May 31, 2018

ரமழான் பிறை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கை

இன்று சர்வதேச ரீதியில் காணப்படும் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் முறைகளில் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கும் முறையே குர்ஆனினதும் ஹதீஸினதும் வழிகாட்டலுக்கு மிகவும் நெருங்கிய முறையாகும். இதனையே பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் முன்மொழிந்துள்ளனர்.
அத்துடன் பிறை மாதத்தை ஆரம்பிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபாடு காணப்படலாம். ஓரிடத்தில் கண்ட பிறையை முழு முஸ்லிம் சமூகமும் செயற்படுத்தியது என்பதை கடந்த 1400 வருட காலங்களில் காண்பதற்கில்லை. மாறாக, சஹாபாக்களின் செயற்பாடுகள் அவர்கள் ஆங்காங்கே கண்ட பிறையின் அடிப்படையிலேயே செயற்பட்டுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகின்றன. அதை முஸ்லிம் ஷரீபில் வரக்கூடிய சம்பவம் மிகவும் தெளிவு படுத்துகின்றது.  

குரைப் ரஹிமஹுல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியாவில் இருந்த வேளை, உம்முல் ஃபழ்ல் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னை சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். சிரியாவுக்குப் போய் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன். நான் சிரியாவில் இருந்த வேளையில் ரமழான் பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் தலைப்பிறையைக் கண்டேன். அம்மாதத்தின் இறுதியில் நான் மீண்டும் மதீனா வந்தேன். என்னிடம் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் எனது பயணம் குறித்து விசாரித்தார்கள். பின்னர், பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். 'நீங்கள் எப்போது பிறை கண்டீர்கள்?' என்று (என்னிடம்) கேட்டார்கள். 'வெள்ளிக் கிழமை இரவு பிறையைப் பார்த்தோம்' என்று சொன்னேன். அப்போது 'நீங்களே பிறையைக் கண்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு 'ஆம் நானும் கண்டேன், மக்களும் கண்டனர், மக்களும் நோன்பிருந்தனர், முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் நோன்பிருந்தார்கள்;' என்றேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் 'நாங்களோ சனிக்கிழமை இரவே பிறையைக் கண்டோம். எனவே மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தியாக்கும் வரை தொடர்ந்து நோன்பிருப்போம். (தலைப்) பிறையை நாம் கண்டாலே தவிர' என்றார்கள். 'முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறையைக் கண்டதும், நோன்பிருந்ததும் உங்களுக்குப் போதுமானதாகாதா?' என்று கேட்டேன். 'இல்லை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  இப்படித்தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் ஷரீபில் (1087) வருவது போல் திர்மிதி (693), அபூ தாவூத் (2332), நஸாயீ (2111), முஸ்னத் அஹ்மத் (2789) போன்ற கிரந்தங்களிலும் இடம்பெறுகின்றது. 
மேற்குறித்த கிரந்தங்களில் இந்த ஹதீஸைப் பதிவு செய்யும் போது 'ஒரு நாட்டில் காணப்படும் பிறை அந்த நாட்டவர்களுக்கே' என்ற கருத்திலே தலைப்பிட்டுள்ளார்கள். மேலும் ஹிஜ்ரி 210 முதல் ஹிஜ்ரி 279 காலப்பகுதிக்குள் வாழ்ந்த இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு 'மார்க்க அறிஞர்களிடத்தில் இந்த ஹதீஸின் பிரகாரமே செயல் காணப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வருடம் ரமழான் மாதத்தின் தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான ஒன்றுகூடல் வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அதன் பிறைக் குழுத் தலைவர் அஷ்-ஷைக் ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 2018.05.16 ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது. அவ்வொன்றுகூடலில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள், அதன் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிழ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, உதவிச் செயலாளர்களில் ஒருவரான     அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஃபத்வா குழு செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் மற்றும் உறுப்பினர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் மேமன் ஹனபிப் பள்ளிவாசல் நிருவாகிகள் கலந்து கொண்டனர். 

