Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் இனச்சுத்திகரிப்பும், மாட்டிறைச்சி விவகாரமும்

-ருஷாங்கன்-

1990 ஒக்டோபர் 30

திடீரென யாழ்ப்பாண வீதிகளெல்லாம் மக்கள் கூட்டம். 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே - முஸ்லிம்களே வீதிகளை நிறைத்திருந்தனர். 

அவர்கள் ஊரைவிட்டுப் போகிறார்களாம் என்று சொல்லப்பட்டது. 

ஏன்........? 

முதல்நாள் இரவு யாழ்ப்பாணத்தில் அவர்கள் வாழும் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் உடனடியாக ஊரைவிட்டு வெளியேறுமாறு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாம் என்று பிறகு அறியக்கிடைத்தது. 

கையில் ஒரு பையும், இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபா காசும் மட்டும் எடுத்துக்கொண்டு மிகுதி அனைத்தையும் விட்டுச்செல்லுமாறு அவர்களுக்குப் பணிக்கப்பட்டதாம். 

யாரும் எதுவும் கேட்கவில்லை. கேட்க நாதியற்றவர்களாக கூட்டம் கூட்டமாக எங்கள் கண்களுக்கு முன்னாலேயே அவர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிச் சென்றுகொண்டிருந்தனர். 

அலுவலகங்களில் கூடப் பணியாற்றியவர்கள், கூடக் கற்பித்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெரும் வர்த்தக நிலையங்களின் சொந்தக்காரர்கள் என்று எல்லோருமே தம் கண்முன்னால் வெளியேறிச் சென்றுகொண்டிருப்பதை அனைவருமே மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அப்போது விரிவுரையாளராக இருந்த தமிழ்ப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களும் இப்படியே வெளியேறியதாக பின்னர் அறியக்கிடைத்தது. 

மனிதவுரிமை பற்றி இப்போது வாய்பிழக்கும் யாழ் பல்கலைக்கழக சமூகம் அப்போது வாய்பொத்தி மௌனமாகவே இருந்தது. 

“அவர்கள்” செய்தால் சரியானதாகத்தான் இருக்கும் என்ற வரட்டு நியாயப்படுத்தல்கள் ஒருபுறம். 

“கடைக்குள்ள வாள்கள் இருந்ததாம். அவையிற்றை பெரும் திட்டம் இருந்ததாம்“ என்ற சப்புக்கொட்டல்கள் ஒருபுறம். 

நமக்கேன் வம்பு என்ற வழமையான யாழ்ப்பாணத்தாரின் செயலற்றதனம் ஒருபுறம் என்று, 

அந்த அநியாயத்தை அப்போது யாரும் தட்டிக்கேட்க முன்வரவில்லை. 

ஒரே நாளில் ஒன்றாக வாழ்ந்த ஒரு சமூகம் முற்றாக வெளியேறி அவர்கள் வாழிடங்களெல்லாம் சூனியம் கொண்டது. 

1995 ஒக்டோபர் 30

யாழ் மாவட்டத்தின் பல முனைகளிலிருந்தும் இலங்கை இராணுவத்தினரின் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.  

எல்லாப் பக்கங்களிலும் யுத்தம் - அழிவு - இடப்பெயர்வு அவலங்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. 

நாளுக்கு நாள் “இங்கை வந்திட்டாங்களாம், அங்கை வந்திட்டாங்களாம்“ என்று கதைகள் பரவிக்கொண்டிருந்தன. 

ஆனாலும், ”பெடியள் விடமாட்டாங்கள்” என்று சனங்கள் நிம்மதியாக காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தன. 

திடீரென ஒரு அறிவுப்பு. 

எல்லாரையும் வெளியேட்டாம். 

1990 ஒக்டோபரில் ஒரு சமூகத்துக்கு இந்தக் கட்டளையை இட்ட அதே தரப்பிலிருந்தே இந்த அறிவுப்பும் வந்தது. 

