May 10, 2018

"முஸ்லிம்களின் உரிமைகைள பிடுங்குவதை, இந்துக்கள் நிறுத்த வேண்டும்..."

– நேசன் –

ஆடை அணிவதற்கும், போராட்டம் நடத்த வேண்டிய நாடு 

கலாச்சாரம் எங்குமே என்றுமே நிரந்தரமாக இருந்ததில்லை. இலங்கையின் பல்வேறு பிரதேசங்கள் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகப் பேணப்பட்டு வருவதற்குக் காரணமும், பண்டைய காலங்களில் எங்களுக்கு இப்படி ஒரு கலாச்சாரம் இருந்தது என்பதை புதிய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதற்குத் தான். கலாச்சாரம் இப்படித் தான் காலத்துக்குக் காலம் மாறிவருகிறது. கலாச்சாரங்களில் ஆடைக் கலாச்சாரம் தான் வேகமாக மாற்றத்துக்கு உள்ளாகிறது. முன்னர் சாரம், சட்டை அணிந்தவர்கள் எல்லாம் இப்போது ஜீன்ஸ், பேண்டுக்கு மாறியிருக்கிறார்கள். பாவாடை, தாவணிகள் சேலைகளாகவும் சல்வார்,பஞ்சாபிகளாகவும் மாறி தற்போது ஆண்களைப் போல் உடையணிவது தான் கலாச்சாரமாகிப் போயிருக்கிறது. இந்த நகர்ச்சியில் தான் முந்தானைகளும் முக்காடுகளும் ஹிஜாபாகவும் அபாயாவாகவும் மாறியிருக்கின்றன. அவ்வளவு தான்.

இதனை ஒன்றும் கலாச்சார மேலாதிக்கமாக யாரும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சம்பந்தன் ஐயா கலாச்சார உடையில் பொட்டு வைத்து வேட்டியும் சட்டையுமாக வலம் வரலாம். அதற்காக ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்களும் ட்ரௌஸர், ஷேர்ட்டைக் களைந்து விட்டு கலாச்சார உடையில் தான் வர வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லையே. சாரி உடுத்தி வாருங்கள் என்று சொன்ன சம்பந்தன் ஐயா கூட வேட்டி உடுத்தி வாருங்கள் என்று சொல்லவில்லையே. கலாச்சார ஆடை என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்றதொரு வரையறை அவரவர் வசதிக்கேற்ப இயற்றப்பட்டது தான். அந்தவகையில் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் தலைதூக்கியது தினக்குரல் பத்திரிகை விஷம் கக்கியது போன்றதான முஸ்லிம் இனவாதமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல குறித்த விவகாரம் சம்பந்தமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அனுப்பிய கடிதத்துக்கு சம்பந்தன் ஐயா அனுப்பிய பதில் கடிதத்தில், திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் பின்பற்றப்பட்டு வந்த உடை மரபுகளுக்கு மதிப்பளித்து, எந்தச் சமூகமாயினும் புதிய உடை கலாசாரத்தை அறிமுகம் செய்யாமல் இதுவரை காலமும் இருந்து வந்ததைப் போல தொடர்வதே பொருத்தமாக அமையும் என்பது எனது அபிப்பிராயமாகும். அதற்காக தங்களின் ஒத்துழைப்பையும் தங்களது சமூகத்தினது ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் அக்ரபோதி வித்தியாலயத்தின் அதிபராக இருக்கின்ற பௌத்த மதகுரு, அங்கு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது மேனியை மறைத்து உடையணிவதற்கு அனுமதிக்கின்றார். அதேபோல திருகோணமலை மாவட்டத்திலுள்ள வித்தியாலோக, சிங்கள மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடைக் கலாச்சாரம் ஒரு பிரச்சினையில்ல. இது போல நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள தமிழ், சிங்களப் பாடசாலைகள் அடுத்தவரது கலாச்சாரத்துக்கு மதிப்பளிக்கும் பண்பாட்டைப் பேணி வருகின்றன.
அப்படியானால் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு என்ன வந்தது ? முஸ்லிம் ஆசிரியர்களது ஆடை உரிமையை இவர்கள் மட்டும் தான் மீறினார்கள் என்று சொல்வதற்கில்லை. கொழும்பிலும் சில பிரபல பாடசாலைகள் முஸ்லிம் பெண்கள் மேனியை வெளிக்காட்டி அணிய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் இங்கு கடமையாற்றிய ஐந்து ஆசிரியர்களையும் ஆர்ப்பாட்டம் செய்து விரட்டியடிக்கும் அளவுக்குச் செயற்பட்டமை தான் சண்முக கல்லூரியின் தனித்துவம். (நேரடியாக இதற்காக ஆர்ப்பாட்டம் செய்யாவிட்டாலும் அதிபரை அச்சுறுத்தினார்கள் என்ற பொய்யை ஜோடித்து ஒரு இனவாத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.) இங்கு சுமார் 120 முஸ்லிம் பெண் பிள்ளைகள் கல்வி கற்கின்றார்கள். இவர்கள் அனைவரும் பாடசாலை வளவுக்குள் நுழையும் பொழுதே தங்களது அபாயாக்களை களைந்து விட்டுத் தான் வருகிறார்கள். இந்தக் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் இதனை அனுமதித்திருக்கிறார்கள். கடந்த பல வருடங்களாகவே இங்கு கடமையாற்றுகின்ற ஆசிரியர்களும் சேலை உடுத்தித்தான் வருகிறார்கள். இவர்களுக்கு இப்படி வர முடியுமாக இருந்தால் ஏன் இந்த ஆசிரியர்கள் இப்பொழுது மட்டும் அடம் பிடிக்கிறார்கள் என்று கல்லூரி தரப்பிலிருந்து நியாயம் கேட்பதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் கூறுகின்றார். அவர்கள் அடங்கிப் போக முடியுமென்றால் ஏன் உன்னால் முடியாது என்று கேட்கின்ற தோரணை இது.

