Header Ads



இனவாத அலைகளால், உருவாகிவரும் அடுத்த ஜனாதிபதி..."


கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான வியத்மக அமைப்பின் 2018 க்கான வருடாந்த மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பேராசிரியர் ரொஹான் குணரத்ன, புதிய உலகை வெல்வதற்குத் தேவையான நான்கு சக்திகளைக் குறிப்பிட்டார். இராணுவம், கடற்படை, விமானப்படை என்பவற்றோடு நான்காவதாக தற்போது சைபர் படையும் முக்கியமானதாக இருப்பதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

உலக அரங்கில் முக்கியமான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டுவதற்கு இந்த சைபர் படையின் தொழிற்பாடு வெகுவாக செல்வாக்குச் செலுத்தியது என்பது இன்றளவில் உலகறிந்த செய்தி. தேர்தலுக்கு முன்னரான அனைத்துக் கணிப்பீடுகளும் ஹிலாரி கிளிங்டன் வெல்லுவார் என்பதை உறுதிப்படுத்தியிருந்த போதும், எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் தாண்டி ட்ரம்ப் வெற்றிபெற்றார் என்பதை ட்ரம்பின் சாகசம் என்று வர்ணிப்பதை விட்டு, சைபர் செய்த சாதனையென்றே உலகம் பார்க்கிறது. இதற்கு அமெரிக்காவின் வைரியான ரஷ்யாதான் பின்னணியில் இருந்து ஆட்டிப் படைத்துள்ளமை தற்போது நிரூபணமாகியுள்ளது.

அடுத்த நாடுகளில் மக்களின் அபிப்பிராயங்களை வடிவமைக்கும் சுயநல நோக்கில் நாடுகள் தமது தளத்தை பயன்படுத்தியிருப்பதை தேர்தல் நடந்த அடுத்த வருடம் ஏப்ரலில் பேஸ்புக் நிறுவனம் முதல் தடவையாக ஒப்புக் கொண்டிருந்தது. ரஷ்யப் பின்னணியிலான 120 போலியான பக்கங்கள் திறக்கப்பட்டு, 80,000 பதிவிடல்கள் மூலமாக 29 மில்லியன் மக்களை அவை சென்றடைந்திருப்பதாக பேஸ்புக் நம்புகிறது. பகிரப்படுவதன் ஊடாகவும், விருப்பைத் தெரிவிப்பதன் ஊடாகவும் அது இதனைவிடவும் பெரியதொரு எண்ணிக்கையினருக்குச் சென்றடைந்திருக்கலாம் எனவும் அது நம்புகிறது. இதற்கு மேலதிகமாக ரஷ்யாவில் இருந்து 2752 ட்விட்டர் கணக்குகள் பேணப்பட்டிருக்கின்றன. 18 யூடியூப் சனல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யத் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 4,700 டொலர் பெறுமதியான விளம்பரங்கள் இந்தத் தேர்தல் காலத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன என கூகிள் தெரிவிக்கிறது.

ரஷ்யாவின் அநாமதேயங்களும் (Trolls) தானியங்கிகளும் (Bots) தமது நலனுக்காக டொனால்ட் ட்ரம்புக்காக வேலை செய்ததோடு மட்டுமன்றி, புலம்பெயர்வு, இஸ்லாமோபோபியா போன்ற சர்ச்சைக்குரிய உதவாக்கரை விடயங்களையும் அமெரிக்க மக்கள் மத்தியில் விதைத்து அவர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் வேலைகளையும் சமூக ஊடகங்கள் இந்தத் தேர்தலின்போது செய்தன என த கார்டியன் சுட்டிக் காட்டுகிறது. கொலம்பிய பல்கலைக்கழக டிஜிட்டல் ஊடக நிலைய அதிகாரி ஜொனதன் அல்பிரைட்டின் அலசல்களின்படி, Being Patriotic என்ற பேஸ்புக் பக்கம், தேர்தல் பிரச்சார காலங்களில் ”சட்டவிரோத”, ”அமெரிகன்”, ”ஷரீஆ சட்டம்” போன்ற சொற்களை அதிகம் பாவித்துள்ளதாக குறிப்பிடுகிறார். இது போன்ற பேஸ்புக் பக்கங்களில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தாங்கள் தமது நாட்டவருடனேயே உரையாடுவதாக எண்ணியே இந்த பேஸ்புக் கணக்குகளில் உலாவியிருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