இக்குழு நாடெங்கிலும் உள்ள தமது உப பிறைக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டதோடு கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாரை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களினதும்  காத்தான்குடி, அகுரணை, கண்டி, மாவனல்லை போன்ற முப்பத்தி ஐந்திற்கும் மேற்பட்ட பிரதேசங்களின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டனர். அன்றைய தினம் வெற்றுக் கண்களுக்கு பிறை இலகுவாக தென்படும் வாய்ப்பு இருப்பதாக வானியல் கணிப்பீடு காணப்பட்டபோதிலும் மஃரிபை அண்டிய நேரத்தில் கால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் நாட்டில் பல பாகங்களும் மழையும் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டன. நாட்டில் எவ்விடத்திலிருந்தும் பிறை தென்பட்டதற்கான தகவல் கிடைக்கப் பெறவில்லை. அனைவரும் பிறை தென்படவில்லை என்றே அறிவித்தனர். ஆகவே, அங்கு கூடியிருந்த உலமாக்கள் உள்ளிட்ட குழுவினர் பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! அம்மாதம் (மேக மூட்டத்தால்) உங்களுக்கு மறைக்கப்பட்டால், ஷஃபானின் எண்ணிக்கையை முப்பதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்! (ஸஹீஹுல் புகாரி 1909) என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றுக்கிணங்கவும் ஜம்இய்யாவின் தலைப்பிறையைத் தீர்மானிப்பது தொடர்பிலான தீர்மானத்தின் அடிப்படையிலும் ஷஃபான் மாதத்தை பூரணப்படுத்தி 18.05.2018 வெள்ளிக்கிழமை ரமழான் மாதத்தை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்தனர்.

தலைப்பிறையைத் தீர்மானிப்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஐந்து அடிப்படைகளைக் கொண்ட தீர்மானம் 

பிறை தொடர்பாக ஷரீஆக் கண்ணோட்டத்தில் ஆழமானதோர் ஆய்வை மேற்கொள்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு விஷேட நிபுணத்துவக் குழுவை நியமித்தது. குறித்த குழு பல மாதங்கள் பிறை தொடர்பான சட்டப் பிரச்சினைகளை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைப் பீடத்திடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து கடந்த 2006.09.06 இல் பிறை தொடர்பான இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விஷேட அமர்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இவ்வமவர்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பிலும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் சார்பிலும் முக்கியமான ஆலிம்கள் கலந்து கொண்டனர். அங்கு பின்வரும் ஐந்து அடிப்படைகள் தீர்மானங்களாக முடிவு செய்யப்பட்டன. 

உள்நாட்டில் பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய மாதம் தொடர்பான அனைத்து முடிவுகளும் பெறப்படும்.

பிறை பார்த்தலின் போது வெற்றுக் கண்ணால் பார்த்தல் அடிப்படையாகக் கொள்ளப்படும்.
ஒரு நாளின் பிறை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காண முடியாத நாளாகக் கொள்ளப்படும்.

வானியல் துறையில் புலமைப் பெற்ற ஒரு முஸ்லிம் அறிஞர் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவிற்குத் துணையாகச் செயற்படும்.

பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது அசாத்தியமானது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படல் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கு அல்லது பெருநாள் கொண்டாடுவதற்கு பிறரைத்தூண்டவோ, பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.

