Header Ads



"இலங்கைப் பிரஜையாக இருப்பதற்கும், இஸ்லாமியனாக இருப்பதற்கும் இடையில் ஒரு மோதல்"

இன்றைய உடனடித் தேவை: ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஒரு சுதந்திர சபை

 – ரவூப் ஸய்ன் –

ஒரு நீதிபதியோ முப்தியோ இரண்டு வகையான அறிவு இன்றி பத்வா வழங்க முடியாது. அதில் முதலாவது நடைமுறையை விளங்குவதாகும். இரண்டாவது, அந்த அறிவை அல்லாஹ்வின் மார்க்க அறிவுடன் இணைப்பதாகும். அதாவது, குர்ஆனின் அறிவையும் ஸுன்னாவின் அறிவையும் நடைமுறை மீது பிரயோகிக்கத் தெரிந்தவனே உண்மையான முப்தியாக இருக்க முடியும். இது இஃலாமுல் முவக்கிஈன் எனும் நூலின் ஆசிரியர் இமாம் இப்னுல் கையிம் அவர்களின் கருத்தாகும்.

நடைமுறை வேண்டி நிற்கும் தீர்ப்பை அறிந்து, இலட்சியவாதத்தைத் தாண்டி, யதார்த்தத்திற்கு இறங்கி வருபவனே உண்மையான சட்ட அறிஞன். வழக்காறு, காலம், இடம், சூழ்நிலை என்பவற்றைக் கருத்திற் கொண்டே இத்தகைய சட்ட அறிஞன் பத்வா வழங்க வேண்டும் என்கிறார் இமாம் இப்னுல் கையிம்.

இவருக்கு முன்னர் வாழ்ந்த மாலிக் மத்ஹப் சட்டமேதை இமாம் ஷிஹாபுத்தீன் அல் கராபி, ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இப்னு ஆப்தீன் போன்றோரும் இது குறித்து மிக விரிவாக விளக்கியுள்ளனர். நடைமுறை விவகாரங்களை காய்தல், உவத்தலின்றி விளங்கி, அதன் மீது ஷரீஆவின் தீர்ப்பைப் பிரயோகிக்க வேண்டும். இங்கு மிகைப்படுத்தலோ குறைத்து மதிப்பிடலோ இருக்கக் கூடாது.

முப்திகளும் காழிகளும் முஜ்தஹித்களும் துறைசார் நிபுணர்களின் அறிவையும் அனுப வங்களையும் பூரணமாகப் பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் பத்வா வழங்கும்போதே ஷரீஆவின் குறிக்கோள்களை நிறைவேற்றியதாகக் கருதப்படும். இந்த முன்னுரையோடு இலங்கையின் களநிலவரங் களையும் மார்க்கத் தீர்ப்புக்களையும் நாம் நோக்க வேண்டும்.

இலங்கையில் நாம் சிறுபான்மையாக வாழ்பவர்கள். எமது பிரச்சினைகளும் அது உருவாகும் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் சூழமைவுகளும் வித்தியாசமாவை. எனவே, எமக்கான தீர்வுகள் குறித்து ஓரளவு வித்தியாசமான பார்வை நமக்குத் தேவை. அந்தப் பார்வை அறபு முஸ்லிம் நாடுகளி லிருந்தோ பழைய பிக்ஹு நூல்களின் மஞ்சள் தோய்ந்த பக்கங்களிலிருந்தோ தருவிக்க முடியாதது.

இதனால்தான் உலகெங்கும் வாழும் முஸ்லிம் சிறுபான்மைகள் தொடர்பான ஆய்வுகள் இன்று விரிவாக இடம்பெறுகின்றன. அந்தந்த நாடுகளின் சிறந்த பிரஜைகளாகவும் இஸ்லாம் எதிர்பார்க்கும் சிறந்த முஸ்லிம்களாகவும் இருப்பதற்கான வாழ்வொழுங்கு குறித்த சிந்தனை கால்நூற்றாண்டுக்கு முன்பதாகவே பரவ ஆரம்பித்து விட்டது.
இஸ்லாமிய தனித்துவத்துடன் பொது வாழ்வில் பங்குகொள்ளும் போது முஸ்லிம் கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள் ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றன. இஸ்லாமிய பிக்ஹில் இவை ‘பிக்ஹுல் முவாதனா, பிக்ஹுத் ததய்யுன், பிக்ஹுல் அகல்லிய்யா என்ற பெயர்களில் பிரபலமடைந்துள்ளன.