அமெரிக்காவின் அரசியல் கட்சிகளெதற்கும் ஆதரவளிப்பதனைவிட, அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள பிரிவினைகளை அதிகரிக்கச் செய்வதனையே ரஷ்யாவின் விரிந்த மூலோபாயம் நோக்காகக் கொண்டுள்ளது  தெளிவாகவே தெரிகிறது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாதத்துக்கான டிஜிட்டல் எதிர்ச்செயலின் முன்னாள் ஆலோசகர் ஜொனதன் மோர்கன் தெரிவிக்கிறார். இது நிச்சயமாகத் தொடரும் என்றே நான் நினைக்கிறேன் என்கிறார் அவர்.
பேராசிரியர் ரொஹான் குணரத்ன சொல்லுகின்ற நான்காவது படையின் தாக்கம் தான் இது. ஓர் அந்நிய நாட்டின் மீது தொடர்பாடல் பைபர் வழியாகப் படையெடுத்து, அங்குள்ள மக்களின் உணர்வுகளைத் தூண்டி, தூண்டப்பட்ட மக்களை ஒரு திரளான சக்தியாக்கி தனக்குத் தேவையானதைச் சாதித்துக் கொள்ளும் இந்த சைபர் படையெடுப்புக்கான சாத்தியம் இலங்கைக்கு இல்லை என்று சொல்ல முடியாது. இலங்கை இந்திய, சீன, அமெரிக்க வல்லரசுகளின் கழுகுப் பார்வையில் சிக்கியுள்ள ஒரு கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடு என்ற வகையில் இவை எல்லாமே தமக்குத் தேவையானதொரு களத்தை இலங்கையில் தயாராக்குவதற்கு கங்கணம் கட்டிச் செயற்படும் தேவையுடனிருக்கின்றன. இவற்றுள் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தில் எடுத்த சீன சார்பு முன்னெடுப்புக்கள்,சீனாவுக்கு வலுவானதொரு நிலையை ஏலவே இலங்கை மண்ணில் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. இந்த ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கும் அதனூடாக அமெரிக்காவுக்கும் இருக்கிறது. இந்த வகையில் இலங்கையில் ஒரு சைபர் ஆக்கிரமிப்பு மிகவும் எதிர்பார்க்கப்பட வேண்டியதொன்றே.

நவீன யுகத்தில் சமூக ஊடகங்கள் அரசாங்கங்களைத் தீர்மானிக்கின்ற அளவுக்கு சக்தி பெற்றிருக்கின்றன.  பூகோள அரசியலில் இந்த சைபர் அரசியல் மிக முக்கியமானது. நாடுகளில் தேசியவாத உணர்வுகளைத் தூண்டி விட்டு பூகோள அரசியலை முன்னகர்த்திச் செல்வது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வெற்றியுடன் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பிரான்ஸில் லபெனைத் தோற்கடித்து மக்ரோன் ஆட்சிக்கு வருவதற்கும் சைபர் அரசியலின் தேசியவாத உணர்வைத் தூண்டிவிடும் யுக்தி காரணமாக இருந்தது. இலங்கையில் தேசியவாதம் இனவாதத்துடன் இரண்டரக் கலந்தே பயணிக்கிறது. அதனால் தேசியவாதம் தூண்டப்படும் போதெல்லாம் இனவாதம் மேலோங்குகிறது. அல்லது இனவாத அலை மேலெழும்போது தேசியவாத உணர்வுகள் கிளர்ந்தெழச் செய்யப்படுகின்றன. முஸ்லிம்கள் மீதான திகன தாக்குதல்களுக்கு சைபர் அரசியலின் தேசியவாத உணர்வு தூண்டப்பட்டதே காரணமாகும். இதனூடாக இனவாதம் மேலெழுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. உலக சைபர் அரசியல் அரங்கில் நடந்தது போன்றதொரு சைபர் ஆக்கிரமிப்பு தான் இங்கும் நடைபெற்றது என்பது தான் திகன தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் சில நாட்கள் பேஸ்புக் தடைசெய்யப்பட்டதற்குக் காரணமாகும்.