மேற்கூறிய இந்த அடிப்படைகளை வைத்தே நமது நாட்டில் தலைப்பிறையைத் தீர்மானித்து அறிவிக்கும் பொறுப்பு வாய்ந்த அமைப்புகளான கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன மாதாந்தம் தலைப் பிறையைத் தீர்மானித்து அறிவித்து வருகிறன. அவ்வாறே 2014 ஆம் ஆண்டிலிருந்து, தலைப் பிறை பார்த்தலில் ஏற்படும் தவறுகளையும் குறைகளையும் முடியுமான அளவு குறைத்தல், முரண்பாடுகளையும் குழப்பங்களையும் இல்லாமலாக்குதல் என்ற நோக்கில் பிறை தென்படும் வாய்ப்பு அதிகம் காணப்படும் பகுதிகளை இனங்கண்டு அப்பகுதிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழுக்களை இவ்வமைப்பு நியமித்து பிறை பார்த்தலில் ஈடுபட்டதன் விளைவாக முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தவிர்த்து செயற்பட்டு வருவதை தற்போது நாம் காணக்கூடியதாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! 

முஸ்லிம் சமூகம் ஒரே பிறையைப் பின்பற்றுவதன் மூலமே முழு உலகத்திலும் ஒரே நாளில் நோன்பு நோற்று, பெருநாள் கொண்டாடி தமது ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும் என்ற ஒரு கருத்து பரவலாகப் பேசப்படுவதுண்டு. உண்மையில் இக்கருத்து அடிப்படையற்ற ஒரு கருத்தாகக் காணப்படுவதுடன் அறிவு பூர்வமற்ற சாத்தியமற்ற ஒன்றாகவும் இருக்கிறது. காரணம், உலகத்தில் ஒரே நேரத்தில் இரவு, பகல் என்ற இரு நிலமைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஒரே வேளையில் பகுதிக்குப் பகுதி நேரம் வித்தியாசம் காணப்படும். அத்துடன் 24 மணித்தியாலத்தில் உலகளவில் இரண்டு நாட்கள் நடைமுறையில் இருக்கும். இவையெல்லாம் அறிவியல் சார்ந்த பொதுவான விடயங்களாகும். எனவே சாத்தியமற்ற ஒன்றை ஒற்றுமையை வெளிப்படுத்தல் என்ற பெயரில் சாத்தியப்படுத்த முயற்சிப்பது பொருத்தமான ஒன்றல்ல. 

இபாதத்துகள் மார்க்க வழிகாட்டலில் செயற்படுத்தப்பட வேண்டியவைகள். ஒற்றுமையை உள்ளங்களில் ஏற்படுத்திக் கொள்வது, ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமை மதிப்பது, நல்ல பண்புகளோடு பழகுவது, ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் வழங்குவது, பொருளுதவிகளை வழங்குவது, சொந்தங்களை சேர்ந்து வாழ்வது, ஒருவர் மற்றவருக்கு சிரமம் கொடுக்காமலிருப்பது, முஸ்லிம்கள் தமக்கிடையே பிளவுகளையும் பிணக்குகளையும் தவிர்த்துக் கொள்வது போன்ற இன்னோரன்ன விடயங்களின் மூலமே முஸ்லிம்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.  மாறாக கருத்து வேற்றுமை இருக்கும் ஒரு மார்க்க சட்டத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் மற்றவரை தவறில் இருப்பதாக ஒருவரை ஒருவர் ஏசிப் பேசிக் கொள்வதும், தூசிப்பதும், அவமானப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும், கொச்சைப்படுத்துவதும் பொருத்தமற்ற, இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான செயற்பாடுகளாகும். இந்த சமூகம் ஒருவரை ஒருவர் ஏசிப் பேசிக் கொள்ளுமாக இருந்தால் அல்லாஹு தஆலாவின் அருளிலிருந்து தூரமாகிவிடும். ஒரு முஸ்லிமின் மானம் பெரிதும் மதிக்கத்தக்கதாகும்.  'உங்களது இந்த மாதத்திலே உங்களது இந்த நாட்டிலே உங்களது இந்த நாளுக்கு இருக்கும் சங்கையைப் போன்று, உங்களுடைய இரத்தங்களும் சொத்துக்களும் மானங்களும் உங்கள் மீது சங்கையானதாகும்.' (ஸஹீஹுல் புகாரி 1739) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். 

