Header Ads



தென் மாகாணத்தை மிரட்டிய, வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, அம்மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரையில் மூடிவிட தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

குறித்த வைரஸ் காய்ச்சல் முன் பள்ளி சிறுவர்கள், அந்த வயதை அண்டிய வயதுப் பிரிவினரை வெகுவாக பாதிக்கும் நிலையிலேயே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.

இதனிடையே குறித்த வைரஸ் காய்ச்சலை ஏர்படுத்தும் இன்புளுவென்ஸா வைரஸ்,  எடினோ வைரஸ்,  நியூமோகொக்கல் பக்டீறியா தாக்கத்துக்கு உள்ளான மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கொழும்பு வைத்திய பரிசோதனை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆராய்ந்த போதே இன்று இந்த 22 பேரும் குறித்த வைரஸ் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 ஏற்கனவே இந்த வைரஸ் தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் தகவல்கள் வெளிப்படுத்திய நிலையில், அவர்களில் 12 பேர் சிறுவர்களாவர். மற்றையவர் கர்ப்பிணித் தாயாவார்.

தென்மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி கராபிட்டிய வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்தியசாலை, எல்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய ஆரம்ப வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக அறிய முடிகின்றது. 

 இந் நிலையில் குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடன் பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு உத்தர்விட்டுள்ளார். 

அதன்படி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவசியமான ஹைப்லோ ஒட்சிசன் இயந்திரங்கள் 10 காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வைத்தியர்கள் கோரும் அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன் பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச க்கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் இந்த வைரஸ் தொற்று காரணாமாக இலகுவில் பாதிக்கப்படக் கூடியவ்ர்களாக  காணப்படுவதாகவும் அவர்களுக்கு தனி நபர் பாதுகாப்பு முறைமைகளை கையாள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 

 குறிப்பாக பொது இடங்களில், மூக்கு, வாய் என்பவற்ரை மூடும் வகையிலான பாதுகாப்பு மூடிகளை அணிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

 காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ள இந்த வைரஸ் தொற்று தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், பிள்ளைகளை முன்பள்ளி உள்ளிட்ட தனியார் வகுப்புகளுக்கோ அனுப்ப வேண்டாம் எனவும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க பெற்றோரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந் நிலையில் தடிமன், காய்ச்சல், இருமலுடன் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பெற்றோரை அழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதேவேளை, குறித்த வைரஸ் தொற்றுக் காரணமாக மாத்தறை, முலட்டியான, அக்குரஸ்ஸ, தங்காலை, வலஸ்முல்ல மற்றும் காலி கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் 1 முதல் தரம் 5 வரையான அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 22 ஆம், 23 ஆம் திகதி மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. From Where? How this virus coming ? What is the precaution to prevent this Virus? ??

    ReplyDelete

Powered by Blogger.