முஸ்லிம் சமுதாயம் இந்திய, இலங்கை மண்ணிலும் உலகளாவிய ரீதியிலும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், கடும்போக்கு அமைப்புக்களின் கூட்டுச் செயற்பாடுகள், மத்திய அரசாங்கங்களின் கவனத்தில் கொள்ளாத நிலைமைகள், சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் கட்டியெழுப்பப்பட வேண்டிய நல்லுறவுகள், தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விடிவெள்ளிக்கு வழங்கிய விசேட செவ்வி வருமாறு :
Q தமிழகத்தில் உள்ள தமிழ் – முஸ்லிம் உறவினை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு நீங்கள் கூறவிழைவது என்ன?
பதில்:- 2009 ஆம் ஆண்டு மிகப்பெரும் துயரத்தினைத் தந்திருந்த சம்பவங்கள் நிகழ்ந்த பின்னர் நான் லண்டனுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினேன். அவர்களின் நிலைப்பாடுகளை கேட்டு அறிந்து கொண்டேன். அதேபோன்று தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களின் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டிருந்தேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமைகளையும் நிலைப்பாடுகளையும் பெற்றுக்கொண்டேன். அதன் பின்னர் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்துடனும் தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி வந்தேன். இவ்வாறான நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கேற்பதற்காக நான் அங்கு வருகை தந்திருந்தேன். அச்சமயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த ஹாபீஸ் நஸீர் மற்றும் தமிழ்த் தேசிய தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். அவை ஆரோக்கியமானதாகவே இருந்தன.
இலங்கையில் காணப்பட்ட அசாதாரண காலப்பகுதியில் நடைபெற்ற கசப்பான அனுபவங்களை மையப்படுத்தி யார் அதில் தவறிழைத்தார்கள். அதற்கான காரணங்கள் என்ன போன்ற பகுப்பாய்வுகளுக்கு முஸ்லிம்களும், தமிழர்களும் செல்லாது எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சிங்கள பேரினவாதமும், பௌத்த மதவாதமும் உச்சமாக செயற்பட ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக கண்டியிலும், அம்பாறையிலும் அண்மித்த தினங்களில் நிகழ்ந்த சம்பவங்களை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களை தாக்குகின்ற சம்பவங்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. விசேடமாக அம்பாறை சம்பவத்தினை எடுத்துக்கொண்டால் இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பாலான உணவகங்களை நடத்துகின்றார்கள். முஸ்லிம்களின் உணவுச்சுவையால் அங்கு மக்கள் அதிகமாக கூடுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் முஸ்லிம் உணவகங்களில் உள்ள உணவுகளில் ஆண்மைக் குறைபாட்டு மாத்திரைகளை உணவுகளில் கலக்கின்றார்கள் என்ற திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.
அதேநேரம், கண்டியில் நடைபெற்ற சம்பவத்தை கவனத்தில் கொள்ளும் போது உயிரிழப்புக்கள் இன்றி சொத்துக்களை அழிக்கும் ஒரு வியூகத்துடனே அந்த சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் பெண்கள் கூட சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு தூரம் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறான ஒரு தருணத்தில் அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குள் சிறுபான்மையின சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே இந்த விடயத்தல் இரு சமூகத்தினருமே இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டினை எடுப்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
மேலும் சிறுபான்மை இனத்தவர்களை எவ்வாறு தாக்கமுடியும் என்பதற்கான வியூகத்தினை இந்தியாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ், இலங்கையில் இயங்கும் பொதுபலசேனா, மியன்மாரில் உள்ள 969 இயக்கம் ஆகியவை கூட்டாக இணைந்து அமைக்கின்றன.
அவர்கள் தீட்டிய சதித்திட்டத்தின் வெளிப்பாடாகவே மேற்படி வன்முறைகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது இன, மத, மொழிவாரியான சிறுபான்மை இனத்தவர்களை தாக்குவதற்கு எத்தகைய வழிமுறைகளை கையாள்கின்றார்களோ அதேபோன்று தான் இலங்கையில் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களும் செயற்பட்டு வருகின்றன.
இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரானது சாதி, மதத்தினைக் கடந்து ஒரு இன விடுதலைக்காக நடைபெற்றது. அந்தப்போர் நிறைவுக்கு வந்த பின்னரான சூழலில் தற்போது மிகப்பெரிய இனவெறிக்குழுக்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஏற்கனவே பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர், முஸ்லிம் தரப்புக்களிலும் இனவாதக் குழுக்களை உருவாக்குவதை திட்டமாக கொண்டு முயற்சிகள் நடைபெறுகின்றன. இது அபாயகரமானது. இது இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்து விடும். ஆகவே இந்த அபாயத்திலிருந்து மீண்டுவருவது காலத்தின் கட்டாயமாகின்றது.
கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அதேபோன்று வடமாகாண தமிழர்களுக்கு கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. ஆகவே கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஒரு வட்டமேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவுக்கு வரவேண்டும்.
தற்போதைய சூழலில் இரு சிறுபான்மை சமூகத்தினதும் வாழ்வியலே கேள்விக் குறியாகியுள்ளது. ஆகவே வாழ்க்கையை உறுதிப்படுத்திக்கொண்டால் தான் உரிமைகள் தொடர்பில் பேச முடியும். எனவே அதற்குரிய திட்டமிடலை கூட்டாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
Q ஆர்.எஸ்.எஸ், பொதுபலசேனா, 969 ஆகியவற்றுக்கிடையில் குணாம்ச ரீதியான தொடர்புகளை தாண்டி உறவுகள் உள்ளன என்கின்றீர்களா?
பதில்:- ஆர்.எஸ்.எஸ், பொதுபலசேனா மற்றும் 969 அமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் சிந்தனை ரீதியான தொடர்புகள் மட்டும் காணப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். சேர்ந்த பிரமுகர்கள் இலங்கைக்கு சென்று பொதுபலசேனா போன்ற கடும்போக்கு அமைப்புக்களுடன் கலந்தாலோசித்துள்ளார்கள். எவ்வாறான வியூகத்தினை அமைத்து செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலான அனைத்து விதமான பயிற்சிகளையும் அளித்துள்ளார்கள். இது மட்டுமல்ல, தமிழர்களுக்கு மத்தியிலும் தமது வியூகத்தினை முன்னெடுப்பதற்காக சில குழுக்களை அமைத்துள்ளார்கள் என்பது யதார்த்தமாகும்.
Q இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உறவினை பலப்படுத்துவதில் உங்களது வகிபாகம் என்னவாக இருக்கும்?
பதில்:- இலங்கையில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் அனைவரையும் தமிழகத்திற்கு அழைப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம். கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து தமிழர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்கும் முகமாக தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்கள், கட்சிகள் , முஸ்லிம் கட்சிகள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பெரும் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இது சாத்தியமாகின்றபோது பல்வேறு மாற்றங்களை இலங்கையில் காணமுடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகவுள்ளது.
Q இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிவரும் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற பொதுப்படை சிந்தனையை கட்டுப்படுத்துவதில் முஸ்லிம்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்?
பதில்:- முகத்தில் தாடிவைத்து, தொப்பி அணிந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக சித்திரிக்கின்ற நிலைமை தான் தற்போது உலகளாவிய ரீதியில் உள்ளது. அதிலும் இந்தியாவில் அந்த தன்மை அதிகமாகவே உள்ளது. ஆகவே ஆசிய முஸ்லிம்களுக்கு என்னால் வழங்கக் கூடிய செய்தியாக இதனைக் கொள்ளமுடியும். அதாவது, நாங்கள் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் தான் வாழுகின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற ஏனைய தரப்புக்களின் மனநிலையை மாற்றும் வகையில் முற்போக்குடன் செயற்பட வேண்டும். அதாவது, ஏனைய சமூகத்துடன் வேறுபடக்கூடிய விடயங்கள் குறைவாகவும் ஒன்றுபடக்கூடிய விடயங்கள் அதிகமாகவும் இருக்கின்ற நிலையில் அதனை புரிந்து அந்தந்த சமூகங்களுடன் சகோதரத்துவத்தினை ஏற்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் நாம் செயற்பட வேண்டியுள்ளது.
இந்த விடயத்தில் ஒரு உதாரணத்தினைக் கூறுகின்றேன். 1995 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பினை உருவாக்கினோம். 2009 இல் தான் மனித நேய மக்கள் கட்சி என்று அரசியல் கட்சியாக மாற்றமடைந்தோம். இடைப்பட்ட காலத்தில் இரத்ததான சேவை, அம்புலன்ஸ் சேவை போன்ற பல மனிதநேய செயற்பாடுகளை முன்னெடுத்தோம். இவ்வாறான நிலையில் அண்மையில் தமிழகத்தில் வெள்ள அனர்த்தம் வந்தபோது எமது அமைப்பு உட்பட முஸ்லிம் தரப்புக்கள் களத்தில் செயற்பட்டன.
