Header Ads



முஸ்லிம்கள் மீதான, சுய விமர்சனம் (பாகம் -1)

-யூசுப் பின் பரகத்-

பேரன்புமிக்க உடன் பிறப்புக்களே...!

அஸ்ஸலாமு அலைக்கும்,

புனித ரம்ழான் முற்றுப் பெற இன்னும் சில நாட்களே எஞ்சி இருகின்ற இந்த நேரத்தில் சமகால நாட்டு நடப்புக்கள், நிகழ்வுகள் தொடர்பாகவும் குறிப்பாக நமது சமூக நிலமைகள், செயல்பாடுகள் தொடர்பாகவும் சில வார்த்தைகளை உங்களுடன் திறந்த மனதுடன் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் தற்போது தனிந்திருப்பது போல் தோன்றினாலும் முன்னெப்போதுமில்லாத வகையில் அது பல்வேறு மட்டங்களில் நடந்து வருகின்றது என்பதுதான் உண்மை. 

இந்த நாட்டில் இஸ்லாம் அறிமுகமாகி 1000 வருடங்களுக்கு மேலாகின்றது என்பதும், அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே இஸ்லாத்திற்கு பின்புலமாக இருந்த அரேபிய பாரசீக இனங்களின் தொடர்புகளும் உறவுகளும் இந்த நாட்டுடன் இருந்து வந்திருக்கின்றன என்பதும் வரலாற்றில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. 

எனவே இன்று இந்த நாட்டில் வாழ்;கின்ற சிங்கள, தமிழ் சமூகங்களைப் போன்றே முஸ்லிம்களும் வந்தேறு குடிகளே. இந்த நாட்டில் இருந்த இயக்கர் நாகர்களைத் தவிர்ந்த அனைத்து இனங்களும் பல்வேறு காலப் பகுதிகளில் இங்கு கால் பதித்தவர்கள் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற விடயம்.
இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்களவர்கள் தங்களை ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்றும் தமிழர்கள் திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருந்து வருகின்றார்கள். அதே போன்று இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களை அரேபியர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்வதில் விருப்புடையவர்களாக இருக்கின்றார்கள் என்றுதான் அவதானிக்க முடிகின்றது. ஐரோப்பியரின் வருகையுடன் இந்த நாட்டில் கிருஷ்தவ சமூகமும் செல்வாக்குப் பெறுகின்றது. அது இன்று சிங்கள தமிழ் சமூகங்களுடன் இரண்டரக் கலந்து விட்டிருக்கின்றது. 

எனவே இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்களவர்களில் அதிகப்படியானவர்கள் பௌத்தர்களாகவும் தழிழர்களில் அதிகமானவர்கள் இந்துக்களாகவும் வாழ்ந்து வருவதுடன் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கிருஷ்தவர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அவர்கள் என்ன இனத்தவர்களாக இருந்தாலும் இஸ்லாமியர்களாகவே இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்.

நாம் மேற்சொன்ன விடயங்கள் இலங்கையில் வாழ்கின்ற பிரதான சமூகங்கள் தொடர்பிலான ஒரு சிறிய குறிப்பாகும். 

இப்போது இந்த சமூகத்தினர் மத்தியில் உறவுகள் எந்த நிலையில் இருந்து வருகின்றது என்பதனை சுருக்கமாகப் பார்ப்போம். தெற்கில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த இரு சமூகங்களினதும் இனம், மதம் கலாச்சாரப் பாரம்பரியங்கள் தனித்துவமாக இருந்து வருகின்றன. அவர்கள் வாழ்கின்ற நிலப்பரப்புக்களும் விசாலமாக இருப்பதால் அந்தந்தப் பிரதேசங்களில் அவர்கள் தங்களது இருப்பையும் மேலான்மையையும் மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முனைந்து வருகின்றார்கள்.
இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தொடர்பாக இப்போது சற்று ஆழமாகப் பார்ப்போம். இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களில் 70 சத வீதமானவர்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களுடன் தென் பகுதியில் கலந்து வாழ்கின்றார்கள். அதே நேரம் 30 சதவீதமான முஸ்லிகள் கிழக்கில் தமிழர்களுடன் கலந்து வாழ்கின்றார்கள். அதில் அம்பாறை மாவட்டம் முஸ்லிம் சமூகத்தையும் நிலப்பரப்பையும் அதிகமாகக் கொண்ட ஒரு மாவட்டமாக இருந்து வருகின்றது.

