Header Ads



இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இவர்களுக்காக வேண்டி இலங்கை அரசாங்கம் 2 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் ரூபாவினை  செலவு செய்துவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல் மற்றும் முகத்தாடை சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் அனுஷன் மதுஷங்க தெரிவித்தார்.

பல் மற்றும் முகத்தாடை புற்றுநோய் தொடர்பான மாபெரும் இலவச வைத்திய முகாமும், குறித்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (22)மட்டக்களப்பு வாகநேரியில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாயில் ஏற்படும் புற்று நோய் தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருவதாவும், இந்த நோய்க்கு சிகிச்சையை பெற்றுக்கொள்ள காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாவும் கூறினார்.

இந்த வாய்ப் புற்றுநோயானது 25 விதமானவை வெளியேயும், 75 விதமானவை உள்ளேயும் காணப்படுகின்றன. இந்த நோயுள்ளவர்கள் மிக இலகுவில் இதனை அடையாளம் கண்டுகொள்ளமாட்டார்கள். இவர்கள் வேறு வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வரும்போதுதான் அவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் இருப்பதை வைத்தியர்கள் மூலம் அறிந்துகொள்கின்றார்கள்.

இவ்வாறு வருகின்றவர்களின் வாய்ப் புற்றுநோயை முற்று முழுதாக இல்லாமல் செய்யமுடியாது, ஓரளவுதான் குனமாக்கலாம். இதனை ஆரம்பத்தில் அடையாளம் கண்டு அதற்கான வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்வார்களானால் அதனை முற்று முழுதாக குனமாக்கலாம்.

வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்குமாக இருந்தால், வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டால், வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்பட்டால், நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களுடனான வீக்கம் காணப்படல் போன்றன இதற்கான அறிகுறிகளாக காணப்படும். இவ்வாறு காணப்பட்டால் உடனடியாக வைத்தியரைச் சந்தித்து அதற்கான வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சிகிச்சையை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டில் ஒரு சிறந்த பிரஜையாக வாழலாம் என்றும் ஒரு வருடத்தில் அடையாளம் காணப்படுகின்ற 2500 வாய்ப் புற்றுநோயாளர்களில் 1000 பேரை இதிலிருந்து பாதுகாக்க முடியும் என்றார்.

இதில் வைத்தியர்களான  மட்டக்களப்பு பிராந்திய பல் வைத்திய நிபுணர் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜீத், கிருஷாந்தி கேதீஸன், ப.துஷிதா, கே.மேகனாதான், கே.முரளிதரன், எஸ்.கலைச்செல்வன், கே.ஏ.என்.நதிஸானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வைத்திய பரிசோதனையில் ஈடுபட்டனர்.

-பைஷல் இஸ்மாயில் -

No comments

Powered by Blogger.