Header Ads



20 வருடங்களுக்கு UNP அரசு, நான் இருப்பேனோ தெரியாது, உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - ரணில்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாம் தனி அரசாங்கமொன்றை அமைப்போம். அதுமாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை 20 வருடங்களுக்கு கொண்டு செல்வதே எனது இலக்காகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாம் தனி அரசாங்கமொன்றை அமைப்போம். அதுமாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை 20 வருடங்களுக்கு கொண்டு செல்வதே எனது இலக்காகும். என்றாலும் அந்த காலப்பகுதியில் நான் இருப்பேனோ தெரியாது. என்றாலும் அதற்கான தலைமைத்துவத்தை நான் தற்போது உருவாக்கியுள்ளேன். எவ்வாறெனினும் 20,30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை உருவாக்குவோம்.

இந்நிலையில் தற்போது ராஜபக்ஷவினர் மீதான பயத்தை இல்லாமல் செய்துள்ளோம். வெள்ளை வேன் கடத்தலை ஒழித்து கட்டியுள்ளோம். ஊடக சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம். ஆனாலும் ஊடக சுதந்திரத்தை தற்போது நாம் ஏற்படுத்தி கொடுத்தாலும் என் மீதே ஊடகங்கள் அதிக விமர்சனங்களை முன்வைக்கின்றன. ராஜபக்ஷ ஆட்சியின் போது இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் ஊடகங்கள் மயானத்திற்கே சென்றிருக்கும். எவ்வாறாயினும் ஊடகங்கள் என் மீது தாக்குதல் நடத்தினால் தாக்குதல் நடத்தும் ஊடகங்களுக்கான பார்வையாளர் எண்ணிக்கை குறைவடைந்து விடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

கடந்த ஆண்டில் ஏற்பட்ட வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக பெரும் சிரமத்திற்குள்ளானோம். பொருளாதாரத்தை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வருவதற்கு மக்களின் மீது அதிக சுமைகளை சுமத்த வேண்டி ஏற்பட்டது. இதன்படி அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியினர் மக்களின் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ஆகவே அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோட்க்கின்றேன். ஒரு சில குறைப்பாடுகளின் காரணமாக மக்கள் மீது அதீத சுமை சுமத்த வேண்டி ஏற்பட்டது. என்றாலும் கடன் சுமை நீக்கியே ஆக வேண்டும். கடன் சுமையை போக்கா விட்டால் நாட்டு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாது.  அடுத்த தலைமுறையினரே இதனால் பாதிக்கப்படுவர். ஆகவே கடன் சுமையை அடுத்த தலைமுறைக்கு விட்டு விடாமல் தற்போது தீர்த்து வைக்க வேண்டும். 

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பல அடுத்த தலைவர்களை உருவாக்கி விட்டே சென்றார். எனினும் பின்னர் எமது கட்சியின் தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். ஆனால் அதில் நான் சாதாரணமானராகவே இருந்தேன். கட்சியின் நிலைமையை பார்க்கும் போது தலைமை பதவிக்கு யாருமே கிடையாது. இந்நிலைமையிலேயே கட்சியின் தலைமை பொறுப்பை நான் ஏற்றேன். அதுமாத்திரமின்றி கட்சியின் மாவட்ட மட்டத்திலும் தலைவர்கள் இருக்கவில்லை. இந்நிலையில் கட்சியில் புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு எனக்கு பெரும் சவால் ஏற்பட்டது. 

இந்நிலையில் தற்போது கட்சியின் தலைமைத்துவத்தை புதிய தலைமுறைக்கு வழங்க தயாராக உள்ளேன். ஆகவே தற்போது இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்கியுள்ளேன். இன்னும் பல தலைவர்களை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றேன். எவ்வாறெனினும் அடுத்த தேர்தலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்போம். 

No comments

Powered by Blogger.