Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 5 பேர் தயார்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் பலர் இருந்தாலும் அவர்களில் சமல் ராஜபக்ஷவையே தாங்கள் சிறந்தவராக பார்ப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து துமிந்த திஸாநாயக்கவை நீக்கியதைத் தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஒரே நிலைப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமாக இருக்குமென தாம் கருதுவதாகவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,

துமிந்த திஸாநாயக்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியமை பெரும் வெற்றியே. அவரை நீக்கியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஒரே நிலைப்பாட்டுக்குக் கொண்டு வர முடியுமாக இருக்கின்றது. பிரதி சபாநாயகர் விடயத்தில் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயை ஆதரிக்குமாறு இவர்கள் இருவரும் தமது குழுவினருக்கு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் செயலாளர் பதவியில் இருக்கும் போது செய்தவற்றை தற்போது தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்துகொண்டு செய்வதற்கு துமிந்த திஸாநாயக்க முயற்சிப்பாராக இருந்தால் அவர் அந்தப் பதவியையும் இழக்க வேண்டி வரும்.

இதேவேளை 2020 இல் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராவதற்கு பலர் இருக்கின்றனர். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , சமல் ராஜபக்ஷ , பசில் ராஜபக்ஷ , எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் சமல் ராஜபக்ஷவே சிறந்த வேட்பாளர். வாசுதேவ நாணயக்கார கூறியதைப் போன்று விரிவான கூட்டணியொன்றை அமைப்பதற்கு இணங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக வர வேண்டுமென்றால் அவர் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப்பெற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரானவராகவும் இருக்க வேண்டும். யார் வேட்பாளராக இருந்தாலும் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.