Header Ads



மங்களவுக்கு எதிராக, களமிறங்குகிறது மகிந்த அணி

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்வதற்குப் பொது எதிரணியான மஹிந்த அணி தீர்மானித்துள்ளது.

அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகிறார் என்றும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விளம்பரங்களுக்காகப் பெருந்தொகைப் பணம் செலவிடுகின்றார் என்றும் சுட்டிக்காட்டி, மேலும் சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே மேற்படி முறைப்பாடு தாக்கல் செய்யப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவர் தொடர்பிலும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்.

இலங்கையில் வெள்ளை வான் பயங்கரவாதத்தைக் கோத்தபாயவே அறிமுகப்படுத்தினார் எனவும், சட்டவிரோத கொலைகளுக்குப் பின்னால் இவரே இருக்கிறார் எனவும், இவர் மோசமான அரச நிர்வாகி எனவும் மங்கள விமர்சித்திருந்தார்.

அத்துடன், மஹிந்தவையும் பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மஹிந்த அணி, அமைச்சர் மங்களவை குறிவைத்துள்ளது.

அதேவேளை, தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், விலை உயர்வுகளுக்கு எதிராகவும் நாடு முழுவதிலும் 200இற்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்துவதற்கும் மஹிந்த அணி தீர்மானித்துள்ளது.

சீரற்ற காலநிலை முடிவுக்கு வந்த பின்னர் அரச எதிர்ப்புப் போராட்டத்தை அது ஆரம்பிக்கவுள்ளது.

No comments

Powered by Blogger.