Header Ads



சமூகமே நீ, கண்விழிக்க மாட்டாயா..?

-வை எல் எஸ் ஹமீட்-

இன்றைய (08/05/2018) Ceylon Today பத்திரிகையின் முதற்பக்கச் செய்தியின்படி அமைச்சர்களான மனோகணேசன், றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோர் விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச இருக்கின்றார்கள். பேச இருக்கின்ற முக்கிய விடயம் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க ஜே வி பி கொண்டுவந்திருக்கின்ற பிரேரணையின் பின்னணியில் அரசியலமைப்பை துண்டு துண்டாகத் திருத்தாமல் தேசியப் பிரச்சினைக்கான ( அதிகாரப்பரவலாக்கம்) தீர்வு, பாராளுமன்ற தேர்தல்முறை மாற்றம் மற்றும் ஜனாதிபதிப் பதவி குறித்த நிலைப்பாடு அனைத்தையும் உள்வாங்கியதாக முழுமையான அரசியலமைப்பு மாற்றமே இடம்பெற வேண்டும்; என்று கோர இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பைத் தாமதிக்கச் செய்வதற்கான தந்திரோபாயமா? அல்லது அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை விரைந்து பெற்றுக்கொடுத்துவிட வேண்டும்; என்று இந்தியா போன்ற சக்திகளின் தூண்டுதலால் முன்வைக்கப்படும் கோரிக்கையா? என்று தெரியவில்லை.

தேசியப்பிரச்சினை என்று சிலர் அடையாளம் காண்பது அதிகாரப்பகிர்வு தொடர்பான தமிழ்த்தரப்பின் நிலைப்பாடாகும். அவர்கள் பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகப்பட்ச அதிகாரம் கேட்கிறார்கள். இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடா? அவர்கள் சமஷ்டி கேட்கிறார்கள். இதுவும் முஸ்லிம்களின் நிலைப்பாடா?

ஆம் என்றால் அதையாவது இந்த கட்சிகள் கூறவேண்டும். அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு எந்த வகையில் முஸ்லிம்களுக்கு நன்மையானது? என்று கூறவேண்டும். பொலிஸ் அதிகாரம் எந்த வகையில் முஸ்லிம்களுக்கு நன்மையானது? என்று கூறவேண்டும். சமஷ்டி எந்தவகையில் நன்மையானது? என்று கூறவேண்டும். இதுவரை கூறியிருக்கிறார்களா? அல்லது சமூகம்தான் கேட்டிருக்கின்றதா? அவர்கள் எல்லாவற்றிற்கும் கையுயர்த்திவிட்டு வந்ததன்பின் இரண்டு கிழமைக்கு முகநூலில் பாட்டுப்பாடுவதற்கு சமூகம் காத்திருக்கிறது.

ஆகக்குறைந்தது அதிகாரப்பகிர்வில் இக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்றாவது கூறியிருக்கின்றார்களா? நாம்தான் கேட்டிருக்கின்றோமா?

அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு ஆபத்தானது என்றால் 12% உள்ள ஒரு சமூகத்தைத் திருப்திப்திப்படுத்த 10% உள்ள ஒரு சமூகத்தின் எதிர்காலத்தைத் தொலைக்கலாமா? முஸ்லிம்களையும் பாதிக்காத, தமிழர்களையும் திருப்திப்படுத்தக்கூடிய மாற்றுத்தீர்வேதும் உண்டா? என்றாவது சிந்தித்திருக்கின்றோமா? நமக்கு நன்மையில்லாவிட்டால் பறவாயில்லை; ஆபத்தில்லாமலாவது இருக்கவேண்டுமே? என்கின்ற அளவுக்காவது சிந்தித்திருக்கின்றோமா?

அதிகாரப்பகிர்வுதான் ஒரேயொரு தீர்வு என்றுதான் இருந்தால் அந்தத்தீர்வுக்கள் முடிந்தளவு முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்காவது ஏதாவது பிரேரணை சமர்ப்பித்திருக்கின்றோமா? அதிகாரம் இல்லாமலேயே வட மாகாணசபை, முஸ்லிம்களின் விடயத்தில் நடந்துகொள்கின்ற எதிர்நிலைகளை அங்கிருக்கின்ற அமைச்சரே அவ்வப்போது பேசுகின்றார். பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகப்பட்ச அதிகாரம் வழங்கப்பட்டால் அங்கு மாட்டப்போகின்ற முஸ்லிம்களின் நலனைப் பாதுகாக்க ஏதாவது சரத்துக்களை உள்வாங்குவதற்கு ஏதாவது பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கின்றதா? ஆகக்குறைந்தது அவை குறித்து சிந்திக்கப்பட்டிருக்கின்றதா?

