Header Ads



"ஏமாற்றப்பட்டு விட்டேன்" - கொதிக்கிறார் ரங்க பண்டார

நான் அமைச்சுப் பதவியையே எதிர்பார்த்தேன். எனினும் அப்பதவி எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு அமைச்சு பதவி வழங்குவதாகவே வாக்குறுதி அளித்தனர். என்றாலும் வழங்கவில்லை. அதற்காக நான் அரசாங்கத்தில் இருந்து வெளியேற மாட்டேன். நாமே இந்த ஆட்சியை உருவாக்கினோம். ஆகவே உள்ளே இருந்து கொண்டு நேர்வழிக்காக போராடுவோம் என நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தில் உள்ள பலருக்கு  வெட்கமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளுக்கான புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைப்பெற்றது. அந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு இருந்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நான் அமைச்சு பதவியையே எதிர்பார்த்தேன்.  எனினும் அப்பதவி எனக்கு கிடைக்கவில்லை. தற்போது இருந்ததை விட மேலதிகமாக அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு பொறுப்பு கிடைக்கபெற்றுள்ளது. எனினும் எனக்கு அமைச்சு பதவி வழங்குவதாகவே வாக்குறுதி அளித்தனர். என்றாலும் வழங்கவில்லை. அதற்காக நான் அரசாங்கத்தில் இருந்து வெளியேற மாட்டேன். நாமே இந்த ஆட்சியை உருவாக்கினோம். ஆகவே உள்ளே இருந்துக்கொண்டு போராடுவோம்.

எனக்கு அமைச்சு பதவி வழங்காவிட்டாலும் பிரச்சினையில்லை. இராஜாங்க அமைச்சினை கொண்டே நான் மக்களுக்கு சேவை செய்வேன். ஆரம்பத்தில் மஹிந்த சமரசிங்கவினால் எனக்கு எதனையும் செய்ய முடியாமல் போனது. இந்த அமைச்சை கொண்டு மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய முடியும் என நம்புகின்றேன். 

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியில் மாற்றம் வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். அந்த கொள்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. மறுசீரமைப்பு என்பது வெறும் மாயையாகும் என்றார்.  

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பும் போது,

விஜயதாஸ ராஜபக்ஷ மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சு பதவி வழங்கியமைக்கு எதிர்ப்பு இல்லையா? அவரது செயற்பாடு வெட்கத்தனமானது இல்லையா?

பதில் -  அது பிரச்சினையில்லை. என்றாலும் வெட்கம் இல்லையா என்பதனை அவரிடமே கேட்க வேண்டும். எனினும் இந்த அரசாங்கத்தில் வெட்கமில்லாதவர்களே அதிகமாக உள்ளனர். பலருக்கு வெட்கம் இல்லை என்றார்.

No comments

Powered by Blogger.