Header Ads



இவரை ஞாபகம் வருகிறதா..?


வெளிநாடுகள் சென்று பட்டங்கள் பல பெற்று நாடு திரும்பிய அம்பேத்கருக்கு அலுவலகத்தில் தாகம் தணிக்க ஒரு கோப்பை தண்ணீர் சாதிவெறி பியூனால் மறுக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்ட வரலாற்றிலிருந்து தான் அம்பேத்கர் என்ற புரட்சியாளர் உருவானார்.

தமிழக வரலாற்றிலும் அப்படி ஒரு தண்ணீர் மறுக்கப்பட்டு கண் பார்வை பறிக்கப்பட்ட ஒரு கொடூர வரலாறு உண்டு.

தனத்தை நினைவிலிருக்கிறதா உங்களுக்கு..

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகேயுள்ள கட்டிநாயக்கன் பட்டி என்ற கிராமத்திலிருக்கும் ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளி சாதிவெறியின் கொடூர வரலாற்றில் இடம் பெற்ற நாள் 29-8-1995. 

மாணவர்கள் எல்லாம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதில் தனம் என்ற பெயர் கொண்ட குழந்தையும் விளையாடிக்கொண்டிருந்தது. 

பள்ளி வராண்டாவின் ஓரத்தில் மாணவர்களின் தாகம் தணிக்க ஒரு பானையும் சில கிளாஸ்களும் வைக்கப்பட்டிருந்தன. 

அந்த பள்ளியில் அப்போது என்ன நடைமுறை என்றால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் கிளாஸை எடுத்து பானையில் இருந்து தண்ணீர் கோரி குடித்துக்கொள்ளலாம். 

ஒடுக்குமுறைக்குள்ளான சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்றால் அவர்கள் தனியாக வரிசையில் நிற்க வேண்டும். ஆயாம்மா ஒருவர் தண்ணீரை ஊற்ற கைகளால் வாங்கி குடித்துக்கொள்ள வேண்டும். 

அன்றைய தினம் விளையாடிய களைப்பில் தனம் என்ற ஐந்து வயது குழந்தை தண்ணீர் பானையை நோக்கி தாகத்துடன் ஓடி வந்தது. 

தண்ணீர் ஊற்ற வேண்டிய ஆயாம்மா இல்லை .. தாகத்தை அடக்கியபடி காத்திருந்தது குழந்தை. ஆயாம்மா வரவில்லை. 

சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு பானையை நெருங்கி தண்ணீரை கோரி வாயில் ஊற்றபோக.. தண்ணீருக்கு முன்பாக பிரம்படி விழுந்தது. 

யாரை கேட்டு தண்ணீர் குடிச்சே.. என்ற கேள்வியுடன் கண் மண் தெரியாமல் ஆசிரியர் சுப்ரமணியம் விளாச அந்த வீச்சில் ஒரு வீச்சு தனத்தின் கண்ணிற்குள் பாய்ந்தது. 

அவ்வளவுதான்.. கண்ணில் இருந்து ரத்தம் கொட்ட.. 
பெற்றோர்கள் ஓடி வர.. ஊர் பெரியவர்கள் காசு கொடுத்து பஞ்சாயத்து பண்ணி பிரச்சினையை மூடி மறைக்க முயல.. என்று ஒவ்வொன்றாக தனம் சொல்ல சொல்ல அந்த காட்சிகள் நம் முன் விரிகிறது.

உடனடியாக பிரச்சினை வெளியே தெரியவரவில்லை. பொதுக்கூட்டமொன்றில் சுப்ரமணியசாமி இதுபற்றி பேசுகிறார். அதன்பிறகு ராம்விலாஸ் பஸ்வான் பார்லிமெண்டில் கேள்வி எழுப்ப அதன்பிறகு ஜெயலலிதாவின் தலைமையிலான மாநில அரசுக்கு தலைவலியாகிறது. 

அதன்பிறகு கலெக்ட்டரில் ஆரம்பித்து ஒவ்வொருவரும் ஓடி வந்து விசாரிக்கிறார்கள். மாணவி தனத்தின் சிகிச்சைக்கு படிப்புக்கு என்று பலரும் உதவுகிறார்கள். அறுவை சிகிச்சை ஓரளவுக்கு கைகொடுத்தது என்றாலும் இழந்த பார்வையை மீட்க முடியவில்லை. வழக்கு நடத்தப்பட்டு ஆசிரியருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 

சென்னை கான்வெண்ட் பள்ளியில் படிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டு மீண்டும் பார்வையை பறிகொடுத்த பள்ளியிலே வந்து சேர்ந்தார் தனம். 

சாதிவெறி பள்ளி இப்போது வெட்கி தலைகுணிந்து வரவேற்றது. 

( இயக்குனர் ஞானராஜசேகரன், ஒரு கண் ஒரு பார்வை என்று இந்த கொடூரத்தை படமாக பதிவு செய்திருக்கிறார். கடைசி காட்சியில் இயக்குனரின் யுக்தியும் இளையராஜாவின் பின்னணி இசையும் பார்ப்பவர்களை நெகிழச்செய்துவிடும்.. பாரதி புத்தகாலயத்தில் டிவிடி கிடைக்கும். பார்த்துவிடுங்கள்.)

``நான் ஆட்சியில் இருந்தாலும் சரி.. இல்லாவிட்டாலும் சரி.. எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொன்ன ஜெயலலிதா இறுதிவரை அதை கடைப்பிடித்து படிப்புக்கான உதவிகளை செய்திருக்கிறார். 

ஒரு கண்ணில் கட்டு போட்டபடி குட்டிப்பெண் தோற்றத்தில் ஊடகங்களில் பதிவான தனம் இப்போது வளர்ந்து நிற்கிறார். பி.ஏ. ஆங்கிலமும், பிஎட்-டும் முடித்திருக்கிறார்.

சென்னையில் தமுஎகச அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வந்திருந்த தனத்துடன் உரையாடினேன். 

``எந்த பள்ளியில் ஒரு ஆசிரியரின் சாதிவெறியால் என் கண்களை பறிகொடுத்தேனோ..

அதே பள்ளியில் மாணவர்களுக்கு முன் மாதிரியான ஒரு நல்லாசிரியராக வாழ்ந்து காட்ட வேண்டும்..” என்ற தன் பெரும் கனவை சொன்னார். 

சிறப்பு..

எங்கு நீங்கள் இழிவு படுத்தப்படுகிறீர்களோ, அங்கு.. அவர்கள் முன் கெத்தாக.. 

ஆமா, செம கெத்தாக வாழ்ந்து காட்ட வேண்டும்..

கனவு நிறைவேற வாழ்த்துகள் தனம்..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா
7-5-18
(புகைப்படம் உதவி: கவாஸ்கர் தீக்கதிர்)

No comments

Powered by Blogger.