மனிதன் இயல்பிலேயே அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். அந்த வகையில் இந்த இயல்புக்குரிய கோபம், பொறாமை, வெறுப்பு அனைத்தும் அவனில் குடிகொண்டிருப்பவை. மதங்களும் அறிவும் இவற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. இப்படி அடக்கிவைத்திருப்பவைகளை வெடித்து வெளிவரச் செய்கின்ற வேலையைத் தான் சமூக ஊடகங்கள் செய்கின்றன. இதுதான் சைபர் கலாச்சாரமாக போற்றப்படுகிறது. இந்தக் கலாச்சாரம் தற்போது நாட்டின் கலாச்சாரமாக மாற்றப்பட்டிருப்பதன் விளைவைத் தான் திகன தாக்குதல்கள் வெளிப்படுத்தின. இதனை பேஸ்புக்கைத் தடை செய்வதனூடாக இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்த முனைந்தாலும், அது தனது நாட்டுக் கட்டுப்பாட்டையும் மீறி நடைபெறுகின்ற ஒரு விடயம் என்பதை அரசாங்கத்துக்கு உணர்த்தியதும் திகன சம்பவங்கள் தான். சீனா சைபர் கலாச்சாரப் புரட்சியை எதிர்கொண்டபோது அங்கும் மக்கள் VPN ஊடாக சைபர் உலகில் சஞ்சரித்தனர். அப்போது கூகிளுடனும் அப்பலுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தனக்கிருக்கும் வல்லமையால் சீனா அதனைக் கட்டுப்படுத்தியது. இலங்கை போன்ற சிறிய நாடுகளினால் இது சாத்தியமில்லை. ஆகவே இவ்வாறான சைபர் ஆக்கிரமிப்புக்களின் போது இலங்கை போன்ற நாடுகள் பல்தேசிய சக்திகளுக்கு முன்னால் அடிபணிவதைத் தவிர  வேறு வழிகள் இருக்கப்போவதில்லை. இதனை வேறு வழிகளில் சொல்வதென்றால், மூன்றாவது சக்தியொன்றினால் எமது அரசியலை இலகுவாக மாற்றிவிட முடியும்.

ஜொனதன் அல்பிரைட்டின் கருத்துப்படி, அமெரிக்காவில் ஸ்திரமற்ற ஒரு ஆட்சியைக் கொண்டுவருவதற்காகவே ரஷ்யா சைபர் ஆக்கிரமிப்பின் மூலம் டொனல்ட் ட்ரம்பை வெற்றி கொள்ளச் செய்தது என்கிறார். அதற்கெனவே இனவாத, தேசியவாத கருத்துக்களை அது விதைத்தது. இது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று மோர்கன் கூறுகிறார். இலங்கையிலும் ஸ்திரமற்ற ஓர் ஆட்சி நீடிப்பது தான் இலங்கையில் கால்பதிக்க நினைக்கின்ற மூன்றாம் சக்திகளின் தேவைப்பாடு. மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டின் எதிர்காலத் தலைமைக்குக் கனவு காண்பவர்கள் சீன சார்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பவர்கள் என்பதனால் இந்தியா இதனைப் பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஸ்திரமில்லாத தற்போதைய நல்லாட்சியில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் இந்தியா, தற்போது குறிவைத்திருப்பது நடப்பு அரசாங்கத்தையல்ல. அடுத்து வரப் போகும் தலைமையையும் அதனை ஸ்திரமில்லாமல் செய்வதற்கான அஸ்திரங்களைப் பிரயோகிப்பதற்கான வழிகளையுமே அது சிந்திக்கிறது. இந்த வகையில் இதற்குப் பகடைக்காய்களாக இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்ந்து இருக்கப் போகிறது என்பது மிகத் தெளிவானது.

இனவாதக் கருத்துக்களுக்கூடாக ட்ரம்பை ஜனாதிபதியாக்கியது அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கென்றிருந்தால், தற்போது இலங்கையில் பரப்பப்பட்டிருக்கும் இனவாத அலைகளால் உருவாகி வரும் அடுத்த ஜனாதிபதி நிச்சயமாக சைபர் தாக்குதலின் பாதிப்புக்குட்பட்டவராகவே இருக்கப் போகிறார் என்பது நிச்சயமானது.

 – நேசன் –

No comments

Powered by Blogger.