May 22, 2018

இலங்கையில் பத்வா வழங்க, ஒரு சுதந்திர சபை தேவையா..?

மீள்பார்வை மே மாதம் 04ந் திகதி வெளிவந்த 'இன்றைய உடனடித் தேவை ஆய்வுக்கும் ஃபத்வாவுக்குமான ஒரு சுதந்திர சபை' என்ற கட்டுரைத் தொடர்பாக சில கருத்துக்களை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.

கட்டுரை ஆசிரியர் ரவூப் ஸெய்ன் என்பவர் ஒரு சிறந்த ஆய்வாளரும் எழுத்தாளரும் என்பது யாவரும் அறிந்ததே. நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு முன் வைப்பவர். அந்த வகையில் குறித்த கட்டுரை அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. சமூகத்துக்கு எது நல்லதாக அமையுமோ அதனை அடைந்து கொள்ள அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.

கட்டுரை ஆசிரியர் ஒரு நளீமிய்யா பட்டதாரி ஆவார். அவர் போன்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் சேர்ந்து அவரது கருத்துக்களை சமர்ப்பித்து வழிகாட்டினால் மிகவும் பெறுமதிமிக்க விடயமொன்றை செய்தவராகிறார். அதை விட்டு விட்டு வெளியே நின்று கொண்டு உலமா சபையை விமர்சித்து வேறு சபையை உருவாக்க நாடுவது எந்தளவு புத்திசாலித்தனமானது என்பதை கட்டுரையாசிரியர் சிந்தித்துப் பார்ப்பதே ஏற்புடையது. 

கட்டுரையாசிரியர் குறிப்பிட்டது போன்ற ஒரு சபை இந்த நாட்டில் இருந்ததை நாம் அறிவோம். 'இஸ்லாமிய ஆராய்ச்சி மஜ்லிஸ்' என்ற பேரில் இயங்கியது. அதிலே உலமாக்கள், புத்திஜீவிகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் இருந்தனர். சில காலங்களின் பின் அது செயலற்றுப் போய் தற்போது இல்லாமலாகிவிட்டது. அதனை நிருவியவர்கள் அனைவருமே வபாத்தாகிவிட்டனர். அல்லாஹ் அவர்களை மன்னித்தருள்வானாக.

அன்றிருந்த உலமா சபை இன்றும் இருந்து வருகிறது. சுமார் ஒன்பது தசாப்தங்களைத் தாண்டிய அதன் பணிகள் முன்னைய காலத்தை விட விசாலித்துள்ளது. தனது சக்திக்கேற்ப அது சமூகத்துக்கேற்ற வழிகாட்டல்களை தீர்ப்புக்களை வழங்கி வருகிறது என்பது இந்நாட்டு முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ளனர். வேறெந்த ஒன்றுக்கும் இல்லாத சமூக அங்கீகாரம் உலமா சபைக்கு உண்டு என்பதை மறுதலிக்க முடியாது. அதே நேரம் அதனை விரும்பாத ஒரு சிலர் இருப்பார்கள் என்பதை மறைக்கவும் முடியாது.

இந்நாட்டு மக்களில் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஷாபிஈ மத்ஹபைத் தொடர்பவர்களாகவும் மற்றும் சிலர் ஹனபீ மத்ஹபைச் சேர்ந்தோராயிருப்பது போலவே இரண்டையும் தொடராத ஒரு சாரார் இருந்து வருவதை நாம் மறுக்க முடியாது.

அதே நேரம் 'இன்று இடம், சூழ்நிலை, வர்த்தமானம் குறித்த குறைந்த பட்ச பிரக்ஞையுமின்றி இடக்கு முடக்காகவும் குறுக்கு மறுக்காகவும் ஃபத்வா கொடுக்கப்படுகின்றது' என்று குறிப்பிடுவது நல்லதொரு முன்வைப்பல்ல. வசன நடை நன்றாக இருந்தாலும் பல தசாப்தங்கள் செய்த சன்மார்க்கப் பணி செய்த செய்து கொண்டிருக்கின்ற ஒரு ஸ்தாபனத்தைக் கொச்சைப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கிறேன்.

