Header Ads



ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’

-ஆங்கிலத்தில் - மரியா சாலிம்
தமிழில் – முஹம்மட் பௌசர்-

இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் ஹதுஆ மாவட்டத்தில் எட்டு வயது முஸ்லீம் சிறுமியொருவர் பாரதூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வானது இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்துவதற்கு பாலியல் துஷ்பிரயோகம் எந்தளவுதூரம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது என்பதையே நினைவூட்டுகின்றது. 

எனினும் சமூக வலைத்தளத்தில் உள்ள பல இந்தியர்கள் இத்தகைய கற்பழிப்பு நிகழ்வினை பால்நிலைசார் வன்முறைக் குற்றமொன்றாக பரப்புரை செய்கின்றனர். ஆனால் இந்நிகழ்விற்கு முன்னரும் பின்னரும் நிகழ்ந்த படுகொலைகளை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அவர்கள் தவறிவிடுகின்றனர். இத்தகைய கண்மூடித்தனமான வியாக்கியானம், சம்பந்தப்பட்ட சிறுமியினைச் சார்ந்த சமூகப் பிரிவினருக்கு நியாயம் கிடைப்பதை தடுத்திவிடக்கூடியது.

குறித்த சிறுமி ஒரு முஸ்லிமாக இருந்ததனாலேயே கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார் என்பதை அரசின் உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கைகள் குறிப்பிடுவதுடன் இப் படுகொலையின் பின்னால் உள்ள ‘வெறுப்பூட்டல் குற்றம்’ குறித்தும் அவ்வறிக்கை தெளிவாகப் பேசுகின்றது.

இதிலிருந்து விளங்குவது என்னவென்றால் அண்மைய ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு ‘வெறுப்பூட்டல்’ ஒரு முக்கிய அடிப்படையாக இருந்துவந்துள்ளது. 2017 இல் பசுவதை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும் இக்கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட வேண்டியதாகும். இக் குற்றச்சாட்டுக்களினை அடுத்து பல்வேறு கும்பல்கள் வன்முறையில் ஈடுபட்டன. இவ்வன்முறையில் பதினொரு பேர் கொல்லப்பட்டதுடன் இறுதியில் பல மானிலங்களில் உணவூக்காக பசுக்களை அறுப்பதும்  தடைசெய்யப்பட்டது. 

அதேவேளை, கடந்த காலங்களில் இந்து பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான பதட்டங்கள் பாரதூரமான சமூக வன்முறைகளுக்கும் வழிவிட்டிருந்தன. இத்தகைய வன்முறைகளின் போதெல்லாம் பெண்கள் இலக்குவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில் பெண்கள் இலக்குவைக்கப்பட்டமைக்கான பல சான்றுகளை 2002 இல் குஜராத், 2013 இல் உத்தர பிரதேசம் என்பவற்றில் இடம்பெற்ற வன்முறைகளில் காணமுடிகின்றது. 
   
இந்தடிப்படையில் நோக்குகின்றபோது ஹதுஆ பிரதேசத்தில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமையினை வெறுமனே பால்நிலை வன்முறை சார்ந்த ஒன்றாக மட்டும் வரையறுத்துவிட முடியாது. உண்மையில் இந் நிகழ்வானது இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்துவதற்கு கற்பழிப்பு ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது என்பதையே பறைசாட்டி நிற்கின்றது. இத்தகையதொரு காலகட்டத்தில் நாம் வாழ்வது எமது துரதிஷ்டமே.

எட்டு வயது சிறுமி மூர்க்கத்தனமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் இடம்பிடிப்பதற்கு முன்னர், இந்து பெரும்பான்மையினர் குறித்த முஸ்லீம் சமூக வகுப்பினர் மீது அதிக அழுத்தங்களை பிரயோகித்திருந்துடன் குறித்த கற்பழிப்புத் தொடர்பான செய்திகள் வெளிப்படுத்தப்படுவதனை தடுப்பதற்கும் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.

சிறுமியின் குடும்பத்தினரும் சிறுமிக்காக வாதாடிய வழக்கறிஞர்களும் உண்மைகளைப் பேசவிடாமல் அச்சுறுத்தப்பட்டனர். இவ்வச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் சிறுபான்மையினர்களுள் சிலர் தமது வாழ்விடங்களை விட்டும் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் உடலை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கும் இந்து பெரும்பான்மையினர் அனுமதிக்கவில்லை. அதனால் சிறுமியின் பெற்றோர் அவரது உடலை வேறொரு கிராமத்திலேயே அடக்கம் செய்தனர்.

இறுதியில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் வேடிக்கை என்னவென்றால் சந்தேக நபர்களுக்கு சார்பாக ஆர்ப்பட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டன. இதன்படி பெப்ரவரி 15ஆம் திகதி முக்கிய சந்தேக நபர்களுள் ஒருவரான விசேட பொலிஸ் அதிகாரி தீபக் கஜூரியாவினை விடுதலைசெய்யக்கோரி ஆயிரக்கணக்காணோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்குசெய்தவர்கள் ஜம்முவினை தளமாகக் கொண்டு இயங்கும் வலதுசாரிக் கொள்கையுடைய ‘இந்து ஒருமைப்பாட்டு அமைப்பாகும்’. இவ்வார்ப்பாட்டத்திற்கான ஆதரவினை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி வழங்கியதுடன் இரண்டு மானில அமைச்சர்கள் உள்ளடங்கலான கட்சியின் உத்தியோகத்தர்களும் ஆர்ப்பாட்டத்தில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
அதிகரித்த எதிர்ப்புக்களை அடுத்து அமைச்சர்கள் தமது இராஜினாமாக் கடிதங்களை சமர்ப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுள் ஒருவர் ஆர்ப்பட்டத்தின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தபோதிலும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படவில்லை. அதேவேளை, காங்கிரஸ் கட்சி அங்கத்தவரான கஜ்வால் விஜய் தாகொட்ரா உள்ளிட்டவர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய பங்குதாரர்களாகச் செயற்பட்டனர். இவர் கூட கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டாலும் அதிலிருந்து வெளியேற்றப்படவில்லை.

இங்கு எட்டு வயது சிறுமிக்கு நீதி கிடைக்கவேண்டும் என கோருபவர்கள் பின்வரும் இரண்டு நிகழ்வுகளையூம் சிந்திக்க வேண்டும்.

ஒன்று: 2012 டிசம்பரில் இடம்பெற்ற கூட்டுக் கற்பழிப்பு வழக்கில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அவர்களது பாதுகாப்புக்காக யாரிடமும் மன்றாடவில்லை. குறித்த கற்பழிப்புடன் சம்பந்தப்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கும் ஆதரவு தெரிவித்து எந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறவில்லை. இறுதியில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.

மற்றையது: 2013 இல் உத்தர பிரதேச முசாபர்நகர் கலவரத்தின் போது முஸ்லீம் பெண்களை கற்பழித்து கொலை செய்த சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு இன்றும் நிலுவையிலேயே உள்ளது. இங்கு வேடிக்கை என்னவென்றால் சிறு தொகை இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டால் சமூகமும் ஊடகங்களும் பெண்களை மறந்துவிடுவதுதான்.  

எனவேதான் நாம் போராடவேண்டியது ஹதுஆவில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல. ஒட்டுமொத்த ‘வெறுப்பூட்டலுக்கும்’ எதிராகவாகும்.   

No comments

Powered by Blogger.