May 07, 2018

2020 இல் ஓய்வு பெறமாட்டேன் - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டமாக அறிவிப்பு


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரை (2018.05.07 மட்டக்களப்பு, செங்கலடி, மாவடிவேம்பு விளையாட்டரங்கு)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இவ்வருட தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள் மட்டக்களப்பில் இடம்பெறுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். உலகளாவிய தொழிலாளர்களுக்கும் எமது நாட்டின் தொழில்புரியும் மக்களுக்கும் மரியாதை செலுத்துவதற்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். விசேடமாக எமது சகல தொழிற்சங்கங்களும் இன்று எம்முடன் இணைந்து இந்த செயற்திட்டத்தினை வெற்றிகரமாக்குவதற்கு வழங்கிய ஒத்துழைப்பினை பாராட்டுகின்றேன்.

கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் எமது அரசாங்கம் இந்த நாட்டில் தொழில்புரியும் மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இன்று உலகின் சகல நாடுகளிலும் தொழிலாளர்களின் போராட்டங்களின்போது ”தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள்“ என்ற வாசகத்தையே எம்மால் கேட்கக்கூடியதாக உள்ளது. மே மாதம் முதலாம் திகதியே சர்வதேச தொழிலாளர் தினமாக இருந்தபோதிலும் இன்றைய தினத்தில் தொழிலாளர் தின நிகழ்வுகளை நடாத்துவதற்கான காரணத்தை நீங்கள் அறிவீர்கள். இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் தொழிலாளர்களினதும் தொழிற்சங்கங்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.  விசேடமாக கடந்த 30 வருட காலமாக கொடிய யுத்தம் ஒன்றிற்கு நாம் முகங்கொடுத்துள்ளோம். இந்த யுத்தத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய சகல இன மக்களும் உயிரிழந்துள்ளனர். சகல இன தலைவர்களும் உயிரிழந்துள்ளனர். 
அதேபோல் எமது பாதுகாப்பு படையினர், முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவின் பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளார்கள். அந்த யுத்தத்தின் அனுபவங்களுடன் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதனை நாம் தடுக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் விசேடமாக இனங்களுக்கிடையிலான நட்புறவினை ஏற்படுத்துவதில் தொழிலாளர்களும் தொழிற் சங்கங்களும் நிறைவேற்றக்கூடிய செயற்பணி மிகப் பாரியதாகும் என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். 

கடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னரான காலத்தையும் நாம் கடந்து வந்துள்ளோம். யுத்தம் நிறைவடைந்து தற்போது சுமார் 10 வருடங்களாகப் போகின்றன.  கடந்த மூன்றரை வருட காலத்தில் விசேடமாக இந்த நாட்டில் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் நிறைவேற்ற வேண்டிய பல கடமைகளையும் பொறுப்புக்களையும் நாம் நிறைவேற்றியுள்ளோம். இனங்களுக்கிடையே ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவும் சகல இன மக்களும் அச்சம், சந்தேகம் இன்றி வாழ்வதற்கான உரிமையை நாம் உறுதி செய்துள்ளோம். தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு பாரிய அர்ப்பணிப்பை எமது அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான எமது செயற்பாடுகளை எமது எதிர் தரப்பினர் மிகுந்த வேடிக்கையான விடயமாக பரிகசிப்பதை காணமுடிகின்றது. 
எனினும் சகல இனங்களுக்கிடையிலும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய தெளிவான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் எம்மால் இயலாது போயுள்ளது. யுத்தத்தினாலும் துப்பாக்கிகளினாலும் அந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. மனிதாபிமானத்தினாலேயே நாங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும். அதுவே வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தின் இலட்சணங்களாகும். அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் கட்சிகள் நேர்மையாக செயற்பட வேண்டும். 

அதனை அவர்கள் தமது செயற்பாடுகளினூடாக வெளிப்படுத்த வேண்டும். அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியும். அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பலரும் பலவிதமான விடயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கின்றனர். அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கனவில் பலரும் இருக்கின்றார்கள். ஆனால் இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எத்தனை அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்றதென்பதை நான் இந்த நேரத்தில் வினவ விரும்புகின்றேன். 
இவையெல்லாமே புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை போன்றது. இந்த நாட்டில் விசேடமாக வடக்கு, கிழக்கு, தெற்கு எந்த பிரதேசத்தில் உள்ள மக்களும் இளைஞர்களும் மீண்டும் துப்பாக்கியை கையில் ஏந்தாத ஒரு நிலைமையை நாமே ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு செயற்படும் எந்தவொரு நபரும் இதற்கான எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை. இது சம்பந்தமாக எமது அரசாங்கம் பலவிதமான வேலைத்திட்டங்களை முன் வைத்துள்ளது. அத்துடன் அவற்றை நாம் செயற்படுத்தியும் வருகின்றோம். அவற்றில் குறைபாடுகள் காணப்படலாம். அவற்றையும் நாம் பலப்படுத்த வேண்டும். 

