Header Ads



எமது கட்சியின் ஜனாதிபதி, வேட்பாளர் மைத்திரிபாலவே - எஸ். பி. திஸாநாயக்க

அமைச்சரவை மாற்றங்களின் போது அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி எடுத்த முடிவு பாராட்டுக்குரியதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்த ஸ்ரீல. சு. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று மல்வத்தை மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர் .இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:

பொருத்தமான அமைச்சுக்களை ஒன்றாக இணைப்பது பிரச்சினை இல்லை. எதிரணியில் அமர்ந்தாலும் நல்லவிடயங்களை ஆதரிப்போம்.இந்தியா போன்ற சனத்தொகை அதிகமுள்ள நாடுகளில் கூட குறைந்தளவு அமைச்சர்களே உள்ளனர். இம்முறை அமைச்சரவை மாற்றத்தின்போது போது இரண்டு அமைச்சுக்களை குறைத்தது சிறந்த முடிவென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

19வது திருத்தத்தின் மூலம் அமைச்சர்கள் எண்ணிக்கை முப்பதாக மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் தேசிய அரசாங்கத்தில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீல. சு. க. உறுப்பினர்கள் மீது எமக்கு எவ்வித கோபமுமில்லை. அவர்களின் நல்ல செயற்பாடுளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதே வேளை தவறுகளை சுட்டிக்காட்டத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் 08ஆம் திகதி எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரவுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எமது கட்சியே. ஏனைய குழுக்களுடன் இணைந்து தேசத்தின் முன்னணிக்காக பணி செய்ய எதிர்பார்க்கின்றோம்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக நீக்க நாம் விரும்பவில்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, ஜனாதிபதி அபேட்சகராவார்.

நாம் அமைக்கவுள்ள பாரிய தேசிய முன்னணியில் சில மாற்றங்கள் உருவாகலாம்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் பாரிய தேசிய முன்னணி ஒன்றை அமைக்க ஜனாதிபதி முயற்சி செய்தார். ஓரிருவரின் சூழ்ச்சியால் அது முடியாமல் போனது.    

No comments

Powered by Blogger.