Header Ads



ஒலுவில் பல்கலைக்கழகத்திலிருந்து, ஒரு மாணவியின் குமுறல்

ஓரிரு நாட்களாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பற்றிய செய்தியொன்று நாடு பூராகவும் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவியாக இருந்து கொண்டு அந்த செய்தியை வாசிக்க நேர்ந்த போது, அடுத்து என்ன செய்யலாம் என்கிற சிந்தனை கூட எழாத அளவுக்கு ஒழுக்கவீனமாக இருந்தது அந்தக் குற்ற அறிக்கை. இறைவனின் நாட்டம், இறைவன் எங்களை சோதிக்கிறான். நிச்சயமாக, அவன் நேசிப்பவர்களையே சோதனைக்குள் ஆட்படுத்துவான். அவனுக்கே எல்லாப் புகழும்.

இலங்கையின் அரச பல்கலைக்கழக வரிசைகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பின்னால் நிற்கிறது; பின்தங்கி நிற்கிறது; இனத் துவேஷம் காட்டுகிறது; முஸ்லிம்களுக்கு பக்கசார்பும் பாரபட்சமும் காட்டுகிறது; மாணவ உரிமைகளை அத்துமீறுகிறது என்று பல நாட்களாகவே குற்றச்சாட்டுக்களையும் குறைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறது இந்த சமுகம். பரவாயில்லை. அவர்கள் பார்வையில் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். புதிதாக தென்கிழக்கின் விரிவுரையாளர்கள் மீதும் மாணவிகள் மீதும் அவதூறையும் குற்றச்சாட்டையும் அமைச்சர் ஒருவர் திணித்ததன் பின், இனியும், நாங்கள் நாக்கறுக்கப் பட்டவர்களாக இருக்க வேண்டுமானால், உண்மையில் அந்த அவதூறுகளுக்கு பதிலாக எங்கள் நாக்களை அறுத்து விட்டே போயிருக்கலாம்.

"ஒலுவில் பல்கலையில் மாணவிகள், சில பாடங்களுக்கு பாலியல் லஞ்சங்களை வழங்காவிட்டால், அப்பாடங்களில் அவர்களால் சித்தியடைய முடியாது…"
என ஆரம்பிக்கிற அந்த அறிக்கைக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் சார்பாக என்னிடம் ஒரேயொரு கேள்வி இருக்கின்றது.

இந்தக் குற்ற அறிக்கையின் பின்னராக, நீங்கள் எங்கள் பல்கலைக்கழக மாணவிகளுக் தேடித் தரப்போவதும் நாடுவதும் என்ன, நியாயங்களையா…?
அல்லது அவமானங்களையும் தலைகுனிவுகளையுமா…?

என் தரப்பில் கூறப்போனால், ஒட்டு மொத்த முட்டாள்தனத்தின் உச்சகட்ட அறிக்கையாகவே இதனை நான் பார்க்கிறேன். என்றோ ஒரு நாள், யாரோ ஒரு விரிவுரையாளரால், ஒரு பாடம் தொடர்பாக ஒரு சகோதரியிடம் பாலியல் லஞ்சம் கேட்கப் பட்டது நாமறிந்த விடயமேயாகும். ஆனாலும், ஆறேழு மாதங்களுக்குப் பின்னராகவே இது பற்றி நினைவு தெரிந்த அவ்வமைச்சருக்கு சில அறிக்கைகளை நாங்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

எம் பல்கலைக்கழகத்தில் கடந்த வருடமே அதற்கான ஆர்ப்பாட்டமும் முறைப்பாடுகளும் அன்றிருந்த யூனியன் மற்றும் மஜ்லிஷ் மூலமாக முன்வக்கப் பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதற்கான விசாரணைகள் தொடர்கிறதாகவும் தகவல்கள்  தெரிய வந்தன. அதற்கான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, ஒவ்வொரு தனி மாணவிகளுமே குறித்த சகோதரிக்கு நடந்த அத்துமீறலைத் தனக்கு நடந்தது போல் கருத்திற் கொண்டு முழுமூச்சாக கோஷம் எழுப்பிய உண்மைகளையும் நினைவு படுத்துகிறோம். கூடவே, சகோதர ஆண் மாணவர்களும் எங்களுக்காக வழங்கிய ஆதரவுகளையும் உரிமைக் குரல்களையும் மறக்கவும் முடியாது.