நாட்டிலே நிரந்தரமான ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். அதிகாரம் இல்லாதவர்கள் எதையும் எப்போதும் சொல்லலாம். ஆனால் இந்த பிரச்சினையில் உள்ள சிக்கல்தன்மையை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். 

நாம் இந்த நாட்டின் சகல தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அழைப்பு விடுக்கின்றோம். பொது மக்களுக்கு பல அன்றாட பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றை தீர்ப்பதற்கும் கடந்த மூன்றரை வருடமாக நாம் முயற்சித்து வருகின்றோம். 
இந்த பிரதேச மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எமது முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் அமைச்சர் ஹிஸ்புல்லாவும் குறிப்பிட்டார்கள். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வரட்சி தொடர்பாக கருத்து தெரிவித்தார்கள். இந்த வரட்சி கடந்த மூன்றரை வருடங்களுக்கும் மேலாக காணப்படுகின்றது. இந்த வரட்சி எம்மை விட பாகிஸ்தானில் மோசமாக காணப்படுகின்றது. இந்த வலயத்தில் உள்ள பல நாடுகளும் இதற்கு முகங்கொடுத்துள்ளன. நாம் மனிதர்கள் என்ற வகையில் இயற்கையுடன் போராடியே வாழ வேண்டும். இயற்கையோடு போராடியே மனித நாகரிகங்கள் உருவாகியுள்ளன. உயர் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் எமது அறிவு, அனுபவம், புத்திசாலித்தனம் என்பவற்றைக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். எல்லா அரசியல்வாதிகளும் நேர்மையாக இருக்க வேண்டும். அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் மக்களை ஏமாற்றக் கூடாது. 

எந்தவித திட்டங்களும் இன்றி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு மக்களுக்கு பல புதிய திட்டங்களை முன்வைக்க எதிர்பார்க்கின்றது. 2020 இல் நீங்கள் ஓய்வு பெற போகின்றீர்களா என சிலர் என்னிடம் கேட்கின்றார்கள். இந்நாட்டின் சமூக வலைத்தளங்கள் பலவும் நான் 2020 ஆம் ஆண்டில் இளைப்பாற போகின்றேன் என குறிப்பிடுகின்றன. நான் இளைப்பாறப் போவதில்லை. நான் ஆற்ற வேண்டிய சேவைகள் பல இருக்கின்றன. இந்த நாட்டில் நேர்மையான அரசியல்வாதிகள், அரச தலைவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என நான் கேட்கிறேன். புதிய செயற்திட்டங்களே எமக்கு தேவையாக உள்ளன. இந்த வேலைத்திட்டங்களுக்கு அரசியல் கள்வர்களும் மோசடியாளர்களும் கொலைக்கார்களும் எமக்கு தேவையில்லை, ஊழல்வாதிகளும் வஞ்சகர்களும் தேவையில்லை. மக்களை நேசிக்கும் அரசியல்வாதிகளே இந்நாட்டிற்கு தேவையாகும். 2020 இல் புதிய ஆட்சி அமைக்க சிலர் கனவு கான்கின்றனர். எமது அரசாங்கத்தில் சிலரும் இந்த 2020 புதிய அரசாங்கம் பற்றி கதைக்கின்றனர். இந்த நாட்டில் ஆட்சியில் இருந்தவர்கள் இருப்பவர்கள் ஆகியோரில் நேர்மையான அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும் என நான் அழைப்பு விடுக்கின்றேன்.  

தேசிய நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் எங்கு காணப்படுகின்றதோ அந்த இடத்தில் நாங்கள் இருப்போம். இந்த நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் காணப்படும் இடங்களில் நாங்கள் இருக்கின்றோம். இந்த நாட்டின் இளம் தலைமுறையினருக்கும் இளைஞர்களுக்கும் புதிய எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் காணப்படும் இடங்களில் நாம் இருப்போம். இந்த நாட்டில் கல்வி கற்றவர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் ஏற்றவொரு சூழல் காணப்படும் இடத்தில் நாங்கள் இருப்போம். எனவே நாம் அனைவரும் இந்த சகல செயற்பாடுகளிலும் நேர்மையுடன் செயற்பட வேண்டும். கனவு உலகம் பற்றி கதைக்கலாம். பகல் கனவு காணலாம், ஆயினும் இந்த நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் சரியான பரிந்துணர்வு அவர்களிடம் இல்லை என்பதை நான் தெளிவாக கூறுகிறேன்.  

