April 16, 2018

ஆசிபாவின் தாய், எழுப்பும் நூற்றுக்கணக்கான கேள்விகள்

கேள்வி,  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த எட்டு வயது சிறுமியின் தாய் எழுப்பும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? இந்த தாய் எழுப்பும் கேள்விகள் மதத்தலைவர்களை, நம்மை உலுக்குகிறது.

'எங்கள் குழந்தை ... அவள் என்ன சாப்பிட்டாள்? எதாவது தவறு செய்தாளா? திருடினாளா? அவளை ஏன் கொன்றார்கள்?'

'தூரத்தில் இருந்தே கொண்டு சென்றிருக்கிறார்கள். வண்டியில் கடத்திச் சென்றார்களா? தூக்கிச் சென்றார்களா? குழந்தையை என்ன செய்தார்கள்? எப்படிக் கொன்றார்கள்? எதுவுமே தெரியவில்லை. அவளை கொன்றுவிட்டார்கள் என்பது மட்டுமே தெரிகிறது.

கேள்விகள்... இந்த முடிவுறா கேள்விகள் மட்டுமல்ல. ஒரு தாயின் கசிந்த இதயம் கசந்துபோய் ஆழமாக பட்ட காயத்தில் இருந்து வடியும் குருதிக் கேள்விகள்.

உதம்புர் மலைப்பகுதியில் அந்த தாய் எங்களிடம் கேள்விக்கணைகளை தொடுத்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட எட்டு வயது சிறுமியின் பால் வடியும் முகமே கண்முன் தோன்றுகிறது.

அவளின் சாயலை எதிரில் அமர்ந்து நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் தாயிடம் பார்க்க முடிகிறது. மாசில்லா வெண்ணிறம், கருமை நிறத்தில் மின்னும் கண்கள்.

"என் மகள் கொள்ளை அழகு, விவேகமானவள், புத்திசாலி, தைரியமானவள். மேய்ச்சலுக்கு கால்நடைகளை காட்டுக்கு அழைத்துச் செல்வாள். சரியான நேரத்திற்கு வந்து விடுவாள்."

"ஆனால் கடைசியாக அன்று சென்றவள், திரும்பி வரவேயில்லை, அவளது சடலத்தைதான் பார்க்க முடிந்தது."

ஆடு மாடுகள், பசுக்கள் என கால்நடைகள் அங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றன. குதிரைகள் தங்கள் குட்டிகளுடன் அங்கு மேய்ந்துக் கொண்டிருக்கின்றன.

அவளுக்கு குதிரைகள் மீது கொள்ளைப் பிரியம். விளையாட்டில் அதிகம் விருப்பம் கொண்ட அவள், குதிரைச் சவாரியில் கெட்டிக்காரி என்கிறார் அவரது சகோதரி.

ஜம்முவில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் வசிக்கிறது கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பம். அவள் காணாமல் போன ஜனவரி 10ஆம் தேதி அன்று அவள் காட்டில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையை ஓட்டிவரச் சென்றதாக அவரது தாய் நினைவுகூர்கிறார்.

குதிரை வீடு திரும்பியது. ஆனால், அவள் திரும்பவில்லை. ஏழு நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு சிறுமியின் சடலம் காட்டுப்பகுதியில் வீசப்பட்டது.

குழந்தையை பறி கொடுத்த தாயின் தவிப்பை விவரிக்கவே முடியவில்லை.

"எனது மூன்று மகள்களில் இப்போது இருவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்."
தனது சகோதரரின் குழந்தை ஒரு விபத்தில் இறந்தபிறகு, சிறுமியை அவருக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த வன்கொடுமைகள் நடந்த நேரத்தில், அந்த சிறுமியின் உண்மையான பெற்றோர் சாம்பா என்ற இடத்தில் முகாமிட்டு இருந்தார்கள். தத்துக் கொடுக்கப்பட்ட சிறுமி, கத்துவா கிராமத்தில் இருந்த தனது மாமாவின் வீட்டில் இருந்தார்.

சிறுமியின் சடலம் அவர் காணாமல்போன ஏழு நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டாலும், அதை குடும்பத்தினர் பெறுவது எளிதான நடைமுறையாக இல்லை.

"உங்கள் பக்கார் இனத்தை சேர்ந்த சிலர் சிறுமியை கொன்றிருப்பார்கள் என்றுதான் முதலில் போலிஸ் சொன்னது. ஆனால் இதுபோன்ற இழிவான செயலை கிராமவாசிகள் செய்யமாட்டார்கள் என்று உறுதியாக கூறிவிட்டோம்" என்கிறார் அவர்.

பல்வேறு கேள்விகளை எழுப்பும் குழந்தையின் தாய் தனது மனதில் உள்ள ஆதங்கத்தையும் சொல்கிறார். "மரணம் என்பது எல்லோருக்கும் வருவதுதான். இயற்கையாக இறந்துவிட்டால், அதை தாங்கிக் கொள்ளலாம்." ஆனால் இப்படி கொடூரமாக மற்றவர்களால் கொல்லப்பட்டால்?" என்று கேட்கிறார்.

எங்கள் மகளை எங்களுக்கு உரிய கல்லறையிலும் அடக்கம் செய்ய விடவில்லை. வேறு வழியில்லாமல் இரவு நேரத்தில் பக்கத்து கிராமத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்கிறார் அச்சிறுமியின் தந்தை.

வாழ விடாமல் வன்கொடுமை செய்து உடலில் இருந்த உயிரை பறித்துக் கொண்டு சடலமாக வீசிய பிறகும், அந்த சடலத்தை புதைக்க கல்லறையையும் கொடுக்க மறுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

மீளா கேள்விகள் எழுப்பும் மீளமுடியா துயரங்கள்...

0 கருத்துரைகள்:

Post a Comment