Header Ads



11 வருடங்கள் பாடசாலையை விட்டுப்பிரியாத ரிம்லா

– அனஸ் அப்பாஸ் –

வெலிகமை, கல்பொக்கையைச் சேர்ந்த ஹுசைன் ரியாஸ் – பாத்திமா தம்பதிகளின் மூத்த புதல்வி பாத்திமா ரிம்லா வெலிகமை அரபா மத்திய கல்லூரியில் அண்மையில் வெளிவந்த 2017 ஆம் ஆண்டின் க.பொ.த (சா/ தர) பரீட்சை பெறுபேறுகளின்படி 9 பாடங்களிலும் A தர சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தரம் – 09 இல் கற்று வரும் ரிம்ஸா, தரம் – 07 இல் கற்று வரும் ருஹ்மா, தரம் – 01 இல் கற்று வரும் ரஹீக் ஆகியோரின் மூத்த சகோதரியான ரிம்லா, இன்னொரு சாதனையையும் நிலை நாட்டியுள்ளார். 2001 ஆம் ஆண்டில் பிறந்த இந்த மாணவி தரம் – 01 முதல் தரம் – 11 வரை இடைவிடாது தொடராக பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார். எந்தவொரு காரணமும் பாடசாலை நாட்களில் இவரை கடந்த 11 வருடங்களாக பாடசாலையைவிட்டு பிரிக்கவில்லை.

தரம் – ௦1 முதலே சாதனை படைக்க பெற்றோரின் கண்காணிப்பும், கூடுதலான பங்களிப்பும் பெரும் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறும் ரிம்லா, தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று மாத்தறை மாவட்டத்தில் 3 ஆம் இடத்தை வென்றுள்ளார். பாடசாலையில் நடைபெறும் பாடங்களை தவறவிடாது கற்பதால் தான் கல்வி நடவடிக்கைகளில் திறமை காட்டலாம் என்ற ஒரு விடயத்தை அன்று ஊகித்த இவர், “திறமையான மாணவர்கள் கூட இடைவிட்டு பாடசாலைக்கு சமூகமளிப்பதால் பாடங்களில் பின்னடைகின்றார்கள்” என்பதை உணர்ந்ததாகக் கூறிவிட்டு அதுவே ஒரு உந்துதலாகவும், தூண்டுதலாகவும் சாதாரண தரம் வரை இருந்ததாகவும் கூறுகின்றார்.

பாடசாலைக்கு இடைவிடாது செல்வதால் இடர்களின்றி பாடங்கள் விளங்கியதுடன், பாடசாலை பரிசளிப்பு விழாக்களில் பரிசில்களையும், பாராட்டுக்களையும் பெற ரிம்லாவால் முடிந்தது. மேலும், தொடர்ச்சியாக பாடசாலைக்கு சென்றதால் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தமையால் பெறுபேற்றிலும் இது தாக்கம் செலுத்தியதாக குறிப்பிடுகின்றார்.

க.பொ.த உயர் தரக் கற்கையை தான் ஏற்கனவே கற்ற மாத்தறை அரபா தேசிய பாடசாலையிலேயே தொடர விரும்பும் ரிம்லா, பௌதீக விஞ்ஞானத் துறையை தெரிவு செய்துள்ளார். அதில், இணைந்த கணிதம் (Combined Maths), பௌதீகவியல் (Physics), இரசாயனவியல் (Chemistry) ஆகிய பாடங்களை கற்க எண்ணியுள்ளார். மேலும், உயர்தரத்தில் சிறந்த சித்தியைப் பெற்று பல்கலைக்கழகத்தில் பொறியியல்துறையில் கற்க ஆசை வைத்துள்ளார்.

தரம் – 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியான சாதனை
தமிழ் தின வாசிப்புப் போட்டியில் 2013 ஆம் ஆண்டு தென் மாகாணத்தில் முதலிடம்
2014 ஆம் ஆண்டு சிங்கள மொழி தின வாசிப்புப் போட்டியில் தென் மாகாணத்தில் முதலிடம்
கணிதப் போட்டி, விஞ்ஞான போட்டி, ஆங்கில மொழி தினப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பதக்கங்கள், சான்றிதழ்கள்.
அஹதிய்யா, மீலாத் விழா உள்ளிட்ட இதர போட்டி தராதரங்கள்
பேச்சுப் போட்டி அனுபவங்கள்
என தனது ஆளுமை விருத்தியில் பல படித்தரங்களில் கால் பதித்துள்ளார் ரிம்லா. இந்த அழகிய குடும்பத்தை சிறப்புற நிர்வகிக்கும் ரிம்லாவின் தந்தை ஹுசைன் ரியாஸ் பள்ளிவாயலை தூய்மையாக வைத்திருக்கும் பணியை செய்துவரும் சிறந்ததொரு குடும்பத் தலைவர்.

ஆசிரியர் M.L. ரஹ்மான் அவர்களை தனக்கான முன்மாதிரியாகக் கூறும் ரிம்லா, சமூகத்தில் சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டவர்களை தனக்கான வழிகாட்டிகளாக குறிப்பிடுகின்றார். தனது இறுதிநேர கடும் முயற்சியாலும், நண்பிகளின் ஊக்குவிப்பு, ஆசிரியர்களின் துஆக்கள், பெற்றோரின் உற்சாகப்படுத்தல்களால் தனது சாதாரண தர இலக்கை அடைந்த ரிம்லா “முதற்கண் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வுக்கும், அடுத்து பெற்றோர், கல்லூரி அதிபர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் சக தோழிகளுக்கு நன்றி” தெரிவிக்கின்றார்.

“தொடர்ச்சியாக பாடசாலை சென்று கவனம் பிசகாமல் கற்று, கல்வியுடன் கூடிய இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஈடுபட்டு, பொதுவான அனுபவ ரீதியான கற்றல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் மாணவர்களால் கட்டாயம் சாதிக்க முடியும்” என்று தனது அனுபவத்தால் குறிப்பிடும் ரிம்லா, சமூகத்தின் தேவை உணர்ந்து இஸ்லாமிய வரம்புகளுக்குட்பட்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் தூய இலட்சியத்துடன் பயணிக்கும் ஒரு எதிர்கால பெண் ஆளுமை என்பதில் சந்தேகமில்லை.

சிறந்த ஆளுமை என்பதற்கான பொருளை விரிவுபடுத்தும் செயலை உலகில் பெயர் பெற்ற முன்மாதிரிகளால் மட்டுமன்றி ஒவ்வொரு ஊர்களிலும் இயங்கும் பாடசாலைகள் மூலமும் ஒவ்வொரு குடும்பங்கள் மூலமும் உருவாக்க முடியும் என்பதற்கு வெலிகமை ரிம்லா ஓர் உதாரணமாகத் திகழ வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். உயர்தரத்திலும் இடைவிடாது பாடசாலை செல்ல உறுதி பூண்டுள்ள ரிம்லாவுக்கு வாழ்த்துக்கள்!

No comments

Powered by Blogger.