எனவே நாம் விரும்பியோ விரும்பாமலோ தெற்கில் வாழ்கின்ற 70 சதவீதமான முஸ்லிம்கள் பெரும்பன்மையான சிங்கள சமூகத்துடன் இணைந்தே வாழ வேண்டி இருக்கின்றது அதே போன்று கிழக்கு மற்றும் வடக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அங்குள்ள பெரும்பான்மை தமிழ் மக்களுடன் இணைந்து வாழ வேண்டி இருக்கின்றது.

இப்படி சிங்கள, தமிழ் சமூகத்துடனும் நாம் சிறுபான்மையாக வாழ்கின்ற போது தமது தனித்துவத்தையும் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள முனைக்கின்ற போது பிற சமூகங்களுடனான உறவும் முரண்பாடுகளும் ஏற்பட இடமிருக்கின்றது. இந்த உறவும் முரண்;பாடுகளும் இன்று எந்த நிலையில் இருந்து வருகின்றது என்பதனை இப்போது பார்ப்போம்.

வரலாற்றுக் காலங்களில் இந்த நாட்டில் இருந்த முஸ்லிம்களை சிங்கள மக்கள் குறிப்பாக ஆட்சியாளர்கள்-மன்னர்கள் ஒரு விருந்தாளிபோல் நடாத்தி வந்திருக்கின்றார்கள்.

பிற்காலத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாட்டில் சற்று அதிகரிக்க இங்கு அவர்களின் வர்த்தக மேலான்மை இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு குறிப்பாக அந்த சமூகத்தின்  வர்த்தக சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. இந்த அச்சமும் வர்த்தகப் போட்டியும்தான் 1915 ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான முதல் கலவரத்தை இங்கு ஏற்படுத்தியது.
இப்போது நாம் எமது பிரதான பேசு பொருளுக்குள் பிரவேசிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இன்று இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான உறவுகள் சுமுகமானதாக இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்து வருகின்றது. எனவேதான் சமூகங்களுக்கிடையிலான வன்முறைகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நல்லுறவு கெட்டுப்போனதன் பின்னணிகள் பற்றி நிறையவே கதைகள் காரணங்கள் இருந்தாலும் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமது தரப்பில் இந்த நல்லுறவுகள் பலயீனமடைவதற்கும் கெட்டுப்போவதற்கும் எந்தவகையில் பங்காளிகளாக இருந்த வந்திருக்கின்றார்கள் என்பது பற்றி ஒரு சுயவிமர்சனம் அல்லது மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நாம் நமது சமூகத்திற்கு அழைப்பு விடுகின்றோம். 

இந்த நாட்டில் இன ஐக்கியம் கெட்டுப்பேவதற்கும் பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்களை பிழையான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் சில நியாயங்கள் இருக்கின்றன. இது பற்றி இங்கு பேசுவதுடன் இந்த தவறுகள் மீண்டும் நமது தரப்பில் நிகழாதிருக்க நாம் ஒவ்வொருவரும் எப்படிப் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதனைப் பற்றி சிந்திப்பதற்குமான ஒரு முயற்சியாக இது வெளியிடப்படுகின்றது.

இந்த மதிப்பீடுகளை நமது சமூகம் தனிநபர், குடும்ப, கிராமிய பிரதேச, தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றது என்பது எமது கருத்தாக இருந்து வருகின்றது. இந்த மதிப்பீடு காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது. இப்போது அது பற்றிய சில குறிப்புக்களை நாம் இங்கு முன்வைப்பதுடன் உங்கள் அவதானத்தை இது விடயத்தில் செலுத்தி இந்தப் பணி வெற்றிகரமாக நிறைவு பெற தங்களது மேலான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கின்றோம்...

தொடரும்...

No comments

Powered by Blogger.