137 நாடுகளில் 100 கோடி முஸ்லிம்கள்       சிறுபான்மையாக வாழ்கின்றனர். அவர்களது பிரச்சினைகள் வித்தியாசமானவை. பெரும்பான்மை நாடுகளிலிருந்தும் வேறு பட்டவை. இஸ்லாம் அனைத்து சூழலுக்கும் பொருத்தமான தீர்வுசொல்லும் மார்க்கம் என்ற வகையில் சிறுபான்மைச் சூழலின் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் முன்வைக்கும் தீர்வுகளை ஷரீஆ மூலாதாரங்களில் தேடிப் பெறும் முயற்சியே மேற்குறிப்பிடப்பட்ட பிக்ஹு ஆகும்.

இலங்கைச் சூழலில் நமக்கானதோர் பிக்ஹு குறித்த தேடல் இன்று அவசியமாகியுள்ளது. நாட்டில் சமீபத்தில் நடந்தேறிய முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரங்களை நோக்கும்போது இந்த வித்தியாசமான பார்வையும் தேடலும் இன்றி யமையாதவை என்பது தெளிவாகின்றது. இன்றைய முஸ்லிம் சமூகப் பரப்பில் மேலெழுந்துள்ள விவாதங்களும் இந்த உண்மையை ஆழமாக உணர்த்தியுள்ளன.

முஸ்லிம் அல்லாதவர்கள் பள்ளிவாயலில் நுழையலாமா? முஸ்லிம்கள் தமது வியாபார நிறுவனங்களைக் காப்புறுதி செய்யலாமா? முஸ்லிம் அல்லாதவருக்கு ஸலாம் சொல்லலாமா? ஸதகாவின் ஒரு பகுதியை முஸ்லிம் அல்லாதவருக்கு வழங்கலாமா போன்ற கேள்விகள் எழுப்பப் படுவதும் விவாதிக்கப்படுவதுமான ஒரு சூழலை அவதானிக்க முடிகிறது.

அடி வாங்கியதன் பின்னர்தான் புத்தி பிடிபடும் என்பார்கள். 1000 ஆண்டுகளுக்கு முன்னர் விவாதித்து விடை கண்டிருக்க வேண்டிய பிரச்சினைகளை இப்போதுதான் சமூகம் விவாதிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்கள் இலங்கைச் சூழலில் எதிர்கொள்ளும் 100 பிக்ஹு மஸ்அலாக்களை அடையாளம் கண்ட தேசிய ஷூறா சபை, அதனை ஜம்இய்யதுல் உலமாவிடம் பத்வாவை வேண்டி முன்வைத்திருந்தது. இதுவரை அப்பிரச்சினைகள் குறித்து எந்தவகை கள ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பத்வாவும் முன்வைக்கப்படவில்லை. அவை அனைத்தும் போல் சிங்களப் பெரும்பான்மையோடு இடைவினையாற்றும் போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளாகும்.

இலங்கை முஸ்லிம்களுக்கான பிக்ஹு எது? அப்படியொன்று உள்ளதா? முஸ்லிம் அல்லாதவர்களுடனான தொடர்பாடல்களின் போது முஸ்லிம்களின் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த பல ஐயங்களும் பிரச்சினைகளும் முஸ்லிம்களுக்கு உள்ளன. இது குறித்து எந்தளவு தூரம் ஆராய்ந்து நமக்கான ஒரு பிக்ஹை உருவாக்கியுள்ளோம் என்பது கேள்விக்குரியதாகும்.

இலங்கையில் இஸ்லாமிய அறிவுப் பரப்பில் ஒரு பாரிய இடைவெளி உள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் இமாம் இப்னுல் கையிம் குறிப்பிட்டதுபோல், இங்கு பத்வாச் சொல்வதற்கு குர்ஆன் ஸுன்னா வசனங்களோடு ஆழ்ந்த பரிச்சயம் கொண்ட பெரும் முஜ்தஹிதுகளோ முப்திகளோ இல்லை. இன்னொரு புறம் களப் பிரச்சினைகளை ஆழ்ந்து ஆராயும் ஆய்வு மனப் பாங்கோ பெரும் சமூக ஆய்வாளர்களோ இல்லை. அதாவது, உலமாஉன் நுஸூஸ் என்போரோ உலமாஉல் வாகிஇ என்போரோ போதுமானளவு இல்லை. இங்குள்ள பாரம்பரிய மத்ரஸாக்கள் இந்த இடைவெளியை நிரப்பும் தரத்திலும் இல்லை.