'வேண்டாம்… வேண்டாம்…
வேண்டாம்… வேண்டாம்…
தன்மானம் காக்காத கல்வி வேண்டாம்…'
என, தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற, கூவிய கூவல்களில் என் குரலும் இருந்தது என்பதாலேயே இதனை உறுதிப் படுத்துகிறேன். ஆர்ப்பாட்டத்தில் அன்று பேரணியுடன் கால் கடுக்க சுடும் பாதையில் நடந்தாலும் உரிமைக் குரலுக்குக் கிடைத்த நிம்மதியை, ஒரே நிமிடத்தில் இழுத்து அறைந்தது இந்தக் குற்ற அறிக்கை. வேதனை என்னவென்றால், தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகளாகிய எம்மிடமே இச்செய்தி உண்மையா, பொய்யா எனப் பலராலும் முகத்திலடித்தாற் போல் வினவப்படுவதுதான்.
அல்லாஹு அக்பர்.

இவற்றையெல்லாம் நோக்கும் போது, சில சம்பவங்களை நினைவு படுத்தி சிந்திக்கச் சொல்லக் கடமைப் படுகிறேன். ஜம்மு காஷ்மீரில் ஒரு ஆஷிஃபா கொல்லப் பட்டாள், 
வடக்கில் ஒரு வித்யா கொல்லப் பட்டாள். டெல்லியில் மருத்துவ மாணவியும் கொல்லப் பட்டாள். சிறுமி சேயாவும் கொல்லப் பட்டாள். இன்னும் பல பொது இடங்களிலும் வேலைத் தளங்களிலும் பாலியல் லஞ்சங்கள் கேட்கப் படத்தான் செய்கின்றன. மத அனுட்டானத் தலங்கள் மதிப்பிழக்கும் படி மனிதர்கள் நடக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக, ஏனையவர்கள் மீதும், ஒட்டு மொத்த நிர்வாகத்தின் மீதும் நின்று கொண்டு சம்பவ இடங்களை விமர்சிப்பதும் குற்றம் சாட்டுவதும் உகந்ததாகப் படவில்லை. ஒரு நாள் தென்கிழக்கில் நடந்த அசாதாரண சம்பவத்துக்காக, இன்றைய நாட்களில், மொத்த மாணவிகளையும் விரிவுரையாளர்களையும் விரல் நீட்டிக் குற்றம் சுமத்துவது ஏற்றுக் கொள்ள முடியாததுவே.

நாளை நாங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகி, பல இடங்களுக்கும் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. திருமணம் முடித்து, சமுகத்தில் பல பெண் கதாபாத்திரங்களை ஏற்று வாழ வேண்டி இருக்கிறது. பட்டதாரி என்ற ரீதியில், சமுகத்துக்குத் தலைகாட்டி வழிகாட்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், தென்கிழக்குப் பலகலைக்கழக மாணவிகளின் நிலை இதுதான் என எம்மையும் எம் ஒழுக்கத்தையும் பல்கலைக்கழகத்தையும் தலைகுனியச் செய்ததில் குறித்த அமைச்சர் கொஞ்சம் சிந்தித்து செயற்பட்டிருக்கலாம். 

எதையும் உண்மைப்படுத்திய பின்னரேயே அது தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டுமென்கிற சாதாரண விடயத்தைக் கூட புத்திக்குள் உணராத அமைச்சர், சம்பவ இடத்தில் இவ்விடயம் தொடர்பாக வேறு முறையில்  அணுகியிருக்கலாம்; வேறு நல்ல விதமாக விளக்கியிருக்கலாம்.

எது எவ்வாறிருப்பினும், எம் மாணவிகளதும் கண்ணியமாய் நடந்து கொள்ளக் கூடிய விரிவுரையாளர்களதும் மற்றும் பல்கலைக்கழகத்தினதும் நற்பெயருக்கு 
பங்கம் ஏற்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்திற்காக எதிர்காலத்தில் வன்மையாக எதிர்ப்புத் தெரிவிப்போம் என்பதை தெரிவிக்கிறோம். ஆசிரியம் மற்றும் பெண்கள் விடயத்தில் குறைகளை ஏற்படுத்துபவர்கள் இதன் மூலம் படிப்பினைகள் பெற வேண்டும் என்பதையும் கருத்தி்ற் கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ்…

ஒலுவில் பல்கலையில் இருந்து,
ஒவ்வொரு மாணவி சார்பாகவும்…
ஒழுக்கத்தை நேசிப்பவளாகவும்…

10 comments:

  1. People are trouble makers in this part of the world.
    Give priority to talent and qualification. .not to regionalism.

