May 08, 2018

முஸ்லிம்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்ய வேண்டும் - பாராளுமன்றத்தில் ஜனாதிபதி


எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும், வடக்கு - கிழக்கு மக்களின் பொறுமையிழப்பை நிரந்தரமாகச் சமரசப்படுத்த வேண்டுமாயின், மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தல் வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையை முழுமையாகத் தோல்வியுறச் செய்வதற்கு, இன்னும் முடியாது போயிருக்கின்றது என்றும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக, சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்று, அந்தக் கொள்கையைத் தோல்வியுறச் செய்வதற்கே தான் முயன்று வந்ததாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு, இன்று (08) பிற்பகல் 2.15க்கு கூடியது. இதன்போது, ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றியபோதே, இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், 

“தற்போது எமது நாடு பல்வேறு கட்சிகளினதும் குழுக்களினதும் அரசியல் பலத்தை உரசிப் பார்ப்பதற்குப் பொருத்தமானவொரு சூழ்நிலையில் காணப்படவில்லை. நாட்டின் முன் காணப்படும் சவால்களை, ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றது என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

“இதன்போது, அந்த முன்னுரிமைகளை யதார்த்தமாக்கிக் கொள்வதற்கு, முதலில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே காணப்படும் அதிகார மோதல்களையும்; இரண்டாவதாக அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காணப்படும் அதிகாரப் போராட்டங்களையும் சமநிலைப்படுத்த வேண்டும். தற்போது காணப்படும் சகலவித அதிகார மோதல்களாலும், மக்களின் எதிர்பார்ப்புகளே பாதிப்புக்குஉள்ளாகின்றன.

“மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், உண்மையான மக்கள் நேயச் செயற்றிட்டங்களின் நிபந்தனைகளாக, பின்வரும் 15 விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

1. மக்களின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிப்படுத்தல்.

2. வறுமையை இல்லாதொழித்தல்

3. இளைஞர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தல்

4. அரச சேவையாளர்களுக்குத் திருப்திகரமான சூழலை ஏற்படுத்தல்

5. பொலிஸ் மற்றும் முப்படையினரின் தன்னம்பிக்கையையும் உயர் குறிக்கோள்களையும் உறுதிப்படுத்தல்

6. சட்டம், அதிகாரம், ஜனநாயகம், மனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றைச் சமூகத்தில் உறுதி செய்தல்

7. தமிழ் மக்களின் சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளல்

8. முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்தல்

9. மலையகத் தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல்

10. நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளைப் பலப்படுத்தி, உறுதி செய்து, தேசத்தின் அடையாளத்தை வலுப்படுத்தல்.

11. பெண்களைப் பலப்படுத்துதலும் அவர்களது நேரடி பங்களிப்பும்

12. சமூகத்திலுள்ள விசேட தேவைகளை உடைய பிரஜைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாகச் செயற்படல்

13. நாட்டின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும், தேசிய வளங்களை எதிர்காலச் சந்தியினருக்கும் பெற்றுத்தரக்கூடிய பேண்தகு அபிவிருத்தியை உறுதிசெய்தல்

14. சமய நம்பிக்கைகள், எமது மரவுரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில், சகல சமயப் பெரியார்களையும் மத குருமார்களையும் மகா சங்கத்தினரையும் பேண்தகு முறையில் போஷித்தல்

15. அரசியல் பலப் பரீட்சைக்கு அப்பால் சென்று, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக சகல இன, மத, அரசியல், கட்சிகளை ஒன்றிணைத்துக் கட்டியெழுப்பப்படும் தேசிய பேண்தகு அபிவிருத்தி இலக்கை உருவாக்குதல்

“மேற்கூறப்பட்ட நிபந்தனைகளின் கீழ் செயற்படும்போது, பூரண மற்றும் நுண் அபிவிருத்தி உபாய மார்க்கங்களூடாகச் செயற்பட வேண்டியதுடன், அவற்றின் வெற்றிக்காக கட்டமைக்கப்பட்ட மாற்றங்களும் அத்தியாவசியமாகும் எனக் குறிப்பிட வேண்டும்ன்என, ஜனாதிபதி மேலும் கூறினார். 

2 கருத்துரைகள்:

Mr. President, If could control those Buddist Monks who are attacking Muslims and their culture, it is a big thing you can do for Muslims in Sri Lanka, if you are serious about peace in the Island.

President election will be 2020 so he wants muslims votes again!

Post a Comment