மார்க்கத்தைப் படிப்பதற்கு பெரும் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களோ பத்வாச் சொல்வதற்கு பெரும் ஆய்வு நிறுவனங்களோ இல்லை. குறிப்பிட்டதொரு மத்ஹபிற்குள் சுற்றி வரும் அதிலும் மிகப் பழைய கால பிக்ஹு நூல்களைப் போதிக்கும் மத்ரஸா கல்வி முறையொன்றே இங்கு உள்ளது. அவை பெரும்பாலும் வணக்க வழிபாடுகள் பற்றிய சட்டங்களையே (பிக்ஹுல் இபாதா) போதிக்கின்றன.
பன்மைச் சமூக அமைப்பொன்றில் இஸ்லாத்தை நாம் எங்ஙனம் பிரயோகிக்கப் போகின்றோம் என்பது மங்கலான பகுதியாகவே உள்ளது. இஸ்லாமிய அறிவு குறிப்பிட்ட சில பகுதிகளாகச் சுருக்கப்பட்டு, அவ்வப்போதைய “மார்க்கத் தேவைகளுக்காக” விநியோகிக்கப்படும் ஒன்றாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. இஸ்லாம் ஒரு வாழ்வியல் முறையாக மாற்றப்படவில்லை என்பதையே இங்கு காண்கிறோம்.

முஸ்லிம் சமூகத்தை இலங்கை போன்றதொரு சமூக அமைப்பில் சரியாக வழிநடாத்தத் தகுதியான இஸ்லாமிய அறிவுத் துறைசார்ந்தோர் அவசியமாகின்றனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவோ நாம் எதிர்பார்க்கும் இந்த இடத்தில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இங்கு நாம் வேண்டி நிற்பது மூன்று மாதங்கள் பத்வா தொடர்பான கற்கை நெறியைப் பூரணப்படுத்திய முப்திகளை அல்ல. நீண்டகாலத்தில் முஸ்லிம் சமூகத்தை இஸ்லாமிய அடிப்படையில் வழிநடாத்தக் கூடிய கள ஆய்வும் எதிர்கால நோக்கும் கொண்ட ஆழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களையே.

இன்று காலம், இடம், சூழ்நிலை, வர்த்தமானம் குறித்த குறைந்தபட்ச பிரக்ஞையுமின்றி இடக்கு முடக்காகவும் குறுக்கு மறுக்காகவும் பத்வா கொடுக்கப்படுவதைப் பார்க்கின்றோம். அவை களப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதாகவும் இல்லை. ஷரீஆவின் ஒட்டு மொத்த நோக்கங்களை நிறைவுசெய்வதாகவும் இல்லை எனவே, இன் றைய உடனடித் தேவை ஆய்வுக்கும் பத்வாவுக்கு மான ஒரு சுதந்திர சபையாகும். அது நடைமுறைப் பிரச்சினைகளை கள ஆய்வுகள் மூலம் புரிந்து கொண்டு, மிகுந்த சமூகப் பொறுப்புடன் இலங்கையனாகவும் இஸ்லாமியனாகவும் வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டல்களை முன்வைக்க வேண்டியுள்ளது. அதேபோன்று எந்த நுண்மையான அரசியல் பின்புலமுமின்றி வெளிப் படைத் தன்மையுடனும் சுயாதீனமாகவும் சுதந்திர மாகவும் இயங்க வேண்டியுமுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை வாழ வைக்க முடியும் என்பதை இதுபோன்ற ஆய்வுக்கும் பத்வாவுக்கு மான சபையொன்றின் மூலமே நிறுவ முடியும்.

