Header Ads



கோட்டாபாயவின் வழி, அழிவுப் பாதையாகவே இருக்கும் - மங்கள

நாட்டையும் நாட்டு மக்களையும் மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் 'வியத்மக' (ஞானம் நிறைந்த பரந்த வழி) என்ற தொனிப்பொருளில் மீட்சிபெறுவதற்கு ராஜபக்‌ஷ குடும்பத்தினர் முயற்சிப்பதாக  வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  

அவர்களின் முயற்சியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.   கோட்டாபாய ராஜபக்‌ஷ முன்மொழிந்துள்ள 'வியத்மக' (ஞானம் நிறைந்த பரந்த வழி) வேலைத்திட்டம் நாட்டுக்கு 'விபத்மக' (அழிவுப்பாதை) ஆகவே இருக்கும் என அமைச்சர் விடுத்திருக்கும் விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.  

பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தத் தெரியாத அடிவருடிகளும், அடியாட்களுமே கடந்த அரசாங்கத்தில் பொருளாதார விடயங்களை கையாண்டனர். அவ்வாறான பின்னணியிலே ராஜபக்‌ஷ சகோதரர்கள் நாட்டை ஆட்சிசெய்தனர். இவர்கள் மீண்டும் மீட்சிபெற்று மக்களுக்கு அழிவுப் பாதையையே முன்வைக்கவுள்ளனர். எனவே இவ்வாறான முயற்சிகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.  

2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு 'வியத்மக' என்ற தொனிப்பொருளில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் மாநாடொன்றை நடத்தியிருந்தார். அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மங்கள சமரவீர விடுத்திருக்கும் விசேட அறிக்கையிலேயே இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். 

கோட்டாபய ராஜபக்‌ஷ வெள் ளைவான் பயங்கரவாதத்தை உருவாக்கியிருந்ததுடன், அது உலகத்தின் பார்வையை இலங்கை மீது ஈர்த்திருந்தது. அரசாங்க அதிகாரிகள் சுதந்திரமாக ஊழலில் ஈடுபட அவர் அனுமதி வழங்கியிருந்தார். நாட்டில் நியமிக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகளில் மிகவும் மோசடியான, அபாயகரமான நபராக கோட்டாபய ராஜபக்‌ஷ விளங்கியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு எதிராக பல மோசடி வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. மிக் விமானக் கொள்வனவு மோசடி, பொது மக்கள் பணத்தில் தனது பெற்றோருக்கு நூதனசாலை அமைத்தமை, ஊடகவியலாளர்களை கடத்தி காணாமல் செய்தமை மற்றும் தாக்கியமை, சட்டவிரோதமான ஆயுத களஞ்சியத்தைப் பேணியமை போன்ற விடயங்களில் அவருக்கு எதிராக விசாரணைகள் நடைபெறுகின்றன.  

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தனக்குத் தொடர்பில்லை, தான் நிரபராதி எனக் கூறிவந்தாலும், அவர் முன்னணி சட்டத்தரணிகளைக் கொண்டு முன்பிணைகளை நீதிமன்றத்தில் பெற்றுள்ளார். இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மாத்திரமன்றி ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.  

ராஜபக்‌ஷ சகோதரர்கள் மக்களை பிழையாக வழிநடத்தி ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். அதிகாரத்துக்கு வந்தாலே தமக்கு எதிரான வழக்குகளை மூடிமறைத்து மற்றும் ஒருமுறை தேசிய வளங்களை சூறையாட முடியும். இது தவிர நாட்டின் மீது அவர்களுக்கு எந்தவித விசேட அன்பும் இல்லையென அமைச்சர் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.