April 26, 2018

சண்முகா கல்லூரி, ஹபாயா சர்ச்சை - நடந்தது என்ன..? (முழு விபரம்)

திருகோணமலை - சண்முகா இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை.இங்கு மொத்தமாக 8 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். அவர்களுள் ஐவர் பெண்கள். பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன். சென்ற ஏப்ரல் 2ம் திகதியோடு ஓய்வுக்கு செல்லவேண்டியவர் நீடிப்பில் பாடசாலையில் இருக்கிறார்.

2013ல் இப்பாடசாலைக்கு முதன் முதலாக றாஷிதா என்னும் முஸ்லிம் ஆசிரியை கற்பிக்க வந்திருந்தார். தான் பாடசாலைக்கு ஹபாயா அணிந்து வரவேண்டும் என்று அதிபர் திருமதி ஜெயபாலனிடம் அனுமதி கோரியிருந்தார். இந்தப் பாடசாலையில் ஹபாயா அணிந்துவர முடியாது என்ற கண்டிப்பான உத்தரவு அவருக்குப் போடப்பட்டதைத் தொடந்து மாகாணசபைப் பணிப்பாளரிடம் ஆசிரியை ராஷிதா முறைப்பாடு செய்திருந்தார். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு மாதகாலப் போராட்டம் பலனில்லாமல் போனதன் பின்னர் புடைவை அணிந்து கொண்டுதான் அவர் பாடசாலைக்குச் சென்றிருக்கிறார். இப்பொழுது மாற்றலாகி வேறுபாடசாலைக்குச் சென்றுவிட்டார்.

2014ல் பௌமிதா, சஜானா என்று இரு ஆசிரியைகள் சண்முகா கல்லூரிக்கு நியமனம் கிடைத்துச் சென்றிருக்கின்றனர். சஜானா ஆசிரியை அந்தப் பாடசாலையின் பழைய மாணவியும் கூட. ஹபாயா அணிந்து வருவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். அனுமதி வழங்கப்பட்டவில்லை. பாடசாலையின் அதிபர் அதே பல்லவியைப் பாடியிருக்கிறார். விரும்பினால் இடமாற்றம் தரப்படும் செல்கிறீர்களா என்று வினவப்பட்டது. ஆனால் அவர்கள் இந்தப் பாடாசாலையிலேயே புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்கள்.

2016ல் ஷிபானா என்னும் ஆசிரியை சண்முகா இந்துக் கல்லூரிக்கு நியமனம் பெற்றுச் சென்றார். ஹபாயா அணிவதற்கான் அனுமதியை பாடசாலை அதிபரிடம் கேட்டிருக்கிறார். அதே மறுப்பு. புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்.

2018 ஜனவரியில் திருமதி கபீர் அவர்கள் மாற்றலாகி கல்லூரிக்கு வந்திருந்தார். என்ன நடந்தாலும் தான் ஹபாயா அணிந்து கொண்டுதான் வருவேன். நிர்வாகம் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார். இரண்டாம் தவணைப் பரீட்சை முடியும் வரைக்கும் திருமதி கபீர் ஹபாயா அணிந்து கொண்டுதான் பாடசாலைக்குச் செல்வார்.

சென்ற திங்கட்கிழமை ரெஜினா என்னும் இன்னொரு முஸ்லிம் ஆசிரியையும் பாடசாலைக்கு புது நியமனம் பெற்று வரவிருந்தார்.

இந்த நிலையில் இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலை மூடப்பட்டிருந்தது. எமது உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எல்லா முஸ்லீம் ஆசிரியைகளும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை செல்லும் போது தாம் அனைவரும் ஹபாயா அணிந்து செல்வதாக தீர்மானம் எடுத்திருந்தனர்.

ஒரு மரியாதைக்கான பாடசாலை அதிபரிடம் இதனை எத்திவைப்பதற்காக சென்ற ஞ்சாயிற்றுக்கிழமை (22) மாலை ஆறு மணியளவில் ஆசிரியைகளான பௌமிதா, சஜானா, ஷிபானா அவர்களுக்குத் துணையாக ஆசிரியை பௌமிதாவின் கணவர், சுஜானாவின் கணவர் ஆகியோர் பாடசாலை விடுதியில் அதிபரைச் சந்திக்கச் சென்றனர். அதிபர் அலுவலகத்தில் இருந்ததால் அலுவலகத்தில் அதிபரைச் சந்தித்து தாங்கள் பாடசாலைக்கு ஹாபாயா அணிந்து வரப்போவதாகக் கூறியிருக்கின்றனர்.