அப்பாவி ஏழை மக்களின் இதயத்துடிப்பையும் அரசியல் அதிர்வுகளையும் மக்களின் துன்பங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.  எமக்கே உரிய விடயங்களை நாம் பாதுகாக்க வேண்டும். எமது இறைமையையும் கலாசாரத்தையும் மரவுரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். எமது மகாசங்கத்தினரைப் பலப்படுத்தி பாதுகாக்க வேண்டும். இந்து, இஸ்லாம். கிறிஸ்தவ சமூகங்களை பலப்படுத்த வேண்டும்.  
இந்த நாட்டின் சிங்கள, பெளத்த மக்களின் பிரச்சினைகளையும் இஸ்லாம், இந்து, கிறிஸ்தவ மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ள வேண்டும். இந்த பிரச்சினைகளை விட்டு அரசியல்வாதிகள் நழுவிச் செல்ல முடியாது. ஆட்சியில் இருப்பவர்களும் ஆட்சி அமைக்க எதிர்பார்ப்பவர்களும் இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதனால் இந்த வரலாற்று முக்கியத்துவமான தொழிலாளர் தினத்தில் அந்த உண்மையான அர்ப்பணிப்புடன் கூடிய தேசத்தின் எதிர்காலத்திற்கான செயற்திட்டத்திற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி சகலரையும் ஒன்றிணையுமாறு நான் அழைப்பு விடுகின்றேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்ப எமக்கு சர்வதேசத்தின் சிறந்த ஒத்துழைப்பு காணப்படுகின்றது. உலக நாடுகள் அனைத்தும் எம்முடன் நட்பாக உள்ளன. எம்மை நம்புகின்றன. அந்த நம்பிக்கையைக் கொண்டு எமது நாட்டிற்கு நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.  நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆகையினால் அரசியல்வாதிகள் பொய்யான விடயங்களை கூறாது நேர்மையாக செயற்பட வேண்டும். திருடர்கள், மோசடிக்காரர்கள் யார் என்பதை ஒட்டுமொத்த தேசமும் அறியும். 

அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒற்றுமையான மனிதர்கள் இன்று நாட்டிற்கு தேவையாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெளிவான தூய்மையான செயற்திட்டத்தை நாட்டிற்கு முன்வைக்கும். நாம் பலவீனமடைந்துள்ளோம் என சிலர் குறிப்பிடுகின்றனர். நாம் பலவீனமடையவில்லை. பாராளுமன்றத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெறும் 07 ஆசனங்களை மாத்திரம் கொண்டிருந்த காலமும் இருந்துள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பல பிரிவுகளாக பிளவடைந்த சந்தர்ப்பங்களும் உண்டு. சகல அரசியல் கட்சிகளுக்கும் இவ்வாறான அனுபவங்கள் உண்டு. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டைக் கட்டியெழுப்பும் அரசியல் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும். கட்சியில் புதிய மறுசீரமைப்புக்களை ஏற்படுத்தும். கட்சியை முழுமையான மக்கள் நேய கட்சியாக மாற்றியமைக்கும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மையப்படுத்தப்பட்ட ஜனநாயக தன்மையை ஏற்படுத்தி அதனூடாக வலுவான அரசியல் யுகத்தை ஆரம்பிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது இந்த புதிய செயற்திட்டத்துடன் ஒன்றிணையுமாறு தொழில் புரியும் மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம் இன்று உங்களுடன் இணைந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இன்று விசேடமாக இந்த மே தினக் கூட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த சகலருக்கும் விசேடமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், பொது மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எம்மால் ஆற்றக்கூடிய சகல பொறுப்புக்களையும் கடமைகளையும் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் தியாக சிந்தனையுடனும் நிறைவேற்றுவோம் என்பதை கூறி அனைவருக்கும் வெற்றிகிடைக்க பிரார்த்தித்து உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். 

நன்றி
வணக்கம். 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு - 2018.05.07 

0 கருத்துரைகள்:

Post a Comment