வீதிகளெல்லாம் சனக்கடல். செம்மணி வெளி மக்கள் கூட்டத்தால் மூச்சுத் திணறியது. அடிமேல் அடி வைத்து யாழ்ப்பாணத்தை விட்டுச் சனங்கள் வெளியேறின. 

நாவற்குழி வந்ததும் பெரும்பாலானவர்கள் சாவகச்சேரி நோக்கியும், இன்னும் சிலர் தச்சன்தோப்பு, கோவிலாக்கண்டி, மறவன்புலோ நோக்கியும் சென்று அடைக்கலம் புகுந்தனர். 

என்னவென்று சொல்வது? ஐந்தே வருடத்தில் அதே ஒக்டோபர், அதே 30ம் திகதி தமக்கும் இதே கதி வரும் என்று 1990ம் ஆண்டு யார்தான் நினைத்திருப்பர். 

நடந்த அநியாயத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாவிட்டாலும், கண்முன்னே அநியாயம் நடந்தேறப் பார்த்துக்கொண்டிருந்த பாவத்துக்கும் அனுபவிக்கவேண்டி வரும் என்று இயற்கை பாடம் எடுத்தது, 

அந்தப் பாடத்தை நாமெல்லாம் சரியாகப் புரிந்துகொண்டோமா? 

இப்போ மீண்டும் ஒரு குரல் ஒலிக்கிறது. 
மாட்டிறைச்சிக் கடை விவகாரத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட சமூகம் வேண்டுமானால் இங்கிருந்து வெளியேறிச் செல்லட்டும் என்று ஆணவத்துடன் ஒரு குரல், அன்று யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மறுவன்புலோவிலிருந்து சாவகச்சேரி வரை ஒலிக்கிறது. 

இம்முறை ஆயுதங்கள் இல்லை. ஆயுதங்கள் ஏந்திய எந்தத் தரப்புக்களும் இதைச் சொல்லவில்லை. மதத்தின்பேரால் இப்படி ஒரு கட்டளை. 

மாட்டிறைச்சியை ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும்தான் சாப்பிடுகிறதா? மற்றவர்கள் சாப்பிடுவதே இல்லையா என்பதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இப்படி ஒரு அறிவிப்பு. 

அப்படியே ஒரு மதத்தின் மரபைப் பேண, பாரம்பரியத்தைக் காக்க விரும்புகிறோம் என்றால் அதற்கு ஆக்கபூர்வமான வழிகளே கிடையாதா? 

காந்தளகம் என்ற பெயரில் தமிழ் மக்களிடையே அறிவுபூர்வமான சிந்தனையை வளர்க்கும் எத்தனையோ நூல்களை வெளியிட்டவருக்கு இந்தப் பிரச்சினையை அறிவுபூர்வமாக அணுகத்தெரியாதா? 

பசுவதை கூடாது என்று போதித்த இதே மதம்தான் அன்பே சிவம் என்றும் போதித்திருப்பது தெரியாதவர்களா இவர்கள்? 

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

“முற்பகல் செய்யி்ல் பிற்பகல் விளையும்”

”தீதும் நன்றும் பிறர்தர வாரா”

என்று, இந்த மதமும், அதன்வழி உருவான இலக்கியங்களும் காலங்காலமாக சொல்லிவரும் பாடங்களையேனும் நாம் மனதில் இருத்தவேண்டாமோ............? 

இப்போதான் முன்னைய அவலங்கள், இடப்பெயர்வுகள் எல்லாம் தீர்ந்து மெல்ல மீண்டும் ஒன்றாக நிம்மதியாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள். 

மீண்டும் ஒரு அவலத்தைத் தாங்க இவர்களால் முடியாது - 

விட்டுவிடுங்கள் - உங்களை மன்றாடிக் கேட்கிறோம்!

1 comment:

  1. ஐயா படித்த சமூகம் பண்பான மக்கள்.ஒரு சில தறுதலைகளால் சோரம் போய்விடக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.