இந்த செயற்பாடுகள் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தியதென்றால், பாடசாலையில் தீவிரவாதி ஒருவரின் புகைப்படத்தினை வரையுங்கள் என்றால் குழந்தைகள் தொப்பியுடன் தாடியுடன் கூடிய ஒரு முஸ்லிமையே வரைந்தார்கள். ஆனால் மேற்படி அனர்த்தத்தின் பின்னர் அந்த அனர்த்தம் என்ற தலைப்பில் ஓவியம் வரையுங்கள் என்றால் உதவிப்பைகளுடன் வெள்ளத்தின் மத்தியில் உள்ள வீட்டுக்குள் செல்லும் முஸ்லிம் நபர் ஒருவரையே வரைகின்றார்கள்.
அந்தளவுக்கு மனநிலை மாற்றத்தினை இளம் சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நல்லிணக்கப் பணிகளே தற்போது அவசியமாகவுள்ளன. பயங்கரவாதமும், தீவிரவாதமும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை அளிக்கப்போவதில்லை. முஸ்லிம்களுக்கு இந்த விடயத்தில் உள்ள பொறுப்பினை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டும்.
-Vidivelli
6 கருத்துரைகள்:
India and Sri Lanka government itself is a terrorist body and have an hidden agenda to wipe out Muslims.
அண்ணே கருப்பு தொப்பி கராரே , ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். நீங்கள் என்ன தான் யுத்திகளை கையாண்டு தமிழ் முஸ்லிம்களை இலங்கையில் இணைக்க முயன்ன்றாலும் இலங்கை முஸ்லீம் தலைவர்கள் எப்படியும் சந்தர்ப்ப சுழலுக்கேற்றவாறு காலை வாரும் பண்புடையவர்கள். இது காலம் காலமாக வருகின்ற ஒன்று. இனிமேல் தமிழும் முஸ்லிமும் இலங்கையில் ஒட்டாது. வடகிழக்கை எவ்வாறு முஸ்லிம்களை வைத்தே இணைக்க சொல்வது என்பது பற்றி எங்களுக்கு தெரியும். மற்றது இந்தியாவிலுருந்து யாராவது எதாவது சொன்னால் இலங்கை முஸ்லிம்கள் அதை ஏற்று கொள்ளவும் மாட்டார்கள். இனியும் உங்களை பரபரபாக்க சும்மா RSS BBS என கதை அளக்குறதை விடுங்கோ. இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதுமே தொப்பி பிரட்டிகள் தான். அவர்களுடைய அண்மைய செயட்பாடான வவுனியா மற்றும் மன்னார் உள்ளுராட்சி மன்றங்களை அமைக்கவும் தமிழர்களுக்கு கிடைக்க விடாமல் பண்ணவும் அவர்கள் அமைத்த சக்கர வியூகங்களை பார்த்தோம். மிக்க சந்தோசம் நீங்கள் முஸ்லீம் எனும் போர்வையில் இலங்கை வந்தால் உங்களுடைய அடிப்படைவாதத்தையும் எதிர்ப்போம்.
சர்வதேச முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அங்கமான தமிழக முஸ்லிம்கள் ஈழ முஸ்லிம்கள் மீது வைத்திருக்கும் மதிப்பும் ஒத்துழைப்பும் எம்மை நம்பிக்கையூட்டுகிறது.
Anusath உன்னுடைய பருப்பு எப்பவுமே வேகாது
BBS, RSS போன்றவைகளுக்கும், உல்மா, மயில், மரம் கட்சிகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை.
இவை அனைத்தும், மதம்-யை வைத்து அரசியல் பிழைப்பு செய்கிறார்கள்.
எனவே இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு நிகரான, அரசியல் அந்தஸ்தை அரசாங்கம் BBS, RSS க்கும் கொடுக்க வேண்டும். மினிஸடர் பதவிகளும் கொடுக்கலாம்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பேட்டி யதார்த்தமானது.
காலத்தின் தேவையை சுட்டிக் காட்டுகிறார்.
Post a Comment