Header Ads



"பிச்சை வேண்டாம், நாயைப் பிடி"

2015 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்புலமாகவும், பின்பலமாகவும் இருந்து தரப்புகள் மூன்று.

முதலாவது இந்தியா மற்றும் மேற்குலகம். இரண்டாவது ஐக்கிய தேசியக் கட்சி. மூன்றாவது தமிழ், முஸ்லிம் கட்சிகளும், மக்களும்.

இந்த மூன்று தரப்புகளும் ஒன்றிணைந்து ஆதரவு கொடுத்ததால் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்தக் கட்சியினது தலைவராகவும், ஜனாதிபதியாகவும் இருந்த மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் வல்லமை கிடைத்திருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அவருடன் வந்து ஒட்டிக் கொண்டனர்.
ஜனாதிபதியாகிய பின்னர் மேற்படி தரப்புகளின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்திருந்ததால் ஆரம்பத்தில் அவரது பாதை அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை.

ஆனால் இப்போது அவர் தனது நண்பர்கள் வட்டத்தை இழக்கத் தொடங்கியிருக்கிறார். இதனை ஒன்றும் ஊகமாக இங்கு கூறவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலத்தில் வெளியிட்டுள்ள தகவல்களே அதற்குச் சான்று.

அண்மையில் ஈரானுக்கான பயணம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டிருந்தார். அவருடன் சிறியதொரு ஊடகவியலாளர் குழுவும் தெஹ்ரான் சென்றிருந்தது.

தெஹ்ரானில் உள்ள விடுதியில் ஓய்வாக இருந்த போது அந்த ஊடகவியலாளர்களுடன் சில விடயங்களை மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். ஆனாலும் அதனைக் கண்டுகொள்ளாமல் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஈரானுக்கான பயணத்தை தடுக்க முயன்றது யார் என்ற விபரத்தை அவர் வெளியிடாத போதும் அதனை ஊகித்துக் கொள்வது ஒன்றும் கடினமான காரியமாக இருக்காது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும். இடையிலான உறவுகள் சிக்கலடைந்திருந்த போது அணுசக்தி உடன்பாட்டில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பின்னரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தப் பயணம் இடம்பெற்றிருந்தது.

டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு வெளியான பின்னர் ஈரானுக்குச் சென்ற முதலாவது வெளிநாட்டுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன தான்.

எனவே இந்தப் பயணத்தை தடுப்பதற்கான முயற்சிகளில் மேற்குலக இராஜதந்திரிகள் ஈடுபட்டிருப்பதற்கு சாத்தியங்கள் அதிகம்.

ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு தடைகளையும் விதித்திருந்தது. அதனை மீறி தொடர்புகளை வைத்துக் கொள்ளும் நாடுகளும், தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருந்தார் ட்ரம்ப்.

இந்தச் சூழலில் மைத்திரிபால சிறிசேன ஈரான் செல்வது ஏனைய நாடுகளின் தலைவர்களுக்கு குளிர்விட்டுப் போகும் என்று அமெரிக்கா கருதியிருக்கும்.

மைத்திரிபால சிறிசேனவின் வழியில் தாமும் ஈரானுக்குச் செல்வதற்கு ஏனைய நாடுகளின் தலைவர்கள் முற்படக் கூடும் என்றும் அமெரிக்கா எண்ணியிருக்கும்.

அதைவிட மைத்திரிபால சிறிசேனவின் பயணத்தை வைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கக் கூடிய சூழலும் இல்லை. அத்தகைய தடைகளின் பின்விளைவுகளையும் யோசிக்க வேண்டியிருக்கும். அதுவும் அமெரிக்காவுக்கு சிக்கலான விடயம்.

இதனால் மைத்திரிபால சிறிசேனவின் ஈரான் பயணத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தாம் அழுத்தங்களை எதிர்கொண்டது இது தான் முதல் முறையல்ல, மூன்றாவது முறை இது என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கட்டாருக்குப் பயணம் மேற்கொண்ட போது முதல் முறையாகவும், கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட போது இரண்டாவது தடவையாகவும் அந்தப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் இந்த அழுத்தங்களைக் கண்டுகொள்ளாமல் நாட்டுக்கு எது நல்லதோ அதன்படி முடிவுகளை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இந்த அழுத்தங்களின் பின்னால் மேற்குலகம் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்த இடத்தில் இருந்து நோக்கும் போது 2015ல் தம்மால் ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை மேற்குலகம் கைவிடத் தொடங்கியுள்ளதா என்ற கேள்வி எழுவது இயல்பு.