சமகால சர்வதேச சிறுபான்மைச் சூழல்களிலிருந்து இதற்குச் சிறந்த முன்னுதாரணங்களை நாம் பெறலாம். எடுத்துக் காட்டாக வட அமெரிக்க பிக்ஹு கவுன்ஸில். நாம் இலங்கையில் எதிர்பார்க்கும் அதே பணியை அமெரிக்காவில் மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான சபை (CAIR – Committee for American Islamic Relations) அமெரிக்காவில் வாழும் சுமார் 10 மில்லியன் முஸ்லிம்களின் சமூக அரசியல் விவகாரங்களைக் கையாள்வதுபோல் North American Fiqh Council அமெரிக்க சிறுபான்மை முஸ்லிம்கள் சிறுபான்மைச் சூழலொன்றில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் மூலம் புரிந்துகெண்டு அவற்றுக்குத் தீர்வு சொல்கின்றது.

இதேபோன்றதுதான் லத்தீன் அமெரிக்காவில் செயல்படும் The Islamic Organization of Latin America. தென் அமெரிக்காவில் உள்ள அனைத்து நாடுகளிலும் போல் முஸ்லிம்கள் சிறுபான்மை யாக வாழ்கின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் ஷரீஆ ரீதியான பிரச்சினைகளுக்கு நடைமுறை ஆய்வுகள் மூலம் பத்வாக்களை முன்வைக்கின்றது. ஐரோப்பிய சிறுபான்மை முஸ்லிம்கள், தாம் சிறுபான்மைச் சூழலொன்றில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய பத்வாக்களைப் பெறும் நோக்கில் ஸ்தாபித்துள்ள  -மஜ்லிஸுல் அவ்ரூபி லில் இப்தாஇ வல் புஹூஸ்  (ECFR – European Council for Fatwa and Research) வருடாந்தம் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் ஆய்வு மாநாடுகளை நடாத்துகின்றது. அதில் குறிப்பிட்ட நாட்டில் வாழும் சிறுபன்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள் முன்வைக்கப் படுவதோடு, அவற்றுக்கான இஸ்லாமிய பத்வாக்களும் வெளியிடப்படுகின்றன.
உலகப் புகழ்பெற்ற பெரும் முஜ்தஹித்களும் சட்ட அறிஞர்களும் இச்சபையில் அங்கத்துவம் வகிக்கின்றனர். அதேவேளை, நிபுணத்துவம் பெற்ற சமூக ஆய்வாளர்களும் இச்சபையில் உள்ளடங்குகின்றனர் ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய சபை பத்வாக்களை வெளியிடுவதில் நான்கு மத்ஹபுகளையம் கருத்திற் கொள்வதோடு, அவசியப்படும் பட்சத்தில் மத்ஹபுகளின் வரை யறைகளுக்கு அப்பால்  சென்று, புத்தம் புதிதாக இஜ்திஹாத் செய்வதன் மூலம் தீர்ப்புக்களை வெளியிடுகின்றது. சமூக யதார்த்தங்களையும் பிரச்சினைகளின் ஆழ அகலங்களையும் புரிந்து கொண்டு ஷரீஆவின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இச்சபை பத்வா வழங்குகின்றது. இதுவே இச்சபையின் சிறப்பம்சமாகும். அது போன்று சுயாதீனமாகவும் எந்தவொரு அழுத்தத்திற்கு அடிபணியாமலும் இது போன்ற நிறுவனங்கள் இயங்குகின்றன.

இது போன்ற ஆய்வுக்கும் பத்வாவுக்குமான சுதந்திர சபையொன்றை நிறுவுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். நிலவும் உளுத்துப் போன, பொக்கான பாரம்பரியங்களைக் காப்பாற்றும் அவசரத்தில் நடைமுறைக்குத் தேவையான இஸ்லாமிய அறிவுப் பரப்பை கட்டியெழுப்புவதை நாம் புறக்கணிக்க முடியாது. ஆய்வும் தேடலும் இன்றைய தேவையாகியுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் கல்வி, உணவு முறை, கலாசாரம், அரசியல், பொருளாதாரம், வணிகம், மருத்துவம் போன்ற பல்வேறு துறை களிலுவும் பிரத்தியேகமான பல பிரச்சினை களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இங்கு இலங்கைப் பிரஜையாக இருப்பதற்கும் இஸ்லாமியனாக இருப்பதற்கும் இடையில் ஒரு மோதல் நிகழ்வதாக பலர் உணர்கின்றனர். எனவே, இப்பிரச்சினைகள் குறித்த ஆய்வு களையும் அதன் பின்னணியிலான பத்வாக்களை யும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்து நிற்கின்றது. இதற்கு ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஒரு சுதந்திர சபை குறித்து சிந்திப்பதைத் தவிர வேறு வழியேதும் கிடையாது.

