Header Ads



'பிரபாகரனின் தலையை கோடாலியால் வெட்டியதுபோல, உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும்'

எமக்கென்று கடமைகள் உண்டு. அவற்றை நாம் சரியாகச் செய்வோம். உயிரைக் காலன் வந்து எடுக்கும் நேரம் எடுத்துச் செல்லட்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“உங்களைப் பற்றிதெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியதுபோல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெறமுடியாதா?” என முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் “உங்களின் அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்தாதீர்கள், வெளிப்படுத்தினால் அடிப்போம், கொல்லுவோம், நாட்டைவிட்டுத் துரத்துவோம்.” என்பதே.

சிங்களமக்களின் இவ்வாறான எதிர்மறைக் கருத்துக்களும் நடவடிக்கைகளும் முன்னரும் வெளிவந்துள்ளன. 'சிங்களம் மட்டும்' சட்டம் கொண்டுவந்த போது எம்மை பயப்படுத்தி பேசாது வைக்கப் பார்த்தார்கள்.

காலி முகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்த என் நண்பர் மௌசூர் மௌலானாவையும் வேறு சிலரையும் ஏரிக்குள் அப்படியே தூக்கி வீசினார்கள். 58ஆம் ஆண்டுக் கலவரம், 77ஆம் ஆண்டுக் கலவரம், 83ஆம் ஆண்டுக் கலவரம் என்று தமிழ் மக்கள் மீதுவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுபோல் எமது முக்கிய தேசிய அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக எங்களுக்குச் செய்வதெல்லாம் செய்து விட்டு துக்கம் விசாரிக்க வந்தார்கள். இது இலங்கை அரசியலில் சர்வ சாதாரணம்.

இவற்றினால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் எதைக் கூறுகின்றது?

“தமிழர்களை நாம் கட்டி ஆண்டு கொண்டிருகின்றோம், அவர்களை அதிகம் பேசவிடக்கூடாது. விட்டால் எமது உண்மை சொரூபம் உலகத்திற்குத் தெரிந்துவிடும். ஆகவே அதிகம் பேசுபவனுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்துவோம், வெள்ளைவானில் கொண்டு சென்று உரியதண்டனை வழங்குவோம். சர்வதேசம் கேள்விகேட்டால் நாங்கள் உதாரண புருஷர்கள் பிழையே செய்யமாட்டோம் என்போம். சென்ற முள்ளிவாய்க்கால் போரில்க்கூட ஒருகையில் மனித உரிமைசாசனம் மறுகையில் துப்பாக்கிவைத்துக் கொண்டே போராடினோம். அப்பாவி ஒருவர் தானும் கொல்லப்படவில்லை. என்று கூறுவோம். இந்தத் தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், வன்முறைவாதிகள் என்றெல்லாம் உலகிற்குஎடுத்துக் காட்டுவோம்” என்றவாறுதான் கூறிவந்துள்ளனர்.

நாங்களும் அவற்றைக் கண்டுகேட்டுப் பயந்துவிட்டோம். எனவே ஒன்றில் இலங்கையை விட்டுவெளியேறி எமது மனஉளைச்சல்களை வெளியிலிருந்து வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

அங்கிருந்து உள்ளூர்வாசிகளுக்குப் பணம் தந்து உதவுகின்றோம். அல்லது உள்ளூரில் இருக்கும் எம்மவரோ மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டுகின்றார்கள்.

எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குகின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசாங்கத்திற்கு வேறொரு முகம் காட்டுகின்றோம்.

“நீங்கள் எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்” என்ற தொனிப்பட அவர்களுடன் பேசுகின்றோம். 'நாங்கள் 'தா' 'தா' என்று கேட்போம். ஆனால் நீங்கள் தருவதைத் தாருங்கள்' என்கின்றோம். அதற்கு பிரதி உபகாரமாக அரசாங்கமும் தனது உதவிக் கரங்களை நீட்டுகின்றது.

தனிப்பட்ட உதவிகளைப் பெற்று விட்டு உண்மையான, எமக்குத் தேவையான அரசியல் பேசாது வந்துவிடுகின்றோம். இதைப் பார்த்ததும் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள்?

'பாருங்கள்... இவர்கள் எவ்வளவு நல்லவர்கள்? நாம் சொல்வது போல் கேட்டு நடக்கின்றார்கள்' என்று கூறுகின்றார்கள்.

எங்களைக் கொழும்பில் தற்போதைக்கு இருக்க விடுகின்றார்கள். ஆனால் தப்பித் தவறி எமது அபிலாஷைகளை எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளியிட்டோமானால் நாங்கள் அவர்களுக்குக் கொடூரமானவர்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், தீயவர் ஆகிவிடுவோம்.

இவ்வாறான மிரட்டுதலைத் தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். உண்மைநிலை அறியாமல் அவர்கள் பிதற்றுகின்றார்கள். அதைப் பார்த்து நீங்கள் பதறுகின்றீர்கள்.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எமது கோரிக்கைகளை, மனக்கிடக்கைகளை வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறாமல் எமக்குள் ஒன்று கூறி அவர்களுக்கு இன்னொன்று கூறி வந்ததால் தான் நியாயமான உரிமைகள் கோரும் ஒருவர் கூட அவர்களுக்கு நாட்டின் துரோகி ஆகின்றார், தீவிரவாதி ஆகின்றார்.

நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்கள மக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள்.

உண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே. சிங்களமொழி கி.பி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேதான் வழக்கத்திற்கு வந்தது. அதற்கு முன்னர் வாழ்ந்தவர்களைச் சிங்களவர் என்று அழைக்க முடியாது.

துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. DNA பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும்.

அல்லது ஏமாற்றத்தில் இன்னமும் உக்கிரமடையக்கூடும். எம்மைக் கொல்ல எத்தனிப்பவர்கள் காட்டு மிராண்டிகள் போல் நடந்து கொள்ளாமல் தமது தலைவர்களை எம்முடன் பேச அனுப்ப வேண்டும். நாம் எமது அடிப்படைகளை அவர்களுக்கு விளங்க வைப்போம். புரிந்துணர்வு அற்ற இன்றைய நிலையே இவ்வாறான பதட்டங்களுக்கு இடமளித்துள்ளது.” என முதலமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.