May 09, 2018

பிரிப்பதற்கு பதிலாக, வெறுப்பூட்டுதவற்கு பகரமாக இதனை கற்றுக் கொள்வார்களா..??

* ஷெய்க் முஹம்மத் அல்- கஸ்ஸாலி (றஹ்)

ஒரு யுவதி என் அலுவலகத்தினுள் நுழைந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை அவ்வளவு பொருத்தமில்லை என்பதை முதற்பார்வையிலே அறிந்துகொண்டேன். எனினும் அவளுடைய கண்களில் நிரம்பி வழிந்த கவலையும், சஞ்சலமும் அவள் மீது பரிவை ஏற்படுத்தியது.

என்னிடம் நலவை எதிர்பார்த்து தனது கவலைகளையும், முறையீடுகளையும் அவள் முன்வைத்தாள். அவள் கூறுவதை நீண்ட நேரம் செவிமடுத்தேன். அவள் பிரான்ஸில் படித்த அறபுநாட்டு யுவதி என்பதையும், இஸ்லாம் பற்றிய அறிவு அவளிடம் இல்லை என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.

எனவே சில உண்மைகளை அவளுக்கு விளக்கினேன். சந்தேகங்களுக்கு பதில் சொன்னேன். அவளுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தேன். கிருஸ்த்தவ பிரச்சாரகர்களிதும் கீழைத்தேயவாதிகளினதும் இட்டுக்கட்டல்களுக்கு திருப்திப்படும் அளவில் பதிலளித்தேன்.

நவீன நாகரீகம் பெண்ணை காமப் பசிபிடித்த பார்வைகளுக்கு தீணிபோடும் ஒன்றாகவே விளம்பரப்படுத்துகிறது என்பதையும், கற்பும், அழகும், அமைதியும் குடும்பம் என்ற சூழுலில் மிக முக்கியமானவை என்பதை அது அறியாதிருக்கிறது என்பதையும் என்னுடைய பேச்சில் அவளுக்கு ஞாபகப்படுத்த மறக்கவில்லை.

திரும்பப் போவதாக அனுமதி பெற்று அப்பெண் திரும்பிச் சென்றாள்.

அவள் சென்றதன் பின்னர் மார்க்க அடையாளத்துடன் கூடிய ஒரு இளைஞன் அலுவலகத்தினுள் நுழைந்தான்.

அந்த அசிங்கமான பெண்ணை யார் இங்கு அழைத்து வந்தது? என கடுந்தொணியில் கேட்டான்.

சுகதேகிகளுக்கு முன்னர் நோயாளிகளையே வைத்தியர் வரவேற்பார். அதுவே அவருடைய தொழிலாகும் என பதிலளித்தேன்.

ஓகே. அதனை ஏற்கிறேன். ஆனால் அவள் ஹிஜாப் அணிய வேண்டும் என நீங்கள் உபதேசித்திருக்க வேண்டும் என அவன் சொன்னான்.

அதனை விட விடயம் பெரியது. அவளை அதற்குத் தகுதிப்படுத்த வேண்டியுள்ளது. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவது, குர்ஆனிலும் சுன்னாவிலும் வந்திருக்கும் வஹிக்கு செவிமடுத்து கட்டுப்படுவது, இபாதத்கள், ஓழுக்க விழுமியங்கள் குறித்த இஸ்லாத்தின் அடிப்படையான றுகூன்களை தெளிவுபடுத்துவது போன்றவை குறித்து அவளுக்கு சொல்லிக் கொடுப்பது மிக முக்கியம் என அவனுக்கு சொன்னேன்.

என் பேச்சை இடைமறித்த அவ்விளைஞன் அவை அனைத்தும் அவளுக்கு ஹிஜாபை வலியுறுத்துவதை தடை செய்ய வில்லை என்றான்.

அவளுடைய உள்ளத்தில் ஏகனான அல்லாஹ் பற்றி எதுமே இல்லாத நிலையில், அவளுடைய வாழ்க்கை றுகூவையோ, சுஜூதையோ அறியாத நிலையில், அவள் பக்தியான ஆடையில் வருவது எனக்கு மகிழ்ச்சியானதாக இருக்க வில்லை. நான் அவளுக்கு அடிப்படைகளை கற்பித்தேன். அந்த அடிப்படைகள் அவளை அந்த வகையான ஆடைக் கலாச்சாரத்திலிருந்து பாதுகாக்கும் என அவனிடம் அமைதியாக எடுத்துச் சொன்னேன்.