‘’நீங்கள் நினைத்த மாதிரி வரமுடியாது. எமக்கென்று ஒரு தனிக்கலாச்சாரம் இருக்கிறது. அந்தக் கலாச்சாரத்தைப் பேணவேண்டும் என்று அதிபர் பேசியிருக்கிறார்.

‘’ஆசிரியர் ஒழுக்கக் கோவையில் சீரான ஆடை அணிந்து வரவேண்டும் என்றுதான் இருக்கிறது. எமது கலாச்சார ஆடையை அணிய  உரிமை எமக்கு இருக்கிறது. பாடசாலைக்குள் புடையைவும் அதற்கு வெளியே ஹபாயும் அணிவது எங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று முஸ்லிம் ஆசிரியைகள் கூறியிருக்கிறார்கள்.

‘கதைவைப் பூட்டிவிட்டு வெளியே போங்கள். பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகுங்கள். விரும்பிய முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்று படிப்பியுங்கள். எங்கள் பாடசாலைக்கு ஏன் வருகிறீர்கள்’’ என்று அதிபர் திருமதி ஜெயபாலன் சொல்லியிருக்கிறார்.

இது நடந்தது ஞாயிறு மாலை.

அதிபருக்கும் ஆசிரியைகளுக்குமிடையே நடந்த உரையாடல் ‘ஈழன் சுதன்’ எனப்படும் எல்லாள அமைப்பைச் சேர்ந்த ஒரு முகனூலில் அன்றிரவே வெளிவந்தது. அதிபருக்கு மாத்திரம் தெரிந்த ஒரு செய்தி எப்படி அந்த முகனூலில் வந்தது என்பதுதான் கேள்வி.

சென்ற திங்கட்கிழமை (23) அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளும் ஹபாயாவோடு பாடசாலைக்குச் சென்றபோது பாடசாலை நிர்வாகக் குழுவினரால் அழைக்கப்பட்டார்கள்.

பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன், பிரதி அதிபர் பாலசிங்கம், உதவி அதிபர் மாலினி கின்னப்பிள்ளை, உதவி அதிபர் வசந்த குமார் மற்றும் சண்முகா விடுதியின் பொறுப்பாளர் ஆகியோருக்கும் ஐந்து ஆசிரியைகளுக்குமிடையில் கூட்டம் நடந்தது.

உங்கள் இறுதி முடிவு என்ன என்று கேட்கப்பட்டது. நாங்கள் ஹபாயா அணிந்துதான் வருவோம் என்று ஆசிரியைகள் உறுதியாகக் கூறினார்கள். ’அப்படியானால் எமது சமூகம் ஆர்ப்பாட்டம் செய்து பயமுறுத்தினால் நாம் அதற்குப் பொறுப்பல்ல.அதற்கு நீங்கள் முகம் கொடுக்கத் தயாரா?’ என்று அதிபரும் பிரதியதிபரும் வினவினார்கள்.

ஆர்ப்பாட்டம் ஒன்றை முகம்கொடுக்கத் தயாரா என்ற அதிபர்களின் கேள்வியும் அதைத் தொடர்ந்து வந்த ஆர்ப்பாட்டமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கூட்டம் நடந்து ஒரு மணி நேரத்தின் பின்னர் நடந்த சம்பவங்கள் ஈழன் சுதன் என்ற பக்கத்தில் வெளிவந்திருந்தது.

திங்கள் பாடசாலை முடியும் தறுவாயில், பல இந்து ஆசிரியைகள் நாளை பாடசாலைக்கு புடைவை அணிந்து கொண்டு வரவேண்டும் என்று நச்சரித்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (24) மிஸ்டர் சாம் என்று அழைக்கப்படும் பொருளியல் பாட ஆசிரியர் மோகன்ராஜுக்கும் 5 ஆசிரியைகளுக்குமிடையில் ஒரு கூட்டம் பாடசாலையின் சம்மந்தர் மண்பத்தில் நடந்தது. இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்குமாறு மிஸ்டர் சாம் ஆசிரியைகளை வேண்டியிருந்தார். ஆசிரியைகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மிஸ்டர் சாமோடு பேசிவிட்டு ஆசிரியைகள் வெளியே வரும் புகைப்படம் எல்லாளர் அமைப்பின் பக்கத்தில் வெளியாகியிருந்தது.

அதே நேரம் பாடசாலை முடிந்து செல்லும் போது சஜானா ஆசிரியையை வீதியில் நின்ற சிலர் கெட்ட வார்த்தைகளாலும், துவேஷ வார்த்தைகளாலும் திட்டி தாக்க முன்வந்திருந்தனர்.

அதைத் தொடந்து பல அனாமேதைய முகனூல் பக்கங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு நேற்றைய அழைப்பு விடுக்கப்பட்டது.அதில் பல எல்லாளன் அமைப்போடு தொடர்புபட்ட முகனூல் பக்கங்கள்.

