)."
    (அல்குர்ஆன் : 2:185)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.