Header Ads



குடும்பமாக தற்கொலைத் தாக்குதல்


இந்தோனீஷிய துறைமுக நகரமான சுராபாவில், இளம் குழந்தைகளுடன் சேர்ந்த ஒரு குடும்பம் திங்கள்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பை நடத்தியிருக்கிறது. ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு நெட்வொர்க் இந்தத் தாக்குதல்களுக்கு காரணம் என்று போலிசார் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமையன்று இதேபோன்று ஒரு குடும்பம், தேவாலயங்களில் தற்கொலை தாக்குதல் நடத்திய நிலையில் இரண்டாவது நாளாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அந்த குடும்பத்தினர், காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த சோதனைச்சாவடிக்கு அருகில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

நான்கு அதிகாரிகள் மற்றும் வேறு பலரும் இந்த தாக்குதலில் காயமடைந்தனர்.

அந்த தாக்குதலை ஒரு தம்பதிகள் நடத்தியபோது, அவர்களின் மகள், தாய் மற்றும் தந்தைக்கு நடுவில் அமர்ந்திருந்தார் என்பதை சி.சி.டி.வி காட்சிகள் காட்டுகின்றன. அந்த எட்டு வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார்.

கிழக்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரான சுராபாவில் ஞாயிறன்று இதே போன்று மற்றொரு குடும்பம் மூன்று தேவாலயங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. அதையடுத்து நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

ஒன்பது மற்றும் 12 வயதுள்ள இரு மகள்களுடன் மோட்டர்சைக்கிளில் வந்த தாய், தேவாலயம் ஒன்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தினார். அதே சமயத்தில் அந்த பெண்ணின் கணவரும், இரண்டு மகன்களும் வேறு இரு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

காவல் நிலைய குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் நடத்தப்பட்ட மூன்று தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமான நபரின் நெருங்கிய நண்பர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட அந்த குடும்பம், தற்போது போர்சூழலில் இருக்கும் சிரியாவில் இருந்து திரும்பி வந்த நூற்றுக்கணக்கான இந்தோனீஷிய குடும்பங்களில் ஒன்று என்று அதிகாரிகள் முதலில் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த குடும்பத்தினர் சிரியாவுக்கு இதுவரை சென்றதில்லை என்று பிறகு தெரிவித்தார்கள்.

இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களில் தற்கொலைதாரிகள் உள்ளிட 18 பேர் உயிரிழந்தனர், 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கும் பிறகு இந்தோனேசியாவில் நடைபெற்ற மிகப்பெரிய குண்டுவெடிப்பு இது.

No comments

Powered by Blogger.