அடிப்படையில் இந்த முஸ்லிம் ஆசிரியைகளை இப்படி இடமாற்றம் செய்திருக்க முடியாது. இவர்கள் யாரும் சட்டத்துக்கு முரணான எந்தச் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. பாடசாலைச் சூழலுக்கு ஒவ்வாத உடையையும் இவர்கள் அணிந்து வரவில்லை. இது குறித்து பணிப்பாளர் நிஸாம் கூறுகையில், ஆசிரியர்களின் உடை தொடர்பிலான எந்தச் சுற்றுநிருபங்களும் இதுவரை எந்தப் பாடசாலைக்கும் அனுப்பப்படவில்லை. மாணவர்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் மாணவர்களுக்கு பர்தாவுக்கும் சேர்த்தே அரசாங்கம் மேலதிகமான துணியை வழங்குகிறது. இந்த வகையில் முஸ்லிம் மாணவிகள் அணியும் உடை கூட அரசாங்கத்தின் அனுமதிக்குட்பட்டது என்று கூறுகிறார்.
தற்போது இந்த ஐந்து ஆசிரியர்களும் தற்காலிகமாக முஸ்லிம் பாடசாலைகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டார்கள் என்றே இவர்களது மாற்றல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இதனால் இவர்கள் இடமாற்றக் கடிதத்தைப் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரியவருகிறது. தற்போது இவர்களுக்கு இரண்டு மாத காலத்துக்கான அட்டாச்மன்ட் ட்ரான்ஸ்பர் வழங்கப்பட்டுள்ளது. இவர்களது விவகாரத்தை மனித உரிமைகள் கமிஷனுக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம். சட்டத்தரணிகள் பலரும் சட்டநடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என இது தொடர்பில் கேட்டபோது திருகோணமலை மாநகர சபை உறுப்பினர் மௌஸூம் தெரிவித்தார்.

ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி ஓர் அரசாங்கப் பாடசாலை என்ற வகையில் அது அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கமையவே செயற்பட வேண்டுமேயன்றி, தாம் ஓர் இந்துக் கல்லூரி என்ற வகையில் அரச கொள்கைகளை புறந்தள்ளி நடந்து கொள்வது தவறானது. இந்த வகையில் அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக நடந்து கொண்ட அதிபர் தான் இடமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களையே பலிக்கடாவாக்கும் நாட்டின் செல்நெறி பாதிக்கப்பட்ட ஐந்து ஆசிரியைகள் மீதும்  குற்றத்தைச் சுமத்தியிருக்கிறது. இந்த ஆசிரியர்களின் பாதுகாப்புக் கருதியே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கூறினார். முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் திகன தாக்குதல்களின் போதும் தாக்குதலுக்குள்ளான முஸ்லிம் தரப்பு மீதே அரச தரப்பு நடவடிக்கை எடுத்தது. முஸ்லிம்கள் தாக்குதலுக்குள்ளாவதும், பின்னர் அரசாங்கத்தின் ”கருணையினால்” அவர்கள் பாதுகாக்கப்படுவதுமேயன்றி தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டித்து பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் முயற்சிப்பதில்லை என்பது உறுதியாகி வருகிறது.

பாடசாலைகளில் மாணவர்களின் சீருடை தொடர்பில் தத்தமது கலாச்சாரத்துக்கேற்ற உடை அணிவதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. ஆனாலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி நிர்வாகம் இவற்றுள் ஒன்று. இந்த நிலையில் ஆசிரியைகளுக்கு மட்டுமன்றி மாணவிகளது ஆடை உரிமையும் இந்தச் சந்தர்ப்பத்தில் பேசப்பட வேண்டும். 1980 காலப்பிரிவுகளிலேயே முஸ்லிம் மாணவிகளுக்கு காற்சட்டையும் தலையை மூடிய முக்காடும் அணிவதற்கும் ஏற்ற வகையில் அரசாங்கம் சுற்றுநிருபங்களை அனுப்பியிருந்தது. 2014 ஆம் ஆண்டில் நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு அவர்களது ஆடை மறுக்கப்பட்ட போதும் அரசாங்கம் சுற்றுநிருபம் வெளியிட்டு அந்த மாணவிகளது உரிமையைப் பாதுகாத்தது. அதேபோல பதுளையில் நடந்த சம்பவத்தின் போதும் முஸ்லிம் பெண் மாணவிகளின் ஆடை உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்கள் தத்தமது கலாசார உடையில் பாடசாலைக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், அனுமதிக்க மறுத்தால் 14 நாள் விளக்க மறியலில் வைக்கப்படுவர் என்றும் இந்த விவகாரத்தின் போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்த போதிலும் அரசாங்கத்தின் உத்தரவையும் நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் பல பாடசாலைகள் நாட்டில் இயங்கி வருகின்றன. தனது உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமல் அலட்சியம் செய்யப்படுவதையிட்டு அரசாங்கமும் பாராமுகமாகவே இருக்கிறது. இதுவே இந்தப் பிரச்சினை பூதாகரமாவதற்கு காரணமாகவும் அமைகிறது.
நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரிக்கு வரும் பெற்றோரின் ஆடை தொடர்பிலும் பிரச்சினை எழுப்பப்பட்டது. தலையை மூடி அபாயா அணிந்து பாடசாலை வளவுக்குள் பெற்றோர் வருவதற்கு எதிராக பெற்றோரும் நிர்வாகமும் கிளர்ந்தெழுந்தனர். பொதுவாக நாடு முழுவதும் இதுபோன்ற பிரச்சினைகள் மேலெழுப்படுவதனை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் சகல மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்த 2016/21 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில், பிள்ளைகளின் தேவைக்காக பாடசாலைகளுக்குப் பெற்றோர் வரும்போது, பாடசாலை மற்றும் பெற்றோரின் கௌரவத்தைக் காக்கும் வகையில் முறையாக ஒழுங்கான முறையில் முறையாகவும் ஒழுங்காகவும் ஆடைகளை அணிந்து வருவதற்கும், உரிய கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்குமாறு அறியத் தருகின்றோம். அதுபோலவே அவர்களைப் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றாமலும், பாடசாலைகளுக்கு வரும் பெற்றோர்களின் ஆடையணிகள் தொடர்பாக அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் பாடசாலை அறிவித்தல் பலகைகளில் பல்வேறுவிதமான அறிவித்தல்களைக் காட்சிப்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் உங்கள் மாகாணத்தின் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அறியத் தருமாறும் மேலும் அறியத்தருகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சுற்றறிக்கைகளின்படி, மாணவர்கள் தமது கலாச்சார உடையை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கும் பெற்றோர் தமக்கு விரும்பிய உடையில் பாடசாலை வளவுக்குள் பிரவேசிப்பதற்கும் சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறது. ஆனால் பாடசாலை ஆசிரியர்கள் எந்த உடையில் பாடசாலைக்கு வர வேண்டும் என்பதை வரையறுக்கும்படியான சுற்று நிருபங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் பிரச்சினையின் தெளிவின்மைக்கு இதுவும் ஒரு காரணமாகக் கொள்ளப்படுகிறது.

