June 03, 2018

இலங்கைளின் 10 வயது சிறுவனும், பத்ர் யுத்தமும் (Heart Touching)


போருக்கான ரெக்ருட்மென்ட். அந்த வேளையில் அந்த யுத்தத்தின் பெயர் “பத்ர்” என்றே அவர்களிற்கு தெரியாத காலை.

தன்னையும் செலக்ட் பண்ணுவார்கள் என்ற நம்பிக்கையில் தாடியோ மீசையோ அரும்பாத அந்த சிறுவன் நுனிக்காலில் உன்னி வரிசையில் நின்றான். நபி அவனை ரிஜெக்ட் செய்து விட்டார். சைல்ட் சோல்ஜர் தமக்கு தேவையில்லையென.

வீடு வந்த சிறுவன் விடுவதாய் இல்லை. தன் தனயன் வீடு வந்த போது நபியிடம் நீங்கள் பேசுங்கள். நீங்கள் பேசினால் அவர் உடன்படுவார் என்றான். அவரும் மீண்டும் சென்று நபியிடம் வேண்டி நின்றார். நபி விருப்பமில்லாமல் சம்மதம் செய்வது கிடையாது. ஆனால் செய்தார் தன் முன் நின்றவரின் வார்த்தைகளிற்காக.

சிறுவனிற்கு சைனியத்தில் இடம் கிடைத்தது. அந்த சிறுவனின் பெயர் உமைர் இப்னு அபீவக்காஸ். அவனிற்காக நபியிடம் சிபாரிசு செய்தவர் ஸஅத் இப்னு அபிவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு. அவரின் காக்கா.

இவர்கள் எதற்கு ஆசைப்பட்டார்கள். கொலை செய்யப்படுவதற்கு. உடம்பு துண்டாடப்படுவதற்கு. அங்கங்கள் கொத்திப் பிளக்கப்படுவதற்கு. மொத்தத்தில் அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்படுவதற்கு.

பத்ர் போர் நடந்தது. முடிந்தது. மரணித்த பத்ரு ஸஹாப்பாக்களின் உடலங்களில் உமைர் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹுஅன்ஹுவின் கழுத்து தொங்கிய உடலும் ஒன்று. நபி தம் இருகரத்தினால் அவர் உடலை வாரி எடுத்தார்.

பின்னைய இஸ்லாமிய கிலாபாவிற்காக படை நடாத்திய ஒவ்வொரு முறையும் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியவர்கள் சொல்வார்கள், “நாங்கள் வெற்றியுடன் மதீனா திரும்ப வைத்த ஒவ்வொரு அடியிலும் நான் நினைப்பேன் என் தம்பி சென்ற பாதையில் நான் செல்லவில்லையே” என.

ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு தான் தலைமையேற்ற ஒவ்வொரு சண்டையிலும் பிரார்த்திப்பது இறைவா இந்த சண்டையிலாவது உமைரின் பாதையில் என்னை பயணிக்கவை என்பதே. ஆனால் ரப்பு அவரை சீனாவரை பயணிக்க வைத்தான்.

நபியின் வார்த்தைகளின் வெடிப்பில் உருவான ஈமானிய உறுதியும், அதில் இஸ்திகாமத்தாக இருக்கும் மனதும் கொண்ட மனிதர்களின் கதையிது.

***************************************************************

அண்மையில் ஒரு ஜனாஸா. கிட்னி பெயிலியர். மரணித்த அந்த மனிதன் ஒரு சாதாரண மேசன். ஒவ்வொரு அதிகாலையிலும் தன் 10 வயது மகனை சைக்கிளில் சுமந்து கொண்டு வந்து மஸ்ஜித்தின் ஓரத்தில் கிடத்திவிட்டு சுன்னத்தை தொழுவார்.

இமாம் ஜமாத்திற்கு இகாமத் சொல்லும் தருவாயில் அவனை எழுப்பி விடுவார். சிறுவன் ஓடிச்சென்று வுளுச்செய்து தானும் இணைந்து கொள்வான். இது வழமை. தினமும் பார்க்கும் சம்பவம்.

ஒரு நாள் அந்த வாப்பா வாத்தாகி விட்டார். கிட்னி. தந்தையின் கன்னத்தை தடவி தடவி கதறியழுதான். அழும் போது அவன் திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தை ஒன்றே ஒன்று தான். “யார் வாப்பா என்னை இனி சுபுஹுக்கு கூட்டி போவார்கள்? இனி எனக்கு இமாம் ஜமாத் இல்லையா வாப்பா?”.

அந்தி மாலை அவர் அடக்கப்பட்டார். கபுரடியிலும் அதே வாசகங்கள் அந்த குழந்தையில் வாயில் இருந்து வந்து கொண்டிருந்தது.

மறுநாள் அதிகாலை பஜ்ருடைய வேளை. இரண்டு ஹபாயா அணிந்த உருவங்கள் ஒரு சிறுவனை இமாம் ஜமாத்திற்கு கொண்டு வந்து விட்டன. அவன் உம்மாவும் உமம்மாவும்.

இத்தா என்ற பெயரில் போடப்பட்ட இஸ்லாம் சொல்லாத விலங்குகள் உடைக்கப்பட்டது ஒருபுரம். தன் கணவர் வழிகாட்டிய சத்தியப் பாதையில் தன் மகனை தன் கணவனை அடக்கி 24 மணித்தியாலங்கள் கழியாத நிலையில் கொண்டு வந்து நிறுத்திய ஈமானிய உறுதி மறுபுரம்.

சந்தோஷமாக இருக்கிறது. நான் வாழும் தேசத்திலும் ஈமானிய உறுதிமிக்க இஸ்திகாமத்தை உயிர்படுத்தும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என. அதுவும் ஒரு பெண்ணாக. ஒரு சிறுவனாக. இவர்கள் தான் கொள்கைவாதிகள். நானல்ல.

-Roomy Abdul Azeez-

4 கருத்துரைகள்:

Masha Allah...highly impressive article...crying while reading....can we have that boy's contact to help him for the future development?
Write to mail
nisrafjalaaldeen@gmail.com
Jazakumullahu khair


idel ulla talayangam velanga villa

இதைப்படித்தால் யாருக்கும் கண்ணீர் வராமல் இருக்க முடியாது. யா அல்லாஹ் எங்களுக்கும் எங்கள் குடும்பம், பிள்ளைகளுக்கும் இவ்வாரான ஈமானைத் தருவாயாக.

விடயம் சரி இத்தா மார்க்கத்தில் இல்லையா?இதுவரை யாரும் சொல்லாத விடயத்தை சொல்கிறீர்கள் . ஒரு பெண் தன் கணவனுக்காக அல்லாமல் வேறு யாருக்காகவும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுஷ்டிக்க வேண்டாம்.கணவன் மரணித்தால் அவள் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் இத்தா இருப்பது அவள்மீது கடமையாகும் என்ற கருத்துப்படவுள்ள ஹதீதை இத்தாவை வலியுறுத்துகிறதே.இதனை ஆராய்த ஒரு விஞ்ஞானி இஸ்லாத்திற்கு வந்தாரே ஆனால் இதுவிடயத்தில் நீங்கள் மார்க்கத்திற்கு முரணான ஒரு கருத்தையே சொல்கிறீர்கள் .

Post a Comment