May 08, 2018

"பௌத்தர்கள், முஸ்லிம்களிடமிருந்து இருந்து விலகிச்செல்வது நல்லதற்கல்ல"

மீண்டும் ரமழான் வருகிறது. நல்லிணக்கச் செயற்பாடுகள் உயர்மட்டத்தில் இருக்கும் நிலையிலேயே இம்முறை ரமழான் வருகிறது. நல்லிணக்கம் என்ற வகையில் யாரும் எதையும் செய்யட்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சமூகம் இருப்பதாகத் தெரிகிறது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் நம்மவரின் சகவாழ்வு இம்முறை பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. பலரது நெஞ்சை உடைக்கும் வகையில் நம்மவர் கலந்து கொண்ட பலூன் உடைத்தல்கள் சமூகத்தின் பேசுபொருளாகின. ஹிரு தொலைக்காட்சி நடத்திய அவுருது குமாரயா போட்டியில் முஸ்லிம் பெயர் தாங்கிய இளைஞன் தெரிவு செய்யப்படுகிறான். பதுளை சிறைச்சாலையில் நடத்தப்பட்ட புத்தாண்டுப் போட்டிகளில் பொட்ட நௌபர் பல பரிசில்களை வென்று சாதனை படைக்கிறார்.

இப்படித்தான் அண்மைக் காலங்களில் சகவாழ்வு கரைந்து போனது. மெதுவானதொரு நகர்ச்சி சமூகத்தை தனது இருப்பிடத்திலிருந்து பெயரச் செய்திருக்கிறது. தன்னாலே கரைந்து போவதும் தன்னாலே ஒன்று சேர்வதுமான தான்தோன்றித் தனமான செயற்பாடுகளைத் தான் சமூகத்தில் அதிகமாகக் காணக் கிடைக்கிறது.

முதலில் சிதறுண்டு செல்லுகின்ற சமூகத்தை இழுத்துப் பிடித்து நங்கூரமிட வேண்டும். அதற்கு நல்ல வாய்ப்பைத் தரும் வகையில் தான் ரமழான் சமூகத்திடம் வருகிறது. முதுகின் மேல் விழுந்த சூடுகள் இப்பொழுது சமூகத்தை ஒன்றுபடுத்தியிருக்கின்றன. இதன் அறுவடையை ரமழான் மாதத்தில் அடைந்து கொள்வது தான் புத்தியுள்ள சமூகத்துக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் கிடைத்திருக்கும் ரமழானை ஊரை ஒன்றுபடுத்துவதற்கான வாய்ப்பாக சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்த சமூகத்துடனான நல்லுறவை வளர்ப்பதிலும் கடந்த காலங்களில் ரமழான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ரமழானிலும் இது கவனமாக தொடரப்பட வேண்டும். இம்முறை வெசாக் தினத்தில் நடத்தப்பட்ட தன்சல்களின் போது முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டும் மனப்பாங்கு வெளிப்படையாகவே அவதானிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம் சமூகத்திடம் இருந்து விலகிச் செல்வது நல்லதற்கல்ல. ஆகவே பெரும்பான்மைச் சமூகத்தை அளாவிச் செல்வதற்கு இந்த ரமழான் பயன்படுத்தப்பட முடியும்.

முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடுத்தி ஓரணியில் திரளச் செய்வதும், அள்ளுண்டு செல்லும் சமூகத்தை தூக்கி நிறுத்துவதும், ஏனைய சமூகங்களுடனான உறவுகளை வளர்ப்பதுமென தலைகொள்ளாத வேலைகள் இந்த ரமழானுக்கெனக் காத்திருக்கின்றன. சமூகத்தின் எல்லாத் தரப்புகளும் இந்த வேலைகளில் பங்கெடுக்க முடியும். இதற்கு முதலில் ஊரின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஊர்மட்ட சூறாக்களை இந்த ரமழானில் உருவாக்கிக் கொள்வதற்கு சமூகத்தின் சகல தரப்புக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

யாராவது திட்டமிட்டுச் சதி செய்தாலேயொழிய, இம்முறை சமூகத்தில் பிரிவினைகளும் பிரச்சினைகளும் பேசப்படுவது குறைவாகவே இருக்கப்போகிறது. ஆகவே ஏற்கனவே தயாரித்து வைத்த பயான்களையும் உரைகளையும் விடுத்து, சமூகத்துக்குத் தேவையான மேலே சொல்லப்பட்ட விவகாரங்களில் சமூகத்தை வழிநடத்துவது உலமாக்களின் பொறுப்பாகும்.

ஏதேதோ நிதியங்களின் பெயர்களைச் சொல்லி அதற்கு நிதி திரட்டும் பணியில் இறங்குவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகம் இந்தக் காலத்தில் செயற்பட வேண்டும்.

ஒவ்வொரு ரமழான் தாண்டும் போதும் புதிய புதிய வேதனைகளையும் வலிகளையும் தாண்டித் தான் சமூகம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அடுத்த ரமழானை பாதுகாப்பான சூழலில் வாழத் தக்க வகையில் இந்த ரமழானை முஸ்லிம் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

– அபூ ஷாமில் –

2 கருத்துரைகள்:

காலத்திற்குத் தேவையான பதிவு அனைவரும் குறிப்பாக பொறுப்புக்களை வகிப்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம்


முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நெருங்கிச் செல்வதில்தான் நமக்கான தீர்வு உள்ளது.

"நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், "
(அல்குர்ஆன் : 2:208)
www.tamililquran.com

Post a Comment