உலக மட்டத்தில் இவ்வருடம் ரமழான் மாதம் துருக்கி போன்ற நாடுகளில் 16 ஆம் திகதி புதன்கிழமையும், சவூதி மற்றும் பெரும்பான்மையான நாடுகளில் 17 ஆம் திகதி வியாழக்கிழமையும், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்த மார்க்க அறிஞர்களும் யாரைப் பார்த்தும் தவறில் இருப்பதாக குறிப்பிட்டது கிடையாது. அவரவர் பகுதிகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரமே அவர்கள் செயற்படுகிறார்கள் என்பதாகவே இந்த வேறுபாட்டைப் பார்க்கிறார்கள். இதுவே மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். 

அத்துடன் மேகக்கூட்டம் அல்லது சீரற்ற காலநிலை காரணமாக ஷஃபான் மாதம் 30 நாட்களாக பூர்த்திசெய்யப்பட்டு ரமழானில் 28 நோன்புகள் மாத்திரம் கிடைக்கும் நிலை ஏற்பட்டால், இதற்கு ஷரீஆவில் அழகிய வழிகாட்டல்கள் காணப்படுகின்றன. இந்நிலை ஏற்கனவே வரலாற்றில் பல தடவைகள் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய வழிகாட்டல்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவால் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். 

அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் 
பிறைக் குழு செயலாளர் 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  

7 கருத்துரைகள்:

Was there a committee to decide the day of fasting during or after the period of Rasoolullah(Sal)?

Muslim community in Sri Lanka is used to listen to the SLBC’s Musleem Nikalchi (Muslim program) for decades, for knowing the first sight of moon. This announcement was made by Grand Mosque for more than 200 years. I don’t know how ACJU sneaked into this committee for deciding the moon. But they very systematically have used this opportunity for publicizing their name thru this radio channel and now has become shade leaders of Muslim community. Other than this, no body has chosen them to be leaders of our community. Now they have advanced as a deciding factor on religious matters.

Even in our country, the executive president can hold office only twice, but the present leader of ACJU Rizvi Mufti is holding his office for more than 25 years. We can imagine the rest.

On 6-9-2006, AJCU has received a new set of revelation of sharia law for sighting of first moon thru a special professional committee whom they have appointed themselves. But they have not mentioned who were these professional awliaas. As per the new ACJU’s sharia law, even some body or a group of people saw the first moon with his/their own eyes, they will not accept it, if one of their awliaa says “today not possible to see the moon”. They will trust their member but other Muslims. Moreover, if someone uses set of eye glass to see the moon, that’s also not acceptable. But ACJU awliaas can use reading glasses for their day to day work.

During Prophet Mohamad’s time, there were no separate Arabic countries but Arabic cities. Also there was communication problems. So they used to see themselves with their own eyes. As per the story, during muawia’s time, that is 48 years after prophet, moon sighted in Syria was not accepted in Madina. Then, how the moon sighted in other parts of our island, can be accepted in Colombo. There is a hadeeth says if someone travel more than 7 km, can avoid fasting. Accordingly, will you say that these travelers don’t need to fast even in this 21st century?

Most recent stupidity saying of Rizvi Mufti “you are not going to lose anything, if you lose one day in Ramadhan”. Ya Mufti: do you know the fasting is haraam on Eid (festival) Day. You make the whole Sri Lankan Muslim community to commit this haram at least twice a year. May be that’s the reason why our community is facing so many lahnath from recent time. You are answerable for that.

I am not saying that we should do what others do in other countries. What I am saying is we as one Muslim community should start fasting and celebrate Eid in one day. The fithna to start fasting and celebrate Eid on different days in different cities began because of ACJU. Once when I woke up for sahar, it was announced that moon was sighted and that was Eid day.

These nonsense has to be stopped. The whole country has to start fasting and celebrate Eids on one single day. I’m working on that.

ஜஸாக்கல்லாஹ்...

Post a Comment