முடிவாக சட்டரீதியாக முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை வழங்குவதற்கு பெரும்பான்மைச் சமூகங்களிலுள்ள இனவாதிகளுடன் இணைந்து கொண்டு, சிறுபான்மைத் தமிழர்களிலுள்ள இனவாதிகளும் மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்களையிட்டு அரசு பாராமுகமாக இருக்கிறது. இது திகனவில் பொலிசாரையும் விஷேட அதிரடிப்படையினரையும் அத்துமீறவிட்டு விட்டு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அரசாங்கத்தின் கெட்டித்தனத்துக்கு ஒப்பானது. அடுத்ததாக முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை விடயத்தில் அரசாங்கம் இதுவரை தெளிவானதொரு நிலைப்பாட்டினை எழுத்து மூலமாக வழங்கவில்லை. இந்த விவகாரத்தை முன்வைத்து முஸ்லிம் பெண்களின் ஆடை ஒழுங்குக்கான சட்டபூர்வ வடிவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் முயற்சிக்க வேண்டும்.

மீண்டும் மேலெழுந்து வரும் துகிலுறியும் கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து நாகரிகமான, பண்பாடான ஒரு சமூகக் கட்டமைப்பை நாட்டில் உருவாக்கும் பணியை அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகிறது.

2 கருத்துரைகள்:

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியால் இப்பிரச்சினையை நிறைவேற்றித்தருமாறு அவருக்கு நெருக்கமாக உள்ள அமைச்சர்கள் அவரை வேண்ட வேண்டும். 

அவர் அதற்கு உடன்படாதபோது அவரது பதிலை மக்கள் அறியுமாறு சமுகமயப்படுத்த வேண்டும்.

ஓர் நிர்வாகம் இருந்து கொண்டு அதனால் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றால் எதற்காக அவர்கள் மீண்டும் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு மக்கள் ஆதரவைக் கோர வேண்டும்?

Ulhathil muslimgal muslimaha walwadhey pirachinai muslimgalai alikawum muslimgalin markathai wayal udhi anaika ninaikindraner.but allah thanadhu markathai purana paduthikonday irukiran. Aanal ulaham aliwuku karanam muslimgalai alipadhatku anniyarhal ondru serwarhal apadi andral warudakanaku sapudadha naai wandhu apadi mamisathai kudhari kudhari pasiweri pidithu unnumo adhamadhiri muslimgalai kolluwarhal.

Post a Comment