May 31, 2018

முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு அயராது உழைத்த ரி.பி.ஜாயா

இலங்கையின் தேசிய வீரரும், கல்விமானும், சிறந்த இராஜதந்திரியும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி ரி. பி. ஜாயாவின் 58 வது நினைவுதினம் இன்று (31.05.2018) ஆகும்.

இலங்கையின் சுதந்திரப் போராட்ட முன்னோடிகளில் ஒருவராகவும், இந்நாட்டின் தேசிய வீரர்களில் ஒருவராகவும் மாத்திரமல்லாமல் இருபதாம் நூற்றாண்டில் இந்நாட்டு முஸ்லிம்களின் சமூக, கல்வி மறுமலர்ச்சிக்கு அயராது உழைத்து அடித்தளமிட்டவர்களில் ஒருவராகவும் திகழ்பவர் மறைந்த ரி.பி.ஜாயா ஆவார்.

இவர் இந்நாட்டு முஸ்லிம்களில் மலாயர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் கூட முழு முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாத்திரமல்லாமல் நாட்டில் வாழும் சகல இன மக்களதும் மேம்பாட்டுக்காகவும் உழைத்தார். அதேநேரம் இந்த நாடு பல்லின மக்கள் வாழும் தேசம் என்பதை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் மறந்து செயற்படவில்லை. அவர் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணம் மிக்கவராக விளங்குகின்றார்.
துவான் புகார்தீன் ஜாயா 1890 ஜனவரி முதலாம் திகதி கண்டி மாவட்டத்திலுள்ள கலகெதரவில் பிறந்தார். பொலிஸ் சார்ஜன்ட் காசிம் ஜாயா மற்றும் நோனா காசிம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் சிறுபராயத்தில் இருந்த போது, இவரது தந்தைக்கு குருநாகலுக்கு இடமாற்றம் கிடைத்தது. அதனால் ஜாயாவின் தந்தை தம் குடும்பம் சகிதம் குருநாகலுக்கு சென்று வசித்தார். இவ்வாறான சூழலில் ஜாயா ஆரம்பக் கல்விக்காக குருநாகல் அங்கிலிக்கன் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அவரது பெற்றோர் ஜாயாவுக்கு சிறுபராயத்திலேயே அல் குர்ஆனியக் கல்வியை அளிக்கத் தவறவில்லை. குருநாகலில் வாழ்ந்த உமர் லெப்பை ஆலிமிடம் சிறுவன் ஜாயா சேர்க்கப்பட்டான். ஜாயாவும் குர்ஆனை அதிக ஆர்வத்தோடு கற்றார்.

இச்சந்தர்ப்பத்தில் ஜாயாவின் தந்தை கொழும்புக்கு இடமாற்றப்பட்டார். இச்சமயம் ஜாயா கண்டி சென் போல்ஸ் வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டிருந்தார். ஜாயாவின் குடும்பமே கொழும்புக்கு இடம்பெயர்ந்தது. இவ்வேளையில் ஜாயாவுக்கு விஷேட கல்வி புலமைப் பரிசில் கிடைத்தது. அதற்கேற்ப அவர் 1904 இல் கொழும்பு முகத்துவாரம் சென் தோமஸ் கல்லூரியில் இணைந்தார். ஜாயா சிறுபராயத்திலேயே கல்வியில் அதி திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாக அவருக்கு மூன்றாம், ஆறாம் வகுப்புக்களில் இரட்டை வகுப்பேற்றமும் கிடைக்கப் பெற்றது.
இவ்வாறான நிலையில் 1906 இல் கேம்பிரிட்ஜ் கனிஷ்ட பரீட்சையில் தோற்றி தெரிவான இவர், கணித பாடத்திற்கான ஜே.ஏ.சி. மெண்டிஸ் புலமைப் பரிசிலைப் வென்றார். அதனைத் தொடர்ந்து 1909 இல் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்தார்.