மீண்டும் அவ்விளைஞன் எனது பேச்சை இடைமறித்தான்.

நான் அவனுக்கு மிகப் பலமாக எடுத்துச் சொன்னேன். நீங்கள் செய்வது போன்று இஸ்லாத்தை அதன் வாலில் பிடித்து இழுக்கும் பணியை என்னால் செய்ய முடியாது. நான் அடிப்படை விதிகளை போதிக்கிறேன். பிறகு அதன் அடிப்படைகளின் மீது கட்டிடத்தை எழுப்புகிறேன். நான் ஞானம் எனக் கருதுவதை எத்திவைக்கிறேன்.

இரு வாரங்கள் கழித்து அப்பெண் கௌரவமான ஆடையுடன் என்னிடம் மீண்டும் வந்தாள். மெல்லிய துணியினால் தலையை மூடியிருந்தாள். மேலும் சில கேள்விகளை கேட்டாள். அவற்றுக்கும் நான் விளக்கங்கள் அளித்தேன்.

உங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் மஸ்ஜிதிற்கு நீங்கள் ஏன் போகக் கூடாது? என அவளை வினவினேன். இக்கேள்வியைக் கேட்ட பின்னர் நான் கைசேதப்பட்டேன். ஏனென்றாள் மஸ்ஜிதுகள் பெண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே அவளுக்கு தெரிவித்திருந்தேன்.

அப்பெண் என்னிடம் சொன்னாள். நான் மதகுருமார்களை வெறுக்கிறேன். அவர்கள் காது கொடுத்து கேற்க எனக்கு விருப்பமில்லை.

ஏன்? என்றேன்.

கடின உள்ளம் படைத்தோர் ; உள்ளத்தில் ஈரமற்றோர். அவர்கள் எம்முடன் கர்வத்துடன் நடந்து கொள்கின்றனர். எம்மை இழிவாகப் பார்க்கின்றனர் என்றாள்.

அவ்வேளை ஏனோ தெரியவில்லை. என் நினைவுக்கு அபூ சுப்யானுடைய மனைவி ஹின்த் வந்து சென்றாள்.

இஸ்லாத்தை கடுமையாக பழிவாங்கிய, ஹம்ஸா (றழி) அவர்களின் ஈரலை சப்பித் துப்பிய பெண் அவள். அவளுக்கு இறைதூதரைப் பற்றி தெரியாது. ஆனால் அவரை அறிந்த போது அவரிடம் நெருங்கினாள். அவரை விசுவாசம் கொண்டாள். பின்வரும் வார்த்தைகளை உதிர்த்தாள்.

‘அல்லாஹ்வின் தூதரே! இப்புவியின் மீது உங்களை விட மிக வெறுப்புக்குரியவர் யாரும் இருக்கவில்லை. இன்று உங்களை விட மிகக் கண்ணியமானவர் இப்புவியில் யாருமில்லை’.

இறைதூதரின் உள்ளத்தில் பிரவாகித்து எழுந்த அன்பு உள்ளங்களை ஒரு நிலையிலிருந்து இன்னுமொரு நிலைக்கு மாற்றியது.

பிரிப்பதற்கு பதிலாக இணைக்கும் பணியைச் செய்த, வெறுப்பூட்டுதவற்கு பகரமாக சுபசோபனங்களைக் கூறிய தமது நபியிடமிருந்து தாஈக்கள் இதனை கற்றுக் கொள்வார்களா?

தமிழில் ஏ.டபிள்யூ . எம் . பாஸீர்

6 கருத்துரைகள்:

This is ISLAMIC TEACHINGS... Nowadays ISLAM became very radical bicos of uneducated Mowlavis..

So beautiful.. Some aspire on the aesthetics with paying less or no importance to development of inner-self.

Da'wa is not an easy thing. A person should have good knowledge on how to give Da'wa. People were attracted towards Prophet Muhammad (SAW) because of his humbleness, kindness, and intelligence.

Post a Comment