Header Ads



கிழக்கில் தமிழர் நிலை பரிதாபகரமாகியுள்ளது - விட்டுக்கொடுத்தே எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் - விக்கினேஸ்வரன்

-பாறுக் ஷிஹான்-

ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும். தம்பி பிரபாகரன் அவர்கள் தனது இயக்கத்திற்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் பலவற்றைக்கூட ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார். அப்போது கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகள் சில கொள்ளை முரண்பாடுகளால் இன்று வெளியிலே நிற்கின்றார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஏற்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையுஞ் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உரைகள் அடங்கிய “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24.06.2018) நடைபெற்றது. நிகழ்வில் ஏற்புரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அவரது உரையின் சாராம்சம் வருமாறு,

விட்டுக் கொடுத்தே கிழக்கில் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்

சில தினங்களுக்கு முன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இது காறும் இருந்து வந்தவர்கள் இப்பொழுதும் இருந்து வருபவர்கள் கிழக்கு மாகாணத்தில் விட்டுக்கொடுத்ததால் ஏற்பட்ட கெடுதிகள் பற்றி எமக்கறிவித்தார்கள். நாம் வலுவாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நாம் பலம் அற்ற நிலையில் இருந்து கொண்டு விட்டுக்கொடுப்பது எம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும் என்றார்கள். கிழக்கு மாகாணத்தின் தற்போதைய தமிழர் நிலை பரிதாபகரமாக மாறியிருப்பதை எடுத்துரைத்தார்கள். ஆகவே நாம் யாவரும் கூட்டுச் சேர வேண்டும்; ஒன்றுபட வேண்டும் எனும் போது அது கொள்கை அடிப்படையிலேயே நடைபெறவேண்டுமே ஒளிய கொள்வோனுக்குக் கொத்தடிமையாகும் விதத்தில் நடைபெறக் கூடாது.

தமிழ் மக்களின் அரசியல் பரிதாபகரமானதாக மாறிவிட்டது

தமிழ் மக்களின் அரசியல் நிலை இன்று பரிதாபகரமானதாக மாறியுள்ளது, கட்சி ரீதியாக நாம் பிரிந்துள்ளோம். ஆனால் எமது பல்வேறு கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணும் உள்ளடக்கங்களில் உள்ள முரண்பாடுகள் மிகச் சொற்பமே. 2013ம் ஆண்டு வெளிவந்த எங்கள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாக வைத்தே நான் எனது கருத்துக்களைத் தெரியப்படுத்தி வந்துள்ளேன். அரசியல் யாப்புப் பற்றிய எமது வடமாகாணசபையின் முன்மொழிவுகளும் தமிழ் மக்கள் பேரவையால் அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்ட முன்மொழிவுகளும் அடிப்படையில் பலத்த முரண்பாடுகளைக் கொண்டிருக்க வில்லை. அவை எமது 2013ம் ஆண்டின் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டவையே. பின் எதற்காக மாறிய கொள்கைகள் உடையவர்களுடன் சேருகின்றோம், ஒரே கொள்கையுடையோருடன் முரண்டு பிடிக்கின்றோம்? இங்கு தான் தமிழ் மக்களின் தனிப்பட்ட மனோநிலை வெளியாகின்றது. அடிப்படையில் நாங்கள் ஆணைக்குக் கட்டுப்பட ஆயத்தமாய் உள்ளோம். ஆனால் அயலவர்களை ஆதரித்து அரவணைத்து ஆணவத்தை அடக்கி வைத்து பயணம் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம்.
இது இங்கு மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் மக்களிடையே காணும் ஒரு குணாதிசயம். தன்னைவிட தன்னினத்தவன் எவனும் தகைநிலையடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். அதனால் மாண்பு மிக்க எமது இனம் சீர்குலைந்து போவதையுஞ் சிறப்பிழந்து போவதையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் கல்வி, கலாசாரம், சூழ்நிலை, உடல்நிலை, அனுபவங்கள் போன்ற பலவற்றின் ஊடாகத்தான் வாழ்க்கையைப் பார்க்கின்றோம். இதைத்தான் காலஞ்சென்ற தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் “We are all conditioned human beings” என்றார். அதாவது நாங்கள் யாவரும் சூழல் பலவற்றால் பாதிக்கப்பட்ட மனோநிலையில் வாழ்பவர்கள் என்றார். இதைப்புரிந்து கொண்டால் எம்மால் சேர்ந்து வாழ முடியும். போரினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் எண்ணங்களும் பார்வைகளும் தம்மை அந்த நிலைக்கு உள்ளாக்கியவர் மேலேயே கோபமாய் மாறியிருக்கும். மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்ற ஒருவர் குறைபாடுள்ள தனது அறிவின் மூலமாகத்தான் உலகைப் பார்க்கின்றார். உயர் சிந்தனைகளோ உயரிய கொள்கைகளோ அவரை அதிகம் ஆட்கொள்ள மாட்டா. ஆனால் அவருக்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்த உரிமையுண்டு.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் வன்முறைதான் வளமான ஆயுதம் வாழ்க்கைக்கு, என்பார்கள்.
என் சிங்கள நண்பர் ஒருவர் பிரதி மந்திரியாக 1977ல் நியமிக்கப்பட்டார். அவரைப்பாராட்டிய பின்னர் “அதிகாரம் உன் கைக்கு வந்துவிட்டது. அடுத்து என்ன செய்யப்போகின்றாய்?” என்று கேட்டேன். உடனே அவர் தேர்தலுக்கு செலவழித்த பணம் யாவற்றையும் மீளப்பெறுவதே தனது இலட்சியம் என்றார். அப்பொழுதிருந்தே பதவியை வைத்து அவர் நன்றாக உழைத்தார். தேர்தல் செலவுகளுக்கும் மேலாகப் பணம் ஈட்டினார். பின்னர் அவர் ஜே.வீ.பி யினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல்த்தான் அரசியல் என்பது ஒரு வணிகம் என்ற நிலைப்பாட்டில் வளர்ந்த ஒருவர் அரசியலை வணிகமாகவே பார்ப்பார்;. தனக்கு அரசியலால் என்ன இலாபம் கிடைக்கும் என்றே அவர் பார்ப்பார். மக்கள் அவருக்கு ஒரு பொருட்டல்ல.

வெவ்வேறு மனோநிலைகள் கொண்ட இவர்கள் யாவரையும் ஒன்றிணைத்துச் செல்வது அவ்வளவு இலேசான காரியமல்ல. ஆனாலும் இன்றைய எமது தமிழ் மக்களுக்கு ஒற்றுமை அவசியம். ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம். உயரிய கொள்கைகளை உள்ளடக்கி அவற்றின் அடிப்படையில் சுயநலம் களைந்து முன்னேறுவதே இன்று தமிழ் மக்களுக்கிருக்கும் ஒரேயொரு அரசியல்ப்பாதை என்று கூறி இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெற்றுக் கொள்கின்றேன். – என்றார்.

1 comment:

Powered by Blogger.