ஆசிரியத் தொழிலில் பிரவேசம்:

ரி.பி. ஜாயா 1910 ஜனவரி மாதம் கண்டி தர்மராஜ கல்லூரியில் உதவியாசிரியராக இணைந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஜாயாவுக்கு சொற்ப காலத்தில் அதாவது அதே வருடம் மே மாதம் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு இடமாற்றம் கிடைத்தது. அங்கு சுமார் ஏழு வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய ஜாயா, 1917 இல் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஜாயா ஆசிரியர் தொழிலில் இணைந்ததோடு கல்வி கற்பதை நிறுத்தி வி-டவில்லை.தொடர்ந்தும் உயர் கல்வியை மேற்கொண்டார்.ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம், வரலாறு மற்றும் கணிதப் பாடங்களுக்கான இடைநிலைப் பரீட்சையில் சித்தி பெற்று லண்டன் கலைப்பட்டதாரியானார் ஜாயா. அத்தோடு சட்டக் கல்லூரியில் இணைந்தும் கற்றார்.
இக்காலப் பகுதியில்தான் அதாவது 1921 இல்இவர் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றார். அன்று தொடக்கம் சுமார் 27 வருடங்கள் அங்கு அதிபராகக் கடமையாற்றிய இவர், ஸாஹிறாவை சகல துறைகளிலும் முன்னேற்றுவதற்காக இரவுபகல் பாராது அயராது உழைத்தார். இவர் இக்கல்லூரியின் அதிபராகப் பதவியேற்கும் போது ஸாஹிறாவின் மாணவர் எண்ணிக்கை ஐம்பதாகவே காணப்பட்டது. அந்தளவுக்கு கொழும்பு மக்கள் கல்வியில் பின்னடைந்து காணப்பட்டனர்.கல்வியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி ஜாயா முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் பயனாக கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப காலத்தில் சுமார் ஆயிரம் வரை உயர்ந்தது. அத்தோடு அவர் நின்று விடவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை நாட்டின் ஏனைய பிரதேச முஸ்லிம்களுக்கும் எடுத்துக்கூறவும் அவர்கள் மத்தியில் கல்வியின் மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தவும் அவர் தவறவில்லை.

இதன் விளைவாக கொழும்பில் மாத்திரம் காணப்பட்ட ஸாஹிறாக் கல்லூரி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஆரம்பிக்கப்படும் நிலைமையை சொற்ப காலத்தில் ஏற்படுத்தினார்.

அரசியல் பிரவேசம்:
இதேகாலப்பகுதியில் டொனமூர் அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட அரச பேரவைக்கான தேர்தல் 1931 இல் நடைபெற்றது. அத்தேர்தலில் இவர் கொழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இதேதொகுதியில் இந்நாட்டின் தொழிற்சங்கத் தலைவராக விளங்கிய ஏ. ஈ. குணசிங்க போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1936 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் போட்டியிட்டும் ஜாயா தோல்வியுற்றார்.

ஆனாலும் அவர் நியமன உறுப்பினராக அரச பேரவைக்கு தெரிவானார். இப்பேரவையில் இவர் கல்வி நிறைவேற்றுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இப்பதவிக் காலத்தில் அரச பேரவையில் தன் சக உறுப்பினராக இருந்த சேர் ராசிக் பரீத்துடன் இணைந்து முஸ்லிம் பிரதேசங்களின் கல்வி மேம்பாட்டின் நிமித்தம் பாடசாலைகளை அமைத்தார். குறிப்பாக புத்தளம், தர்காநகர், கம்பளை, மாத்தளை, கொழும்பு – வேகந்த ஆகிய இடங்களில் ஸாஹிராக் கல்லூரிகளை ஆரம்பித்தார். இது முஸ்லிம்கள் கல்வியின் மீது கவனம் செலுத்தும் நிலைமையை ஏற்படுத்தியது. அதேநேரம் ஆசிரியர்களுக்கான ஒய்வூதியத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரேயாவார்.

தேசப்பற்றின் வெளிப்பாடு:
நாட்டில் சகவாழ்வு, நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை என்பவற்றிலும் இவர் அதிக அக்கறை செலுத்தினார். இந்தவகையில் 1944 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுதந்திரம் தொடர்பான யோசனை அரச பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டது. அச்சமயம் கலாநிதி ஜாயா முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக இருந்தார். அப்போது அவர் பிரதிநிதிகள் சபையில் ஆற்றிய உரை இந்நாட்டு வரலாற்றில் அழியாத் தடம்பதித்துள்ளது.

