Header Ads



ஜனாதிபதியின் உரையில், எந்த புதிய சரக்கும் இல்லை

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் புதிதாக எந்தவொரு விடயமும் இல்லையென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

வெறுமனே நிகழ்வொன்றை நடத்தி பாராளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தமையே ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப்பிரகடன உரை குறித்து கேட்டபோதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் எதுவும் விசேடமாக இல்லை. உற்சவம் ஒன்றை நடத்தி பாராளுமன்றத்துக்கு வருகைதந்து உரையாற்றிச் சென்றமையே இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு புதிய அமர்வொன்றை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதிமார், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டங்கள் அல்லது எதிர்கால செயற்றிட்டங்கள் பற்றியே குறிப்பிட்டிருந்தனர்.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையில் ஒரு விடயமாவது புதியதாகக் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கத்துக்குள் முரண்பாடு உள்ளது என்பதை ஜனாதிபதியே தனது உரையிலேயே கூறியிருந்தார். இதனைவிட என்ன கூறவுள்ளது. ஜனாதிபதியின் உரை தொடர்பில் நாளைமறுதினம் (நாளை) விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு நாம் வாக்கெடுப்பு எதனையும் கோரப்போவதில்லை. விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த உரைக்கு வாக்கெடுப்புக் கோர முடியும் அரசாங்கத்தினால் இதில் வெற்றிகொள்ளவும் முடியும். மூன்று நான்கு மாதங்களுக்கே அரசாங்கத்தினால் இவ்வாறு வெற்றியைக் காண்பிக்க முடியும். அதன் பின்னர் அரசாங்கம் மீண்டும் கஷ்டத்தில் விழும். அரசாங்கத்தரப்பிலிருந்து மேலும் பலர் எமது பக்கத்துக்கு வருவார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.