Header Ads



கைப்பு மருந்துகளின் போலியும், பக்கவிளைவுகளும்..!!

-Zainulabtheen Siththy Humaiza-

ஓவ்வொரு சமூகத்தவருக்குமுடைய மத அனுட்டானங்களுடனான சுதந்திர வாழ்வை சமாதான சூழ்நிலையில் அனுபவித்தல், தாங்கள் இழந்த உரிமைகளைப் மீளப் பெற்றுக்கொள்ளுதல், நியாயமான நிலையிலான வாழ்க்கைச் செலவில் வாழ்வைக்கழித்தல், இழக்கப்பட்ட இடங்கள் மற்றும் உறவுகளை மீளப்பெறுதல் அல்லது அதற்கு இணையான நீதியான நியாயங்களைத் தேடிக்ககொள்ளுதல், அவஸ்தைகளுக்குள்ளிருந்து மீண்டு நிம்மதியை நுகர்தல் போன்ற ஏராளமான எதிர்பார்ப்புக்களுடனேயே மக்கள் இவ்வரசைக் கோலோச்சினர். ஆனால் நடப்பவைகளை நோக்குகின்றபோது எல்லாமே ஒரே சுவைப்பானங்கள், ஊற்றப்படுகின்ற குவளைகள் தான் போலி வடிவம் காட்டுகின்றன என்பதை நீரூபிப்பதாய் அமைகிறது. 

ஆசியாவின் ஆச்சர்யக்கனவை விதைத்த அரசில் விரக்தியுற்ற மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை சிம்மாசனத்தில் அமர்த்தியபோது கொண்டிருந்த எதிர்பார்க்கைகள் பொய்ப்பிக்கப்பட்;டமை ஏற்படுத்திய அதிருப்திகள் மக்களை அரசியலில் இருந்தும் அரசாங்கத்திலிருந்தும் சலிப்படையச்செய்தது மட்டுமின்றி ஒதுங்கல்போக்கினையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அரசாங்கம் விடிவைப்பெற்றுத்தரும், இவரின் தலைமை புரட்சிகரமானதாக அமையுமென ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து ஏமாற்றங்களை மட்டுமே விளைவாகக் கண்ட மக்கள் தங்களிலிலிருந்து வேறுபட்டதாகவே அரசியலை நோக்கவிழைகின்றனர். தத்தங்களது சுயநலன்கள் சார்ந்த அடைவுகளுக்கான ஒரு தளமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்தினரால் கையாளப்படும் கருவியே அரசியலாக பிரதிபலிப்பதாக மக்கள் உணருகின்றனர். இதனை அம்மக்களது ஆதங்க வார்தைகளே வெளிக்கட்டுகின்றன. இன்னொருபுறமாக நோக்கின் மாற்றுவழியின்றிய நிலையில் மக்கள் அவர்களின் விரல்கள் கீறிய பள்ளடிகளாலேயே அவர்களது விரல் துண்டிக்கப்படும் துன்பத்தை ஒவ்வொரு முறையும் அனுபவிக்கின்றனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் போக்கினை அவதானிக்கின்றபோது ஆரம்பத்தில் வாக்குறுதிகளை அள்ளிக்குவித்துக்கொண்டு மேடைகளை அதிர வைத்த அரசாங்கம் நிகழ்திய சாதனைகள் எதுவுமில்லாது கடந்தகால அரசியலிலிருந்து எதுவித மாற்றங்களையும் காண்பிக்கவில்லை. நூறு நாள் வேலைத்திட்டம் என்று தொடங்கி, தங்களுக்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையை மிளிர வைப்போம் என கூறியவர்கள் இன்னும் தங்களை நீடித்துக்கொள்வதற்கான வழிகளையே ஆள்மாற்றி ஆள் தேடிக்கொண்டிருக்கும் நிலை என்ன?!. மக்களின் நலன்களை விடுத்து ஒருவரைத்தள்ளிவிட்டு ஒருவர் அரியாசனம் ஏறுவது எவ்வாறு என்றும் ஒன்றாக இருப்பதாகக்காட்டிக்கொண்டபோதும்  தத்தங்களது கட்சியை ஓங்கச்செய்தல், தான் நீடித்து நிற்பதற்கு வழியென்னவென்று தன் நிலை சார்ந்து மட்டும் தங்களது சாணக்கிய சிந்தனையைச்செலவிடுதல் என்ற நிலைப்பாட்டிலேயே பெரும் தலைவர்கள் இருக்கின்றார்கள் என்பதை அண்மைய நிகழ்வுகள் பலவும்,  தொழிலாளர் தின மேடைகளும், கொள்கைப்போக்குகளும் வெளிக்காட்டுகின்றன. 

மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகியிருக்கின்றார்கள் என்பதை தாங்கள் புரிந்து கொள்கின்றோம் என்றும் அவ் இன்னல்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டிய கட்டத்தில் மக்கள் இருக்கின்றார்கள் என்றும் ஆரம்பத்தில் கூறியவர்கள் காயங்களை ஆற்ற மருந்துகளைத்தான் இப்போது வழங்குகின்றோம், அதன் கைப்பை மக்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் இறுதியில் அது இனிமையைத்தரும் என்று கூறி தங்களது விலையேற்றத்திற்கும், வரியதிகரிப்பிற்கும், அரசியல் கொள்கைகளுக்கும் நியாயம் தேடிய அரசியல்வாதிகள்  மக்களை மீண்டும் தங்களுக்கு இணங்க செய்தனர். ஆனால் காலக்கழிவில் மக்கள் இன்னும் அதன் இனிமையைக்காணவில்லை மறுதலையாக வாழ்கைச்செலவு இன்னும் இன்னும் பருத்துக்கொண்ட பூதமாய் வாழ்வையே விழுங்கிக்கொண்டிருப்பதை சொகுசு வாகனங்களலில் சுற்றுலா வந்து செல்வோர் அறியார். கொடுக்கப்பட்ட கைப்பு மருந்து தொடர்ந்தும் கொடுக்கப்ட்டுக்கொண்டேயிருப்பதும், சுகங்களுக்குப் பதிலாக பக்கவிளைவுகளையே ஏற்படுத்துகின்றமையுமானது மருந்துகளில் சந்தேகதத்தை தோற்றுவித்து இதன் பயன்கள் போலி மருந்து விற்பன்னர்களுக்கு மட்டுமே கிடைப்பதாகவும் தாங்கள் தீரா நோய்க்குட்படுத்தப்படுவாதாகவும் மக்கள் அச்சமுறுகின்றனர்.

விலையேற்றம், அதிகரித்த வாழ்க்கை செலவு அடிநிலை மக்களின் வாழ்வை ஆட்டம் காணச்செய்திருக்கிறது. அது மாத்திரமின்றி விவசாயத்திற்கே சிறப்புப்பெற்ற இலங்கையின் பல பகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேளாண்மைச்செயெ;கை தடை அரிசியின் மீதான தட்டுப்பாட்டினையேற்படுத்தி விலையேற்றத்தை இன்னும் தூண்டிவிடுமோ என்கின்ற பீதியை வறிய மக்களிடத்தில் தோற்றுவித்திருக்கின்றது. 

சரியான முற்போக்கான கொள்கைத்திட்டமோ சகல மட்ட மக்களையும் இணைத்தவாறான அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் குறித்த அக்கறையோ கொள்ளாத அரசியல் வாதிகள் தாங்கள் நாட்டின் அரசியலை முன்னெடுக்க தாங்கள் சொகு அறைகளில் இருந்துகொண்டும் சொகுசு வாகனங்களில் பணயத்திற்கொண்டும் சுமையை வறியவன் தலையில் கட்டிவிட்டு அவனை இன்னும் கூனிடச் செய்வதிலிருந்த விடுபட்டு நாட்டை முன்னேற்றிடும் தந்திரோபாயங்கள் நிறைந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க ஒன்றுபடவேண்டும். அதற்கான மருந்தை சாமாண்ய மக்களுக்கு மாத்திரம் பருககொடுக்காமல் மக்களில் ஒருவராயுள்ள அரசியல்வாதியும் இணைந்தே உட்கொள்ள வேண்டும். அல்லாவிடில் அரசியல்வாதியின் தொற்றே ஊரை அழித்திடபோதுமாக அமைந்தவிடும். அல்லாமல் விலையேற்றத்தை வானளாவ உயர்த்திவிட்டு மானியங்களை வழங்குவது எந்தவித வினைத்தினையும் காட்டிடாத சமுர்த்தி மற்றும் மாதாந்த பொதுசன உதவிக்கொடுப்பனவு போன்ற அரசின் ஏனை கொள்கைகளைப்போல் அர்த்தமற்றதாகிவிடும்.

No comments

Powered by Blogger.