மேற்படி கட்டுரை இரண்டாவது பந்தியில் நடைமுறை வேண்டி நிற்கும் தீர்ப்பை அறிந்து இலட்சிய வாதத்தைத் தாண்டி யதார்த்தத்திற்கு இறங்கி வருபவனே உண்மையான சட்ட அறிஞன். வழக்காறு, காலம், இடம், சூழ்நிலை என்பவற்றை கருத்திற்கொண்டே இத்தகைய சட்ட அறிஞர் ஃபத்வா வழங்க வேண்டும் என்கிறார் இமாம் இப்னுல் கையிம்' (றஹ்மத்துல்லாஹி அலைஹி).

இந்த அடிப்படையில் தான் கால, நேர, இடம், சூழ்நிலை அறிந்தே உலமா சபை தீர்ப்பை அல்லது வழிகாட்டலைச் செய்கிறது. 

அதனால் தான் 2003.09.24 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பின்வரும் தீர்மானத்தை எடுத்தது.

'ஃபத்வாக்களை வழங்குவதில் 'ஷாபிஈ' மத்ஹபின் கருத்துக்களை மையமாக வைத்து செயல்படுவது தேவைப்படின் ஏனைய அறிஞர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்வது. அத்துடன் எந்தவொரு கருத்தையும் அதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் விளங்கி அவைகளுக்கேற்ப தீர்ப்பு வழங்குவது'.
கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட படி மஜ்லிஸுஸ் சூரா உலமா சபைக்கு சமர்ப்பித்த 100 மஸ்அலாக்களுக்கு தீர்ப்ப வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது பற்றி உலமா சபை ஃபத்வாக் குழு பின்வருமாறு கூறியது. 'எமக்கு சூரா சபையிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டது வெறும் 32 கேள்விகள் மாத்திரமே'.

எனவே மனதிலுள்ள வெறுப்பை வெளிப்படுத்த கட்டுரையாசிரியர் 100 மஸ்அலாக்கள் என மிகைப்படுத்திக் கூறியது மாபெரிய அபத்தமாகும். பிரபல்யமிகு ஒருவரது எழுத்தாக அது இருந்திருக்கலாகாது. 

குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பல விடயங்களை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் சில விசயங்களை கட்டுரையாசிரியருக்கு ஆலோசிக்க விடுகிறோம். உலமா சபை கொழும்பு மத்தியில் உள்ளது. எப்போதாவது ஆசிரியர் அங்கு சென்று தன் ஆலோசனைகளை கருத்துக்களை முன் வைத்துள்ளாரா? உலமா சபை யாப்பின் படி அஷ்ஷைக் சான்றிதழ் பெற்றோர் அங்கத்துவம் பெறலாம். இவர் நளீமி ஷைக் என்ற வகையில் இவர் உறுப்புரிமையை ஏன் எடுக்காதிருக்கிறாரோ தெரியாது? 

'ஜம்இய்யாவினால் அங்கீகரிக்கப்பட்ட அரபுக் கல்லூரி அல்லது ஜாமிஆவின் மவ்லவி அல்லது ஆலிம் அல்லது அஷ்ஷைக் சான்றிதழ் அல்லது இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் அல் ஆலிம் இறுதிப்பரீட்சையின் சான்றிதழ் வைத்திருக்கின்ற அல்லது ஜம்இய்யாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகமொன்றில் அரபு மொழி மூலம் இஸ்லாமிய சன்மார்க்கத்துறையில் பட்டம் பெற்ற சகல முஸ்லிம் இலங்கைப் பிரஜைகளும் ஜம்இய்யாவில் அங்கத்துவம் வகிக்கலாம்'. (யாப்பு – பக். 03)

நாம் விரும்பியோ விரும்பாமலோ சமூக அங்கீகாரத்தோடு இயங்கி வரும் உலமா சபையில் ஜாமிஆக்களை விடவும் கூடுதலான பாடங்களை நடாத்தி பல வருடம் அனுபவம் பெற்றவர்கள் உயர் மட்டத்திலும் ஃபத்வா சபையிலும் உள்ளனர். தனிச் சிங்களத்தில் சன்மார்க்கப் பாடநெறியைப் பூர்த்தி செய்தோர் இருப்பது போலவே தனி ஆங்கில மொழி மூலம் குறித்த பாடநெறியை முடித்துக் கொண்டோர் உலமா சபையில் அங்கத்துவம் பெறுகிறார்கள் என்பதையும் அவர்களே இன்று நாடளாவிய ரீதியில் அம்மொழிகளில் குத்பாப் பிரசங்கங்கள், மாற்று மத சகோதரர்களோடு கலந்துரையாடல்கள் போன்றவற்றை நடாத்துகின்றனர் என்பதை மறைக்க முடியாது. 

