Header Ads



ஆசிரியர்களின் மூலம் மாணவர்க்கு ஏற்படும், அநீதிகள் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளன - ஜனாதிபதி

ஜனாதிபதி என்ற வகையில் தனக்கு வரும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சில கலந்துரையாடல்களின் போது தெரிவிக்கப்படும் விடயங்களுக்கேற்ப ஆசிரியர், மாணவர் தொடர்பு குறித்தும், ஆசிரியர்களின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், அநீதிகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த நிலைமை குறித்து அதிகாரிகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று (23) பிங்கிரிய வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிலை ஒரு உன்னதமான பணியாக கருதிய அன்றைய யுகத்திற்கும் ஆசிரியர் தொழிலை தொழிலாக மட்டுமே கருதுகின்ற இன்றைய யுகத்திற்குமுள்ள வேறுபாட்டை விளக்கிய ஜனாதிபதி, ஆசிரியர் தொழில் என்பது தேசத்தை கட்டியெழுப்புகின்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு தொழிலுக்கும் இரண்டாம் பட்சமாக கருத முடியாத உன்னதமான தொழிலாகும் என்று தெரிவித்தார்.

இன்று ஆசிரியர் சேவையிலுள்ள 250,000க்கும் மேற்பட்டவர்களிடையே அந்த உன்னதமான தொழிலுக்கு பொருத்தமற்ற எட்டு அல்லது ஒன்பது வீதமானவர்கள் இருப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அது கல்வித் தகைமைகளுக்கேற்ற வகையில் அல்லாது தமது சேவையின் மீது இருக்கும் மதிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறன்கள் மீது காட்டும் பலவீனத்தின் அடிப்படையிலாகும் என்று குறிப்பிட்டார்.

ஆசிரியர் தொழிலிலும் அரசாங்க சேவையிலும் அரசியல் துறையிலும் உள்ள இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, எந்தவொரு துறையினதும் அங்கீகாரமும் கௌரவமும் பாதுகாக்கப்படுவது அத்துறையிலிருக்கின்றவர்கள் சமூகத்திற்கு வழங்கும் பண்பாடு மற்றும் முன்மாதிரியின் மூலமேயாகும் என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.