Header Ads



12 ஆயிரம் ஏக்கர் பயிர்களை நாசம்செய்த சூறைக்காற்று – நாளை வரை தொடருமாம்

பல்வேறு பகுதிகளிலும் நேற்று 70 கி.மீற்றருக்கும் அதிக வேகத்துடன் வீசிய சூறைக் காற்றினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் மிக மோசமான சூறைக்காற்று வீசியது. 70 கி.மீற்றருக்கும் அதிகமான வேகத்துடன் வீசிய சூறைக்காற்றினால், மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.

சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல,புத்தளம், மொனராகல, நுவரெலிய, பதுளை, மாத்தளை, நனம்பகா மாவட்டங்கள் சூறைக்காற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் நேற்றைய சூறைக்காற்றினால் சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, காய்கறிப் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இந்த மோசமான சூறைக்காற்று நாளை வரை தொடரும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதிப் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மரங்கள், கிளைகள் முறிந்து விழும் அபாயம் இருப்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு தொடக்கம் வீசிய சூறைக்காற்றினால், மரங்கள் முறிந்து விழுந்து, 5 வீடுகள் முற்றாகவும், 82 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. வீதிகளுக்குக் குறுக்கே விழுந்த மரங்களால் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.