Header Ads



அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை, ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது - ஹக்கீம்

நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சம்பந்தமான விடயத்தில் ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கவேண்டும். அதைவிடுத்து, இனரீதியான பாடசாலைகளின் உருவாக்கம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என ஸ்ரீலங்கா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்வும் 3 மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவும் இன்று (27) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறப்பு அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டார்.

இதன்போது நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

முஸ்லிம்களுக்குத் தனியான பாடசாலை இருக்கத்தான் வேண்டுமா என்று கேட்கின்ற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாட்டில் நடக்கின்ற இனமுறுகலும் இனப்பிரச்சினைக்கும் இன ரீதியான பாடசாலைகள் காரணமாகிவிட்டது என்று சிலர் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுகின்றனர்.

முஸ்லிம் பாடசாலைகள் அமைக்கப்பட்டதற்கான வரலாறு தெரியாமல், அவர்கள் வேறு சமூகங்களிலிருந்து பிரிந்து வாழும் நோக்கத்தில்தான் இப்படியான பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்‌ளதான பிரமையை மாற்று சமூகத்தினர் கொண்டிருக்கின்றனர். இதற்கான விளக்கத்தை யாரும் கொடுப்பது கிடையாது.

இன ரீதியான பாடசாலைகள் தோற்றம்பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் கிறிஸ்தவம் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், இந்து மற்றும் பெளத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களது சமய விழுமியங்களை காப்பாற்றும் நோக்கில் தனியான பாடசாலைகளை அமைத்தன.

இந்தப் பின்னணியில்தால், முஸ்லிம்களின் கல்விச்சூழலில் மாற்று சமூகத்தின் கலாச்சார விழுமியங்கள் ஊடுருவாமல் பாதுகாக்கும் நோக்கில்தான் முன்னோர்களினால் இஸ்லாமிய சூழல்கொண்ட முஸ்லிம் பாடசாலைகள் அமைக்கப்பட்டன.

நாட்டில் இலவசக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 1959ஆம் ஆண்டளவில் டபிள்யூ. தஹாநாயக்கவின் காலத்தில் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டன. இதன்போது பாடசாலை நிர்வாகத்துடன் சில உடன்பாடுகளுக்கு வரவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது.

இதன்பிரகாம், அரசுடைமையாக்கப்பட்ட இன ரீதியான பாடசாலைகளில் கல்விகற்ற மாணவர்களின் இன விகிதாசாரத்துக்கேற்ப புதிய மாணவர்களின் அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனை 1960ஆம் ஆண்டளவில் கொண்டுவரப்பட்டு, இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது.

முன்னேற்றமடைந்துள்ள பல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களைச் சேர்ப்பதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறோம். இந்தப் பின்னணியில்தால் முஸ்லிம்களுக்கான அரச பாடசாலைகளையும், தனியார் பாடசாலைகளையும் அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது என்ற பின்புலம் இருக்கிறது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒரு பாடசாலையின் ஒன்றாகப் படித்தால், அவர்கள் மத்தியில் இன ஒற்றுமை வளர்ந்துவிடும் என்று நினைப்பது சரியான அணுகுமுறையாகத் தெரியவில்லை. தனித்துவமான கலாச்சாரங்களை பேணுவதற்கான பின்புலம் பாடசாலையில் அமையப்பெறுவது மாத்திரம்தான் இனரீதியான முரண்பாடுகளுக்குக் காரணம் என்பதான கருத்தாடல்கள் அடிப்படையிலே பிழையானவை.

திருகோணமலையில் தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது. பாடசாலைகளில் தங்களுடைய கலாச்சாரம் குறித்த விடயங்களில் ஒரு நெகிழ்வுப் போக்கோடு நடந்துகொள்ளாத நிர்வாகங்களின் மீது, தாக்கம் செலுத்தமுடியாத ஒரு கல்விமுறையின் கீழ்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்படுகிறோமா என்ற துர்ப்பாக்கிய நிலையையும் நாங்கள் பேசித்தான் ஆகவேண்டும்.