3 comments:

  1. முஸ்லிம் நாடுகளில் வாழுகிற முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் முஸ்லிம்கள் தாம் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் அவர்களின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வு தொடர்பாக பெரும்பாலும் வேறுபட்டவைகளாகும். சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் ஆய்வுக்கும் பத்வாவுக்குமான நிறுவன தேடல் அதிகரித்து வருகிறது. நாடுகளில் சிறுபாண்மையினராக வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் தமது மூதாதையரின் அன்னியப்படாத சகவாழ்வின் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்வது மிக மிக முக்கியமாகும்.இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்து 1970 பதுகளின் பின்னர் சூபிகளான தமது மூதாதையரின் வெற்றிகரமான சகவாழ்வு பரிசோதனை அனுபவங்கள் புறக்கணிக்கப்பட்டமையும். முஸ்லிம் நாடுகளின் அனுபவங்களை அப்படியே பிரதிபண்ணி முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் இலங்கையில் செயல்படுத்த முயன்றமையும் முஸ்லிம்களின் வாழ்வில் பல்வேறு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.இது ஆய்வுக்குரியது. 1980 பதுகளில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் வெளிவாரிப் பணபலமுள்ள அரபிய நிறுவனங்களின் செல்வாக்கு உருவாக்கிய பாதிப்புகளுக்கும் 1900 காலக் கட்டத்தில் தென்னிலங்கை முஸ்லிம்கள் வாழ்வில் வெளிவாரி பணபலமுள்ள இந்திய முஸ்லிம் வர்த்தக சமுகத்தின் செல்வாக்கு உருவாக்கிய பாதிப்புகள் பற்றியும் அவை சகவாழ்வு சூழலில் ஏற்படுத்திய தாக்கங்களும் பற்றியும் ஆய்வில் ஈடுபட ஆயுத்தம் செய்தேன். பின்னர் பொருளாதார வசதி இன்மையால் அம்முயற்ச்சியை கைவிட்டுவிட்டேன். புதிய தலைமுறை இலங்கை முஸ்லிம் அறிஞர்கள் இவ்விடயங்களை எல்லாம் கவனத்தில் கொள்வார்கள் என நம்புகின்றேன்.

    ReplyDelete
  2. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
    (அல்குர்ஆன் : 33:21)
    www.tamililquran.com

    ReplyDelete
  3. If we have Islamic scholars who learned Quran and Hadees in depth from the same understanding of Salafus saliheens, definitely they will find solution to issues for issues of all times and all places in this world.

    But So called scholars promoting Groups, Shirk and Bida should not utillize the unstable situation of Sri Lankan Muslims to establish their Group ideology. This will not bring any good but more problems and divisions among Muslims only.

    In simple word such fatwa to be given by Scholars of Islam But not from Scholars of Groups.

    It is lack of our knowledge in Islam, which direct us to research out if Islam, to solve this issues of Muslims who live as minority in Non-Muslim countries.

    Rather the existing teachings of Quran, Hadees and the way of Salaf has given us complete package already.

    For Example: IF one Muslim committed Zina, in a Muslim country He will be punished as per islamic shareea depending on his marital status. However if the same Muslim lived in a non-Muslim country.. This punishment will only applicable, provided that the non-muslim authority will not confront in this regard and an Islamic environment is established already there... otherwise the Muslims living in minority country can not apply this law as for two reasons.
    1. The non-muslim authority will harm for this act.
    2. To apply such punishment as per shareea, 1st condition is that we should have established a suitable Islamic environment that has taken all means to prevent or stop Zina, After establishing such environment only the punishment will be made for a crime maker.

    This is not new, but from the time of Islam

    NOTE: So there is nothing to produce new rather, it is upon us to know Islam in its pure form from our salaf time, This will solve our issues in Muslim or Non-muslim country simply.

    ReplyDelete

Powered by Blogger.