Header Ads



முஸ்லிம்களை துரத்தும் நீரிழிவு


இன்று உலகில் அதிகமானோரைப் பீடித்துள்ள நோயாக நீரிழிவு நோய் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்களுக்கமைய 2018 இல் உலகளாவிய ரீதியில் 429 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030 ஆம் ஆண்டாகும் போது உலகில் மக்களின் மரணத்திற்கான பிரதான காரணிகளில் 7 ஆவது இடத்தை நீரிழிவு பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.  2045 இல் 90 வீதமானோரை இந் நோய் பீடிக்கும் என்பதும் 2012 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் பேர் நீரிழிவு நோயினாலேயே உயிரிழந்தனர் என்பதும் இந்த இடத்தில் கவனத்திற்குரியதாகும்.

அந்த வகையில் இலங்கையும் இந்த நோய்க்கு விதிவிலக்கல்ல. இலங்கையில் சுமார் 4 மில்லியன் பேர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீரிழிவு சங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'' நீரிழிவு ஒரு நோயல்ல. அது ஒரு சமூகப்பிரச்சனை'' என கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட விரிவுரையாளர் வைத்திய நிபுணர் எம். அருளானந்தம் தெரிவித்துள்ள கருத்தும் இந்த இடத்தில் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். '' 5 செக்கனுக்கு ஒருவர் நீரிழிவினால் பாதிக்கப்படுகின்றனர். 10 செக்கனுக்கு ஒருவர் மரணமடைகின்றனர். 30 செக்கனுக்கு ஒருவர் கால், கைகளை இழக்கின்றனர். நீரிழிவு ஒரு நோயல்ல சமூகப்பிரச்சினை.  நம்முடைய உடற்பயிற்சி, உணவுப்பழக்கவழக்கங்கள், நடைமுறைகளால் அதனை கட்டுப்படுத்த முடியும்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'' நமது உணவு நடைமுறைகள் மாற்றம் பெற்றுவிட்டன. அதனை மாற்றம் செய்ய வேண்டும். கலாசாரம், அதன் நடைமுறைகள் எல்லாம் உடல் திறன் மேம்பாடுகள் சுகாதார நடைமுறைகளுடனே ஏற்படுத்தப்பட்டுள்ளன'' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.  நீரி­ழிவு வியாதி, உயர், தாழ் இரத்த அழுத்­தங்கள், கொலஸ்ரோல், புற்­றுநோய் போன்ற தொற்றா நோய்­களால் பீடிக்­கப்­படும் முஸ்­லிம்­க­ளது தொகை முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் மூன்று மடங்கு அதி­க­மாகும் என அண்­மைக்­கால ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தில் நீரிழிவு வியா­திக்­கா­ரர்கள் அதி­க­மாகிக் கொண்­டு­வ­ரு­வது அவ­தா­னிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. முஸ்லிம் சமூ­கத்­துக்குள் 25 வீத­மா­ன­வர்கள் அந்த நோயின் பாதிப்­புக்கு உள்­ளாகி இருப்­ப­தாக ஆய்­வுகள் கூறு­கின்­றன.

இலங்­கையின் தனியார் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­பெறும் நோயா­ளி­களில் முஸ்­லிம்­க­ளது தொகை அதி­க­மாகும். இலங்­கையில் 9.7 வீத­மாக முஸ்­லிம்கள் வாழ்ந்­தாலும் சிகிச்­சைக்­கா­க­ வரும் மொத்த நோயா­ளி­களில் முஸ்லிம் நோயா­ளி­க­ளது விகி­தா­சாரம் சுமார் 30 வீதத்தைத் தாண்­டி­ய­தாக இருக்­கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இப்­ப­டி­யான ஒரு­நிலை ஏற்­படக் கார­ணங்கள் யாவை? இந்­நி­லை­யி­லி­ருந்து ஓர­ள­வா­வது மீட்­சி­ பெற எடுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் யாவை? இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வேண்­டி­ய­வர்கள் யார் ? போன்ற அம்­சங்கள் பற்றி ஆரா­யப்­ப­ட ­வேண்டும். இது காலத்தின் தேவையும் மார்க்க மற்றும் சமூகக் கட­மை­யு­மாகும்.

அந்த வகையில்  இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில் உள்ள சுகா­தாரத் துறை­யோடு தொடர்­பான பிரச்­சி­னைகள் பற்றி விஞ்­ஞா­ன­பூர்­வ­மான, ஆதா­ர­பூர்­வ­மான புள்­ளி­வி­ப­ரங்கள் திரட்­டப்­ப­ட­வேண்டும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது மக்களை பாரிய நோய்களிலிருந்து மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

-Vidivelli

No comments

Powered by Blogger.