June 05, 2018

ஜம்மியத்துல் உலமா சகல இனத்திற்கும் சேவையாற்றும் ஒரு, அமைப்பு என ஆணித்தரமாகக் கூறுகின்றேன் - றிஸ்வி முப்தி


அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமா, நாட்டின் நல்லிணக்கத்திற்காக இனம், மதம், மொழி பாராது சேவையாற்றி வருவதுடன், முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய அனைத்து மதங்களுடனும் இணைந்து செயற்படும் ஒரு அமைப்பு என, அ.இ.ஜ.உ. தலைவர் அஷ் - ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். றிஸ்வி தெரிவித்தார்.

   அ.இ.ஜ.உ. சமூக சேவைக் குழு ஏற்பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் ஒன்று கூடல் நிகழ்வு, கொழும்பு - கொள்ளுப்பிட்டி, அல் மண்ட்ஸ் உணவகத்தில், (04) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போதே றிஸ்வி முஃப்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது, 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  பின் வெற்றிக்குக் காரணம் மீடியா. அவரை உசுப்பிவிட்டதும் மீடியாதான். மீடியா இல்லாவிட்டால், அவர் இந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்க மாட்டார். ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவருக்கு நிறையவே கிடைத்திருந்தது. இதிலிருந்து ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதைப் புரிந்துகொள்கின்றோம். 
ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் ஒரு விடயத்தை சரியான முறையில் ஆராய்ந்து, அந்த செய்தியை உறுதிப்படுத்திய பின்னரே, அவற்றை வெளியிட வேண்டும். இதுவே, ஒரு ஊடகவியலாளருக்குரிய சிறந்த பண்பும், ஏனையோருக்கு சிறந்த முன்மாதிரியுமாகும். 

   இன்றைய நவீன உலகில் ஊடகங்கள், பெரும் பங்களிப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் எம்மால் மறுக்கவோ மறைக்கவோ  முடியாது. ஆனால், முஸ்லிம்களுக்கென தனியானதொரு ஊடகம், மும்மொழியிலும் வெளியிடப்பட வேண்டும். இதன்மூலமே, எம்மத்தியில் காணப்படும் கால்ப்புணர்வு, கசப்புணர்வு என்பவற்றை அகற்றிக்கொள்ள முடியுமாவதோடு,  சகல சமூகங்களுக்கு மத்தியிலும்  புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றையும் மென்மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும். அத்துடன், பெரும்பான்மைச் சமூகங்கள் மத்தியில் முஸ்லிம் சமூகம் தொடர்பில், ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட இது வழி வகுக்கும். 

   நமது ஜம் - இய்யா, இந்நாட்டு முஸ்லிம்களுக்கு மாத்திரம் சேவை செய்யக்கூடிய ஒரு அமைப்பு என, பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில், இந்த அமைப்பு அவ்வாறல்ல. இந்நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்றும் ஒரு அமைப்பு என்பதை, இவ்விடத்தில் ஆணித்தரமாகக் கூறுகின்றேன். குறிப்பாக, எமது அமைப்பு முஸ்லிம்களுக்கு சேவை செய்வதைப் போன்று, ஏனைய பிற மத சகோதரர்களுக்கும் நிறையவே பலதரப்பட்ட சேவைகளைச் செய்து வருகின்றது. இனிமேலும் அச்சேவைகள் தொடரும் என்பதையும் உறுதிபட இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

   நாட்டில் எத்தனையோ அனர்த்தங்கள் ஏற்பட்டன. இந்த அத்தனை அனர்த்தங்களிலும் ஜம் - இய்யா பங்கு கொண்டு இன, மத மொழி சார்பின்றி உதவிகளை வழங்கியுள்ளன. இதில் நாமும், எமது குழு உறுப்பினர்களும் களமிறங்கி, முடியுமானவரை ஒத்துழைப்புக்களை நல்கியுள்ளோம்.

   சிங்கள மொழிப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். குறிப்பாக, கொழுப்புப் பிரதேச பாடசாலைகளிலேயே  இவ்வாறான நிலைமைகளைக் கூடுதலான அளவில் காணலாம். நாம் இவ்வாறான பாடசாலைகளிலும் எமது சமூக மாணவர்களுக்கு மாத்திரமின்றி, ஏனைய சமூக மாணவர்களுக்கும் ஒன்றுபோல் உதவி ஒத்தாசைகளைப் புரிந்து வருகின்றோம் என்றார்.

   சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்கு கொண்ட இவ் இப்தார் ஒன்று கூடல் நிகழ்வில், ஜம் - இய்யாவின் உப செயலாளர் மெளலவி எஸ்.எம். தாஸிம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோரும் கருத்துக்களை முன் வைத்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )0 கருத்துரைகள்:

Post a Comment