எனவே, தலைவலிக்கு தலையணையை மாற்றாது உரிய பரிகாரம் செய்வதே விவேகமானதாகும். உலமா சபையில் அங்கத்துவம் பெற்று அதனை வழிநடாத்துங்கள். ஃபிக்ஹுல் அகல்லிய்யாவைப் புரிய வையுங்கள் என வினயமாக வேண்டிக் கொள்கிறேன். 

எமது சன்மார்க்க நூல்கள் பழைமை வாய்ந்தவை தான். அவை பயனுள்ளவை. சகல ஹதீஸ், தப்ஸீர் கிரந்தங்களும் பழைமை வாய்ந்தவை தான். அவற்றிலிருந்து பெறப்பட்ட சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் அறிஞர்களே ஃபத்வா என்பது கால, வர்த்தமானங்களுக்கேற்ப வேறுபடும் தன்மை வாய்ந்தன என்ற அடிப்படையைக் கூறியவர்கள். அதனை அடிப்படையாகக் கொண்டே கட்டுரையாசிரியர் குறிப்பிடும் உலமாஉல் நுஸூல், உலமாஉல் வாகிஆ என்ற சொற் பிரயோகத்தில் குறிப்பிடும் அறிஞர்கள் பேசுகின்றனர். நம் நாட்டு உலமா சபை நூற்றுக்கு நூறு சரியானது எந்தப் பிழையும் நிகழாதது ஷீஆக்கள் தம் இமாம்களுக்குக் கூறும் 'இஸ்மத்' என்ற தன்மை உள்ளது என யாரும் குறிப்பிட முடியாது. மாறாக, அது பெரிய பணியொன்றை நிறைவேற்றுகின்றது என்பதை மறுக்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தை வைத்து முப்திகள் என்போர் மூன்று மாத கற்கை நெறியை முடித்தவர் என்ற பொருள்பட கட்டுரையாசிரியர் எழுதியுள்ளது மிகவும் விசனிக்கத்தக்கது. அவருடைய பாஷையில் கூறுவதாயின் எந்த ஆய்வும் எதிர்கால நோக்குமற்ற கூற்றென்பதைக் கூறி வைக்கிறேன். 

தல்துவை பவாஸ்

13 கருத்துரைகள்:

Very good explanation.
May allah guide them right path

தகுதி வாய்ந்த மார்க்க அறிஞர்களைக் கொண்டு சேவையாற்றி வரும் உலமா சபையை, தமக்கு அல்லாஹ் தந்த அறிவையும் தகுதியையும் கொண்டு பலப்படுத்துவதே முஸ்லிம்களது  ஒற்றுமைக்குச் செய்யும் பெரும் பணியாகும்.

ஜஸாக்கல்லாஹ் கைரா

பாரகல்லாஹ் லக ஷைக் பவாஸ், அருமையான நடுனிலை வழுவாதவிளக்கம்

உலமா சபையை பலப்படுத்துவதே காலத்தின் தேவை.

Very constructive, I think this write UP need to reach the public to be cleared with the misconceptions raised by so called writers.

Excellent and well said brother. May Allah Bless you and increase your knowledge.

Very constructive, this need to reach the public to be cleared by the misconception raised by the so called writer

அல்குரான் அல் ஹதீசுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஷாபி மதுகபுக்கு முக்கியத்துவம் கொடுக்கம் சபை முஸ்லிம்களுக்கு சிறந்த தீர்வை கொடுக்காது அது எப்போதும் வளைந்து நெளிந்து திரித்து யாருக்கும் நோகாமல் வஹி எக்கேடு கேட்டாலும் பிரச்சினை இல்லை என்று தான் தீர்ப்பு கூறும். மேலும் இந்தன் தலைவர் ரிஸ்வி முப்தி இந்த தலைமை பொறுப்புக்கு எந்த வகையிலும் தகுதி அற்றவர் என்று கிண்ணியா பிறை விவகாரத்தில் ஒரே ஷீயா மத போராவின் தீர்ப்பை நம்பி பெருநாளை ஒத்தி வைத்தே போதே புரிந்துவிட்டது

Mohamed imtiyas neenga nonbo?
Neenga alhamdu surah wa nalla otha mudiyuma endu riswe mufthikita poi
Check pannawum

Post a Comment