இவை தொடர்பாக இந்த சமுதாயத்தை ஒரு சிறிதளவாவது கண்விழிக்க வைத்துவிடமுடியாதா? என்றுதான் அண்மையில் முகநூலில் ஒரு கலந்துரையாடலைக்கூடத்  தொடங்கினேன். ஆனால் இதைவிட ஒரு சாப்பாட்டுக் கழகம் தொடங்கி ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று சமைத்து சாப்பிட்டுவிட்டு அதை முகநூலில் பதிவேற்றி  அச்சாப்பாடு தொடர்பாக ஒரு கலந்துரையாடலை தொடங்கியிருக்கலாமே! என்று நினைத்தேன். 

சமூகமே! உனது இந்த நிலையைப் புரிந்துகொண்டுதான் அரசியல்வாதி உன்னுடன் விளையாடுகிறான். அவன் அல்ல குற்றவாளி. நீ தான் குற்றவாளி. அளுத்கமையிலும் அம்பாறையிலும் திகனயிலும் உனக்கு அடிவிழுகின்றபோது அவனும் உன்னுடன் சேர்ந்து அழுகிறான். உன் அழுகை மூன்று நாட்களுக்குத்தான் என்று அவனுக்குத் தெரியும். அதன்பின்  அவன் அவனது பதவியைத் தேடுகிறான். அவனா குற்றவாளி? இல்லை! நீதான் குற்றவாளி!!

இன்று  உனக்குப் பாதகமான இந்தக் கோரிக்கையை எடுத்துக்கொண்டு ஜனாதிபதி, பிரமரைச் சந்திக்க இவர்கள் செல்கின்றார்கள்; என்றால் இதன் பின்னால் யார் இருக்கிறார்கள்???

பாராளுமன்றத் தேர்தல்முறை
—————————————
தற்போதுள்ள பாராளுமன்றத் தேர்தல்முறை நமக்குத் திருப்தியானது; என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. அந்தத் தேர்தல்முறையை நாமேபோய் மாற்றச்சொல்வதா? ஏற்கனவே மாற்றியதையே விட்டுவிட்டு பழைய முறைக்கு செல்லுங்கள்; என்கின்றோம். பாராளுமன்றத் தேர்தல் முறையை இவர்களே மாற்றச் சொல்கிறார்கள். இவர்கள்தான் பேசுகின்றார்களா?

ஜனாதிபதி ஆட்சி முறை
——————————
பொதுவாக இது சிறுபான்மைக்கு சிறந்தது; என்ற கருத்து இருக்கின்றது. காரணம் சிறுபான்மையின் வாக்கு இல்லாமல் ஜனாதிபதியாக ஒருவர் வரமுடியாது. அதேநேரம் இதே தேர்தல் முறையின்கீழ் ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் அதிலும் சில சாதகங்கள் உண்டு. இருந்தாலும் இது ஆழமாக, விரிவாக சமூகத்திற்கு மத்தியில் கலந்துரையாடப்பட வேண்டும். இதுதொடர்பாக, கல்விமான்கள், புத்திஜீவீகள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்; என ஒரு கோரிக்கையை விடுத்திருந்தேன். யாரும் அவ்வாறு கருத்துக்களை முன்வைத்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் இவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜனாதிபதி பதவி ஒழிப்பு சற்றுத் தாமதப்படலாம். ஆனால் ஏனயவை விரைவு படுத்தப்படலாம். அது புத்திசாலித்தனமா? ஜனாதிபதி பதவி ஒழிப்புக்கு எதிராக கடும்போக்குவாத சிங்களவர்களும் மகாசங்கத்தினரும் ஏற்கனவே  எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இது நிறைவேறுமா? என்று கூறமுடியாது. அவ்வாறான சூழ்நிலையில் சிறுபான்மை முழுமையாக இதனை தேவைப்பட்டால் எதிர்க்கலாம். அதற்காக எங்களுக்கு பாதகமானவற்றை நாமே போய்க்கேட்கலாமா?

சமூகமே கண்விழிக்க மாட்டாயா?