மைத்திரிபால சிறிசேனவுக்கு மேற்குலகம் அழுத்தங்களைக் கொடுக்கிறது என்றால், அவ்வாறான ஒரு கேள்வி எழுவதில் நியாயம் உள்ளது.

அதைவிட அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை மைத்திரிபால சிறிசேன கொண்டிருந்தாலும் அவரை முன்னிறுத்த மேற்குலகம் தயாராக இல்லை.

அவருக்குப் பதிலாக பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யும் முயற்சிகளில் மேற்குலகம் இறங்கியுள்ளதாகவும் கூட தகவல்கள் வெளியாகின்றன.

எனவே மேற்குலகத்துடனான மைத்திரிபால சிறிசேனவின் உறவுகள் வலுக்குன்ற ஆரம்பித்திருக்கின்றன என்றே கருத வேண்டியுள்ளது.

அதுபோல அவரை ஆட்சிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது ஐக்கிய தேசியக் கட்சி. ஆனால் ஐதேகவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

அண்மையில் அரசாங்கம் ஆட்டம் காணுவது போன்ற நிலை ஏற்பட்டமைக்கு கூட இந்த விரிசலே காரணம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது ஐதேகவின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஒரு சிலர் தான் விமர்சனங்களை முன்வைக்கவில்லையே தவிர இரண்டாம், மூன்றாம் மட்டத் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டடு வருகின்றனர்.

ஐதேகவினர் தம்மைக் குறிவைதது தாக்குகின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார். அந்தளவுக்கு இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனாலே ஐதேகவின் ஆதரவையும் அவர் இழந்திருக்கிறார்.

அதுபோலவே 2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதங்கு காரணமாக இருந்த தமிழ், முஸ்லிம்களும் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது அதிருப்தியடைந்து போயுள்ளனர். தம்மை ஜனாதிபதி ஏமாற்றி விட்டார் என்ற உணர்வு சிறுபான்மையின மக்களுக்கு இருக்கிறது.

இதனால் தான் அவரால் தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையையும் பெறமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்டபாளராகக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் சந்திரிகா குமாரதுங்க. அவரும் கூட வெறுப்படைந்திருக்கிறார்.

அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தை அடுத்து சந்திரிகா எழுந்து சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உச்சாணிக்கு ஏற்றி விட்டவர்கள் பெரும்பாலும் அவரை விட்டு விலகி நிற்கின்றனர் அல்லது விலக முற்படுகின்றனர்.

இன்னொரு பக்கத்தில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

அவர்கள் மகிந்த ராஜபக்சவின் பக்கத்துக்குச் சென்று விட்டார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் இப்போது அவரது பக்கம் இருக்கிறார்கள். அவர்களும் கூட எப்போது அடுத்த பக்கம் பாய்வார்கள் என்று கூற முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது வெற்றுக் கூடாரமாகி வரும் நிலையில் மைத்திரிபால சிறிசேன அதன் மீதான கட்டுப்பாட்டையும் இழந்து விட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலுவாகவும், முன்னைய கட்டுக்கோப்புடனும் இருந்திருந்தால் இப்போதுள்ளது போன்ற நிலையை யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது அரசியல் ரீதியாக தன்மைப்பட்டு வருகிறார். கட்சிக்குள் மாத்திரமன்றி அரசாங்கத்திலும் கூட அப்படித் தான் இருக்கிறார். தலைமைத்துவக் குறைபாடே இதற்குக் காரணம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தாவிடினும் தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பேன் என்பதை உறுதிப்படுத்திய மைத்திரிபால சிறிசேன அவ்வாறு அரசியலில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஏற்ற பாதையை உருவாக்கத் தவறியிருக்கிறார்.

அதுதான் அவரைத் தனிமைப்படுத்தி வருகிறது. மைத்திரிபால சிறிசேன தனிமைப்படுத்தப்பட்டு வருவதானது 2020ற்குப் பின்னர் அவர் அரசியலில் நீடிப்பதற்கான வாய்ப்புகளை அருகச் செய்து கொண்டிருக்கிறது.

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலையை நோக்கியே அவர் சென்று கொண்டிருக்கிறார்.

3 comments:

  1. he is capable for the Secretary job only, not for the leadership.

    ReplyDelete
  2. ஆளுமை இல்லையென்றால் இவ்வாறுதான் நடக்கும்

    ReplyDelete
  3. Soon bye bye wele paal!

    ReplyDelete

Powered by Blogger.