அந்த உரையில் ஜாயா, “முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகளும் துயரங்களும் உள்ளன. ஆனால் அவற்றை முன்வைப்பதற்கான தருணம் இதுவல்ல. ஏனைய எல்லாவற்றையும் விட தாய்நாட்டின் சுதந்திரமே முதன்மையானது. நாம் சுதந்திரத்திற்குப் பின்னர் எங்களது மூத்த சகோதரர்களான சிங்கள மக்களோடு அவற்றைக் கலந்துரையாடித் தீர்த்துக் கொள்ள முடியும். நாடு பூராவும் சென்று எல்லா முஸ்லிம் அமைப்புக்களுடனும் முஸ்லிம் முக்கியஸ்தர்களோடும் கலந்துரையாடினேன். பிரதிநிதிகள் சபையின் ஏனைய சகோதர உறுப்பினர்களோடும் கலந்துரையாடி முழுமையான உடன்பாட்டுடன் தான் இதனை இங்கு மொழிகின்றேன்.

இந்த இக்கட்டான நிலையில் முஸ்லிம்கள் சார்பாக எந்தவொரு நிபந்தனையையும் நாம் முன்வைக்கவில்லை. தாய்நாட்டின் சுதந்திரம் தொடர்பான போராட்டத்தில் முன்னணியில் நிற்க வேண்டியது முஸ்லிம்களின் முக்கிய பொறுப்பாகும். அதற்காக எவ்வளவு தூரம் பயணிக்கவும் முஸ்லிம்கள் தயார். எல்லா பலன்களையும், எல்லா பயன்களையும், எல்லா அதிஷ்ட நிலைகளையும் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக அரப்பணிக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்” என்று உரக்கச் சொன்னார்.

இச்சமயம் சபையில் இருந்த பிரதிநிதிகள் ஜாயாவின் நிலைப்பாட்டைப் பெரிதும் வரவேற்றனர். குறிப்பாக எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கா, 'ஜாயாவின் நிலைப்பாடானது எமது சுதந்திரப்போராட்டத்தையும் தேசிய ஒற்றுமையையும் யதார்த்த நிலைக்கு மாற்றத் துணைபுரிந்துள்ளது' என்றார்.
இதேவேளை சோல்பரி யாப்பின் கீழ் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவென தேசியக் கட்சியின் தேவை 1946களில் உணரப்பட்டது. இவ்வாறான பின்னணியில் 1946 செப்டம்பர் 06 ஆம் திகதி அன்றைய முக்கிய அரசியல் அமைப்புக்களாக விளங்கிய தேசிய காங்கிரஸ், சிங்கள மகா சபை, அகில இலங்கை முஸ்லிம் லீக், சோனக சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகளும் தமிழ் மற்றும் பறங்கிய சமூகங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அல்பிரட் கிரசென்ட் பாம் கோட்டில் ஒன்று கூடினர். அச்சமயம் எல்லா அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஒரு தேசியக் கட்சி அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை எஸ். நடசேன் முன்வைத்தார். அந்த யோசனையை கலாநிதி ஜாயா வழிமொழிந்தார். அதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவானது.

முதலாவது தொழில் அமைச்சர்:

இவ்வாறு சகவாழ்வுடன் கூடிய தேசிய சிந்தனையில் செயற்பட்ட கலாநிதி ஜாயா 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்டு இரண்டாவது உறுப்பினராகத் தெரிவானார். அதனூடாக சுதந்திர இலங்கையின் 14 பேர் கொண்ட முதலாவது அமைச்சரவையில் சமூக சேவைகள் மற்றும் தொழில் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டில் தமது அமைச்சு பதவியையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்து விட்டு பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்றார். இவரே பாகிஸ்தானுக்கான இலங்கையின் முதலாவது உயர்ஸ்தானிகராவார்.

சாதாரண ஆசிரியராகப் பொதுவாழ்வை ஆரம்பித்த ஜாயா ஒரு கல்வியியலாளராகவும், அரசியல்வாதியாகவும், இராஜதந்திரியாகவும் மாத்திரமல்லாமல் முஸ்லிம் சமூகத் தலைவராகவும் இருந்து நாட்டுக்கு அளப்பறிய சேவையாற்றி வந்தார். இவ்வாறான நிலையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றிருந்த கலாநிதி ஜாயா, 1960 மே 31 ஆம் திகதி மதீனாவில் காலமானார். அன்னாரின் ஜனாஸாஅங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர் ஆற்றிய சேவைகள் இந்நாட்டின் வரலாற்றில் அழியாத் தடம் பதித்துள்ளன. அதிலும் அவரது சகவாழ்வு நல்லிணக்கத்துடன் கூடிய தேசிய ஒற்றுமைச் சிந்தனையும் செயற்பாடுகளும் இன்றும் எல்லோராலும் நினைவு கூரப்படக் கூடியனவாக உள்ளன.

மர்லின் மரிக்கார்

0 கருத்துரைகள்:

Post a Comment