2 comments:

  1. முஸ்லீம் பிரதி நிதித்துவம் என்பது இந்த நாட்டிலே என்ன செய்கின்றது
    எதை சாதித்தது என்று உற்று நோக்கினால் பெரிதாக அதனால் எதையும் சாதிக்க முடியாது என்றுதான்
    சொல்ல வேண்டும். தற்போது 21க்கு மேற்பட்ட முஸ்லீம் பிரதிநிதித்துவம்
    இருந்தும் என்ன நடந்தது என்பதை நாம் எல்லோரும் அறிந்து கொண்டோம்.
    இந்த நாட்டிலே சிறுபான்மையினராக
    எல்லாபாகங்களிலும் பரந்து சிதறி வாழ்கின்ற முஸ்லீம்கள் அரசியல்ரீதியாக தனித்து பயணிக்க
    முற்பட்டதன் விளைவே நாம் இன்று அனுபவிக்கும் அச்சபாடான நிலைமையாம். எமது நாட்டிலே முஸ்லீம்களுக்கு ஒரு இடர் எங்கேயாவது ஒருமூலையில் ஏற்படுமாக இருந்தால் அந்த இடத்தை
    பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி உடன் குரல் கொடுக்கூடியதாக அவர் அண்மையில் இருக்கவேண்டும்,அத்தோடு அவரை
    தெரிவு செய்வதில் முஸ்லீம்களுக்கு
    நேரடியான பங்களிப்பும் இருக்க வேண்டும். இதற்கு தொகுதி முறையே
    சிறந்ததாகும். அந்த பிரதிநிதி மாத்திரமல்ல அவர்சார்ந்த கட்சி அதன்
    தலைமை கூட குரல் கொடுப்பது மட்டுமல்ல உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தமும்
    உருவாகும். ஏனெனில் அங்கு சிறுதளவான வாக்கு வங்கி முஸ்லீம்களிடம் இருந்தாலும் அங்கு
    பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை
    தீர்மானிக்கின்ற சக்தியாக அதுமாறக்கூடும் என்பதே. மாவட்ட ரீதியான விகிதாசார பிரதிநிதித்துவ
    முறை முஸ்லீம் கட்சிகளை உருவாக்கி
    இனத்துவேசத்தை வளர்த்து நாம் பெறும் பிரதிநிதித்துவங்கள் என்ன
    செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் கண்கூடாக கண்டுகொண்டிருக்கின்றேம்.எனவே வடகிழக்குக்கு வெளியே வாழ்கின்ற
    முஸ்லீம்கள் தொகுதி முறைமையின்
    கீழ் தனது அரசில் பயணத்தை தேசிய
    ரீதியில் இணைந்து முன் கொண்டு செல்வதே உத்தமமாகும்.முஸ்லீம்கள்
    மத்தியில் சிறந்த தலைமைகள் உருவாகினால் பெரும்பான்மை மக்களே அவர்களை தெரிவு செய்த
    வரலாறுகள் உண்டு.இந்த நாட்டை
    பொறுத்தவரை அரசியல் தலைமை
    என்பது இன,மத,மொழிகளுக்கப்பால்
    நற்பண்புகளை கொண்டு தீர்மானிக்கப்படுவது அவசியமாகும்.
    வடகிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லீம்களுக்கும் இவைகள் பொருத்தமானதாகும்.இனரீதியான கட்சிகளை அமைத்துக் கொண்டு நாம் பெறுகின்ற பிரதிநிதித்துவங்கள் இறுதியில் இந்தநாட்டிலே ஆட்சி அமைக்கின்ற அரசாங்கத்தோடு கூடட்டுச்சேர்ந்து தங்களினதும் தங்களின் அல்லககைகளினதும் தேவைகளை பெற்றுக் கொண்டு சமூகத்தை இனவாத கிடங்கிலே தள்ளிவிட்டு கைபொத்தி
    வாய்மூடி மௌனித்து போய்உள்ளதை நாம் இன்னும் அறியவில்லையன்றால் நாம் அரசியல் ரீதியாக என்ன விமாசேனத்தை பெறுவது. இனவிகிதாசார தேர்தல் முறை
    கலாநிதி ஹஸ்புல்லா அவர்களே முஸ்லீம் பிரதிநிதித்துவம் பற்றி
    நீங்களே குழம்பியுள்ளீர்கள்.
    இது ஒரு சிக்கலானது.வட கிழக்குக்கு
    வெளியே முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை
    பற்றிசிந்திக்காமல் தங்கள் தங்கள் பிரதேசங்களில் பிரதிநிதிகளை தெரிவதில் தீர்மானிக்கும் சக்தியாக
    முஸ்லீம்கள் இருந்து பெரும்பான்மை
    அரசியல் வாதிகளின் அமிமானத்தை
    பெற ஆலோசனை வழங்குங்கள்
    இதுவே தற்போதய சூழ்நிலைக்கு
    உகந்ததாகும்.

    ReplyDelete
  2. Minority can definetly play a major role in electing the Executive President. However, the question is, will the people (Minority) get any benefits from this? Minority Party leaders becoming the cabinet of ministers and enjoying all benefits. This is the reason, these leaders are opposing the executive presidency system.

    ReplyDelete

Powered by Blogger.