Header Ads



பலஸ்தீன ஊடகவியலாளர், இஸ்ரேலினால் சுட்டுக்கொலை


இஸ்ரேலுடனான காசா எல்லையில் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீன ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசாவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனத்தின் செய்தியாளரான யாசிர் முர்தஜா ஊடகவியலாளர்களுக்கான அடையாளத்துடன் இருக்கும் நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை சூட்டுக் காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அவர் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இதன்மூலம் காசா எல்லையில் தொடரும் ஆர்ப்பாட்டங்களில் ஒரு வாரத்திற்குள் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.

“இஸ்ரேல் பாதுகாப்பு படை வேண்டுமென்று ஊடகவியலாளர் மீது சூடு நடத்தவில்லை” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. “ஊடகவியலாளர் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக கூறப்படும் குற்றச்சாட்டு நாம் அறியாதுள்ளது. அது பற்றி விசாரணை நடத்தப்படும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முர்தஜாவின் இறுதிக் கிரியையில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர். அவரது உடல் பலஸ்தீன கொடியால் போர்த்தப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒன்பது பலஸ்தீனர்களில் 30 வயது முர்தஜாவும் ஒருவராவார். இதில் குறைந்தது 491 பலஸ்தீனர்கள் காயமடைந்ததோடு எந்த இஸ்ரேலியருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

65 கிலோமீற்றர் நீண்ட இஸ்ரேல் மற்றும் காசா எல்லையின் நான்கு தளங்களில் இரண்டாவது வெள்ளிக்கிழமையாகவே கடந்த வெள்ளிக்கிழமை பலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் வெளியேற்றப்பட்ட பலஸ்தீனர்களுக்கு தமது பூர்வீக பூமிக்கு திரும்பும் உரிமையைக் கூறியே பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேல் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளின் இலக்கில் இருந்து தப்புவதற்கு பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை கொளுத்தி கறுப்பு புகையை எழுப்பி வருகின்றனர்.

எல்லை வேலியை மீறும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. எனினும் அங்கு இடம்பெறும் வன்முறைகள் சர்வதேசத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

No comments

Powered by Blogger.