    ReplyDelete
  2. Someone should translate this article into Sinhala and publish on social media.

    ReplyDelete
  3. உள்ளத்தில் ஈமானின் வௌிச்சத்திலும், மனஉறுதியுடனும் இந்த ச கோதரி தெரிவிக்கும் கருத்துகளுக்கு இந்நாட்டின் சாதாரண குடிமகன் என்ற வகையில் எமது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறோம். நிச்சியமாக பொறுப்புள்ள ஆட்சியாளர்கள் இந்தவகையில் கீழ்த்தரமாக கருத்துத் தெரிவித்து முக்கியமான கல்விநிறுவனத்தையும் அதன் பிரதான பங்காளர்களாள மாணவ மாணவிகள், விரிவுரையாளர்கள்,நிர்வாகிகள் அனைவரையும் இக்கட்டான நிலைமைக்குத்தள்ளும் இத்தகைய பொறுப்பற்றவர்களின் நடத்தையை நாடாளவிய ரீதியில் குறிப்பாக அனைத்து பல்கழைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புக் கோசங்களையும் ஏற்பாடு செய்து ஆட்சியாளர்களின் நிலைப்பாடுகளைக் கலங்கவைத்து அவர்கள் தவறைப்புரிந்து பகிரங்க மன்னிப்புக் கோரும்வகையில் உங்கள் ஏற்பாடுகளை எடுத்துச் செல்லுமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  4. Y u can't take a action against minister?????

    ReplyDelete
  5. Pls publish this in all three languages ij all social media

    ReplyDelete
  6. Good article Sister, May Allah Bless u. But I have one Question Why the Institutions (University, Schools, Mosques, Political parties and etc.) run by Muslims are corrupt? Where is our Cultural and Religious Values? What happened to them? Is Islam confined to rituals and practiced in the Mosque?

    ReplyDelete
  7. அருமை. வரவேற்கிறோம்

    ReplyDelete
  8. இந்தக்குமுறல்கள், கட்டுரைகள் எல்லாம் சரிப்பட்டு வராது ஒலுவில் வளாக மாணவ மாணவிகள் அனைவரும் இந்தக் கீழ் சாதி அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வைப்பதே சரியான முறையாகும். முள்ளை முள்ளால் எடுப்பது தான் சிறந்த வழி.

    ReplyDelete
  9. SLMC இன் ஸ்தாபகரால் உருவாக்கப்பட்ட இக்கலாசாலையை அசிங்கப்படுத்தும் அமைச்சருக்கொதிராக SLMC யின் இன்னாள் தலைவரால் இது வரைக்கும் வாய் திறந்த மாதிரி தெரியல்ல. உண்மையான தலைவனாக இருந்தால் ஒரு ரோசக்காரணாக இருந்திருந்தால் அவன் பேசும் போது காலில் கிடந்ததை கழற்றி அவன் சொத்தையில் வீசி இருப்பான்.

    ReplyDelete
  10. உங்கள் ஆக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம், அதாவது சிலரால் நடந்த நடக்கும் தவருக்கு ஒட்டுமொத்த மாணவர்களையும் ஆசாங்களையும் பலி சொல்ல முடியாது. ஆக, இங்கும் சில செக்ஸ் வக்கிரம் பிடித்த மாணவர்களும் இருக்கிறார்கள். கண்ணூடாக பார்த்த சாட்சிகளுமுண்டு. கடற்கரையோரம் அவர்கள் பன்னிய சில்மிசங்கள் சமுக ஒழுக்கத்தை மறந்து கட்டுப்பாட்டை இழந்தார்கள்.

    எனினும், இந்த அமைச்சருக்கு எதிராக நாடளாவிய மட்டத்தில் ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்து எதிர்புக்களை வெளிப்படுத்துங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.