வெறுப்பு பேச்சுக்களை பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தகுதி, தராதரம் பராது தண்டிக்கவேண்டும். வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மதத் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய ஒரு பின்புலத்தை உருவாக்குவதன் மூலம்தான் இப்படியான பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு காணமுடியும்.

சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சூழல் படிப்படியாக இல்லாமலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் செறிவாக வாழாத பிரதேசங்களில் அவர்களது அடையாளங்களை நிறுவமுடியாத பின்புலம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இனமுரண்பாடுகளை உருவாக்குவதற்கு எத்தனிக்கின்ற சக்திகளை அடையாளம்காண்பதில் யாருக்கும் பிரச்சினை இருக்கமுடியாது. நாட்டில் எத்தனைத் தீவிரவாத இயக்கங்கள் இயங்குகின்ற என்பது பற்றிய சகல விடயங்களும் உளவுத்துறைக்குத் தெரியும். இப்படியான சூழலில், கண்டியில் நடைபெற்ற கலவரத்துக்காக ஒரு இயக்கத்தின் ஒரு தலைமையை மாத்திரம் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், எத்தனையோ பேர் வெளியில் இருக்கிறார்கள். பல தடவைகள் சட்டத்தின் பிடியிலிருந்தவர்கள் தப்பித்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவங்களின் பின்புலத்தில் அரசு பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய ஒரு சூழல் உருவாகவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் இறுக்கமாக இருக்கிறோம். சட்டம், ஒழுங்கு விடயத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் இறுக்கமான கொள்கையைக் கடைப்பிடிக்கவேண்டும் நாங்கள் விடாப்பிடியாக இருக்கிறோம் என்றார்.

பாடசாலையின் பொன்விழாவை முன்னிட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்தார்.

2 comments:

  1. விரலுக்கு ஏத்த வீக்கம். நீங்கள் இறுக்கமாக இருப்பதாக கூறுகிறீர்கள், ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான உரிமைமீறல்களும், வன்முறைகளும், அவமானங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது. உங்களது தலைமை இருக்கும் வரை இது தொடரும் என்றே நம்புகிறோம். நீங்கள் தலைவராகவும், அமைச்சராகவும் தொடர்ந்தும் இருக்கிறீர்கள். நீங்கள் மாறவேண்டும் அல்லது மக்கள் மாறவேண்டும். மாற்றம் நடைபெறா விட்டால் இந்த சமூகம் உரிமை இழந்து நாதியற்று போகும். சிந்திப்பார்களா மக்கள்.

    ReplyDelete
  2. 'இச் சம்பவங்களின் பின்புலத்தில் அரசு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய ஒரு சூழல் உருவாக வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் இறுக்கமாக இருக்கின்றோம். சட்டம் ஒழுங்கு விடயத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் இறுக்கமான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் நாங்கள் விடாப்பிடியாக இருக்கிறோம்'
    இதெல்லாம் என்ன¸ இவற்றின் கருத்து என்ன? ஒன்றுமே புரியவில்லையே. மூளையை நன்றாகக் குழப்பிவிட்டீர்களே. JARGON என்று ஆங்கிலத்திலும் பிதற்றொலி என்று தமிழிலும் கூறப்படுவதன் அர்த்தம் இதுதானா என்று விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக நாம் இருக்கின்றோம் என்ற விடயத்தை உங்கள் முன் இறுக்கமாக எடுத்துக்கூற முடியாது தவிக்கின்றோம் என்ற நிலைமையை விடாப்பிடியாகக் கூறுவதில் நாம் உறுதியாக இருக்கவேண்டியுள்ளதே என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று கூறாமலிருக்க முடியாது.
    உங்களுக்கு வெற்றி. பாவம் மக்கள் - முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்?







    ReplyDelete

Powered by Blogger.