May 20, 2018

முஸ்லிம்கள் தடுக்கி விழுந்தாலும் பல அமைச்சர்கள் உள்ளனர், ஆனால் தமிழர்களுக்கு அவ்வாறில்லை

தமிழ் மக்களின் தற்போதையநிலவரம் தொடராது என்றும் அது வெகு விரைவில் வடக்கு, கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகும் நிலைக்கு மாற்றமடையுமென்று தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அம்பாறையில் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எந்த ஓர் அமைச்சரும் இல்லை. அங்குள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகைமை. வல்லமை, ஆளுமை அனைத்தும் இருந்த போதிலும் அரசியல் தேவைப்பாடு காரணமாக அமைச்சுக்களை ஏற்கவில்லை. அதனால் அபிவிருத்திகள் தமிழ் மக்களை வந்தடையவில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் இந்நிலை தொடராது. விரைவில் காலம் மாறும். காலம் வெல்லும், காலம் பதில் சொல்லும். அப்போது சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்பர். அதுவரைக்கும் இந்த மனோ கணேசன் வடக்கு,கிழக்கு மக்களை விசேடமாக கவனிப்பார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அமைச்சர் நேற்று (19) அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு கோளாவில் பிரதேசத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் அழைப்பின் பெயரில் வருகைதந்த அமைச்சர் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஆலய வளாகத்தில் நடைபெற்ற “வாழும் போதே வாழ்த்துவோம்” எனும் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அம்பாறை மாவட்ட மக்களுடன் உரையாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இதனை எனது பாக்கியமாகவும் நினைக்கின்றேன். கிழக்கு மாகாணம் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கின்றபோதிலும், அம்பாறை மாவட்டம் ஒதுக்கப்பட்ட மாவட்டமாகவே இருக்கின்றது. அம்பாறையை பற்றி அதிகமாக பேசுகின்றோம். ஆனால் அம்மாவட்டத்தைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. ஒதுக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படுகின்றது. அதிலும் இங்கு வாழும் தமிழ் மக்கள் அதிகம் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதனை அறிந்து தெரிந்த பின்னரே இங்கு வந்துள்ளேன்.

ஜனாதிபதி, தான் வைத்திருந்த அமைச்சுப்பொறுப்புக்களில் பலவற்றை நம்பிக்கையின் அடிப்படையில் எனக்குத் தந்துள்ளார். அவர் நம்பிக்கை பாதுகாக்கப்படும். அவர் நம்பாவிட்டாலும் சகவாழ்வு ஒற்றுமை ஒருமைப்பாடு ஐக்கியம் என்பவற்றை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். வரலாறு அவற்றை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.

ஒரு நாட்டில் பல இனங்கள் இருக்கலாம், பல மொழிகள் பேசப்படலாம், பல மதங்கள் கடைப்பிடிக்கப்படலாம் . ஆனால் அவற்றுள் சமத்துவம் இருக்க வேண்டும். ஐக்கியம் என்பதற்கு முதல் நிபந்தனை சமத்துவம், இரண்டாவது நிபந்தனை சமத்துவம். மூன்றாவது நிபந்தனையும் சமத்துவம். சமத்துவம் இல்லாவிட்டால் ஐக்கியம் வராது என்றார்.

ஆகவே, நல்லிணக்க அமைச்சர் பதவியை வகித்தால் மட்டும் போதாது. நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த அமைச்சர் சமத்துவத்தை வலியுறுத்துகின்றார் என்பதை அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியும் உபதலைவர் என்று சொல்லக்கூடிய பிரதமரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, கைவிடப்பட்ட சமூகம் எங்கு இருக்கின்றதோ அந்த மக்களை தேடிப்பிடித்து அவர்களின் கைகளை தூக்கி விடுவதன் மூலமே உண்மையான சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும்.

ஆகவே, ஒதுக்கப்பட்ட அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை கைதூக்கி விட வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது என்பதை உணர்ந்து கொண்டுள்ளேன். அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார்.

ஆகவே இந்த அமைச்சு மக்களுக்காக பயன்படுத்தப்படவேண்டும். பயன்படுத்த வேண்டிய நேர்மையும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் தூரப்பார்வையும் ஆளுமையும் என்னிடம் உள்ளது என்பதை நம்புகின்றேன்.

முஸ்லிம்கள் தடுக்கி விழுந்தாலும் பல அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், தமிழ் மக்களுக்கு அவ்வாறில்லை. ஆகவே, அவர்கள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியது எனது பொறுப்பு. அதற்காக நல்லிணக்க அமைச்சர் இவ்வாறு கூறுகின்றார். தமிழ் மக்களுக்கு சலுகை உரிமை பெற்றுக்கொடுப்பதாக கூறுகின்றார் என ஏனைய சகோதர மக்கள் அச்சமடையத் தேவையில்லை. அப்படித்தான் நான் செய்வேன். அதனைக் கூறுவதற்கும் நான் தயங்கவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களுக்கு அமைச்சர்கள் இல்லை.

மொழிப் பிரச்சினை நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர் இருந்ததை அனைவரும் அறிவோம். 87ஆம் ஆண்டு தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவும் 30 வருடம் கடந்து விட்டது.
தற்போது நான் இந்த அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளேன். இந்த அமைச்சை பொறுப்பேற்றிருப்பது விளையாடுவதற்கு அல்ல. அதேநேரம் என்னுடன் யாரும் விளையாடவும் முடியாது.

7 கருத்துரைகள்:

உன்னுடைய நல்லிணக்கம் கண்டி கலவரம் நடக்கும் சமயம் நன்றாகவே வெளிவந்தது. நல்லிணக்க அமைச்சு உன்னிடம் இருப்பதும் ஒன்று தான் ஞானசாராவிடம் இருப்பதும் ஒன்று தான்

இவருக்கு எடுகோல் முஸ்லிம் மக்கள் மட்டும்தான் கிடைத்ததா ஏன் சிங்கள மக்களுக்கும் நிறைய அமைச்சர்கள் இருக்கின்றனர் அவர்களையும் சொல்லலாமே ??????

மனோ கணேசனுக்கு ஒரு வேண்டுகோள்.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்.

தேவையில்லாத ஈழமும் வட, கிழக்கு இணைப்பும் அவர்களாலேயே நீர்த்துப் போகச் செய்யலாம்.

முஸ்லீம் மக்கள் சிந்திக்க வேண்டிய செய்தி சொல்லப்பட்டுள்ளது. அமைச்சர்கள் இருந்தும் முஸ்லீம் மக்களும் இன்னும் சரியான சேவைகளை பெற்றுக்கொள்ளாத நிலையே உள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்படும் பணம் பவிக்கப்படாமல் மீண்டும் திறைசேரிக்கு செல்கின்ற நிலைமையும் உள்ளது. அதே நேரம் முஸ்லீம் அமைச்சர்களாலும் எம்பிக்களாலும் தமிழ் மக்களும் அவர்களது பாடசாலைகளும், வைத்தியசாலைகளும், வீதிகளும், குடிநீர் பிரச்சினையும் அபிவிருத்தியில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதைத்தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது. கவனத்தில் எடுப்பார்களா முஸ்லீம் எம்பிக்களும் அமைச்சர்களும்.

Ministers talking Nonsense only in Sri Lanka........

Post a Comment