Header Ads



மஹாதிரிடம் ஐடியா, கேட்ட மைத்திரி

மலேசியாவில் நடந்த பொதுத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹமத் வெற்றி பெற்றுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார் 92 வயதாகும் மஹதீர் முஹமத். நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கும் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான ஆளும் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மஹதிர் முஹமத் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்றுமுன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், மஹதிர் முஹமத்தின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மலேசியாவில் ஆட்சியமைக்க குறைந்தது 112 இடங்கள் தேவை. பிரதமரின் பதவியேற்பு நேற்று நடைபெறுமென மஹதிர் முஹமத் நம்பிக்கை தெரிவித்திருந்தார். உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மட்டத்திலான தலைவர்களில் மிக வயது மூத்தவர் என்ற பெருமையை மஹதிர் முஹமத் பெற்றுள்ளார்.

பிரதமர் நஜீப் ரஸாக் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பை முறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இவருக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. தேர்தல் முடிவுகளும் அதேபோல வந்துள்ளன.

கடந்த 1957ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒரே கட்சி ஆட்சிதான் அங்கு நடந்து வந்தது. மஹதிர் முஹமத்தும் 1981 முதல் 2003 வரை, 22 வருட காலம் பிரதமராக ஆட்சி செய்து பின்னர் ஓய்வு பெற்றவர். ஆனால் நஜீப் ரஸாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கோபத்தின் காரணமாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியோடு மீண்டும் களம் கண்டார் மஹதிர் முஹமத். மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சி ஆட்சி வீழ்த்தப்பட்டு எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேஷியாவின் அபிவிருத்தியை உயர்ந்த மட்டத்தில் கட்டியெழுப்பிய வரலாற்றுத் தலைவரான மஹதிர் முஹமத்தின் மீள்வெற்றியானது சிறப்புமிக்கது. மற்றுமொரு வரலாற்றில் தடம்பதித்ததாக இதனைக் கருத முடியும்.
இதேவேளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் தனது மலேஷிய பயணத்தின் போது அந்நாட்டின் வரலாற்றுத் தலைவரான மஹதிர் முஹமத்தை சந்தித்திருந்தார். வெற்றிகரமாக நாட்டைக் கட்டியெழுப்பியுள்ள தலைவரைச் சந்தித்து அவரது செயற்பாடுகள் அனுபவங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறியிருந்தார்.

மலேஷியாவுக்கு மைத்திரிபால சிறிசேன அன்று சென்றிருந்த போது இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், அன்று நிலவிய மோசமான அரசியல் சூழ்நிலை காரணமாக அத்தகைய இராஜதந்திர சந்திப்பொன்றை நடத்துவது அசௌகரியமாகியிருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவதானத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

எனினும் வெற்றிகரமாக நாட்டைக் கட்டியெழுப்பியுள்ள அத்தகைய தலைவரின் செயற்பாடுகளை பாராட்டுவது அவசியமென்பது இலங்கை ஜனாதிபதியின் உள்ளத்தின் ஒரு எதிர்பார்ப்பாகும். அதற்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹதிர் முஹமத்ைத தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டியிருந்தார்.

மஹதிர் முஹம்மத் மற்றும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கிடையிலான சந்திப்பு அங்குள்ள ஹோட்டலொன்றில் மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த போது இடம்பெற்றது. சுமுகமான சந்திப்பின் பின்னர் உத்தியோகபூர்வமற்ற பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றுள்ளது.

மஹதிர் முஹமத்தின் ஆரம்ப கால திட்டங்கள் தொடர்பில் இதன் போது நினைவுகூரப்பட்டிருந்தது. அதன் ஆக்கபூர்வமான சாதகங்கள் தொடர்பில் பாராட்டப்பட்டது. இறுதியில் மலேஷிய தலைவர் மஹதிர் முஹம்மத் இலங்கை ஜனாதிபதியிடம் கேள்வியொன்றை எழுப்பினார்.

“தற்போது என்னிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய ஏதாவது பிரச்சினைகள் அல்லது வேண்டுகோள்கள் உள்ளனவா?” அப்போது இலங்கை ஜனாதிபதி “எமது நாடு தற்போது கடன் சுமையிலுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு எத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்?” என வினவினார்.

அதற்குப் பதிலளித்த அப்போது முன்னாள் பிரதமராக இருந்த மஹதிர் முஹம்மத் “கடன் சுமையிலிருந்து மீள வேண்டியது நீங்களே. கடனைச் செலுத்துவதற்காக மேலும் மேலும் கடன்களைப் பெற்று அவற்றை மீளச்செலுத்த முற்பட்டால் மேலும் மேலும் கடனாளியாவீர்கள்” என்றார்.

"நான் அன்று சந்திப்பை முடித்துக் கொண்டதும் பல நிதி நிறுவனங்கள் என்னிடம் வந்தன. கடன் பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் நான் அதற்கு இணங்கவில்லை.

எமது நாட்டின் வளங்கள் எமது நாட்டுக்கு பொருத்தமான திட்டங்கள் யோசனைகள் மூலமாக எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது எனது நோக்கமாக இருந்தது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன்.

அது ஒரு சிறந்த வெற்றிகரமான தீர்வென்பதை வரலாறு எமக்குத் தெரிவிக்கின்றது". இதுவே ஜனாதிபதி மைத்திரியின் பதிலாக இருந்தது.

"பல மணித்தியாலங்கள் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதுவொரு வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பாகும்" என்று மைத்திரி தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.