ஆர்ப்பாட்டம் சில இனவாதக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் காணப்படுகின்றன.

நேற்று புதன்கிழமை (25) ஆசிரியைகள் ஹபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றிருந்தனர். ஆசிரியை பௌமிதாவை நோக்கி ஆசிரியை திருமதி பேரானந்தம் ‘உன்னால்தானடி பாடசாலைக்கு இத்தனை அவமானம் என்று கையை நீட்டி மிரட்டியிருந்தார்.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளை வலயக் கல்விப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாகாணப் பணிப்பாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு சிங்கள உத்தியோகத்தர், அதிபர் திருமதி ஜெயபாலன் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையில் கூட்டம் ஒன்று நடந்தது. ஆசிரியைகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். ஒரு முடிவை எட்டாமலே கூட்டம் முடிவடைந்தது.

அதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (26) மதத்தலைவர்கள், வலயக்கல்வி அதிகாரிகள், பொலீஸ் உத்தியோகத்தர்கள்,பாடசாலை நிர்வாகம் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையிலான கூட்டம் இன்று 10 மணிக்கு நடக்கவிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் ஒரு சுமுமகமான முடிவு வராவிடில் அல்லது ஆசிரியைகளின் உரிமைகள் மறுக்கப்படுமானால் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாம் நகர வேண்டும்.

கலாச்சார ஆடை இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை. அத்தோடு பாடசாலை ஒழுக்கக் கோவை இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. சண்முகா இந்துக் கல்லூரி இந்த விடயத்தில் வெற்றி பெற்றால் இது அனைத்து பாடசாலைகளிலும் அரங்கேறும். இதனை தடுத்து நிறுத்துவது எம் அனைவரினதும் கடமை.
குரலற்ற ஆசிரியைகளுக்கு நாம் குரல் கொடுப்போம்.

-Raazi Muhammadh Jaabir-

13 கருத்துரைகள்:

பௌத்த மதகுரு ஞானசேர பிக்கு வை அழைத்தால், இந்த பிரச்சனையை நியாயமாக தீர்த்து வைப்பார்.

You can't expect any justice from the school management. They are creating this mess with ulterior motives. It will be difficult to work in this school any further but those affected teachers can go and file a fundamental rights petition with the Sri Lanka Human Rights Commission.

தமிழ் பாடசாலைகளில் தமிழ் கலாசாரம் பேணப்பட வேண்டுமென்றால் முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம்களின் கலாசாரம் பேணப்பட வேண்டுமல்லவா. அவ்வாறாயின் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையிலாவது எந்தவொரு தமிழ் ஆசிரியையோ அல்லது தமிழ் மாணவியோ முஸ்லிம்களின் கலாசாரப்படி ஆடை அணிந்து வரவேண்டுமென முஸ்லிம் பாடசாலை நிர்வாகத்தினரால் எப்போதாவது வேண்டப்பட்டுள்ளனரா அல்லது வற்புறுத்தப்பட்டுள்ளனரா? எங்கேயாவது ஒரு சிறிய சம்பவத்தைத்தான் காண முடியுமா? அல்லது கேள்விப்பட்டதுண்டா? ஏன் இந்து மக்கள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? இங்கு இனவாதத்தை விதைப்பது யார்? பல தசாப்தங்களாக தமது உயிரையும் கொடுத்து தமது உரிமைக்காக குரல் கொடுத்த இவர்கள், மற்றவர்களின் உரிமைகளை ஏன் மதிக்கக் கூடாது?
ஒழுக்கம், நோ்மை, கல்விமான்களை உருவாக்குதல், நற்பிரஜைகளை உருவாக்குதல், மற்றும் பிரிவினை வேண்டாம், குரோதங்களை வளர்க்கக் கூடாது என இன்னோரன்னச் சோடிப்பு வசனங்களை தமது மகஜரில் குறிப்பிட்டுள்ள இவர்களால், பிரிவினைக்கும் குரோதங்களுக்கும் இங்கு விதை தூவுவது யார் என்பதை புரிந்துகொள்ள முடியாதிருப்பது கசப்பான உண்மையாகும்.
இவர்கள் கல்வி கற்பிற்கும் ஆசான்களா? அல்லது பிரதேசம் முழுவது பிரச்சினை வியாபிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டிவிடுபவர்களா? இதுதான் உங்கள் இலட்சனமா?
நீங்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கம், நோ்மை நற்பிரஜை பிரிவினையின்மை, குரோதமின்மை போன்ற விடயங்களுக்கு வழியமைப்பது தான் இந்த உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைக் கலாசாரமாகுமே தவிர அது எந்த வகையிலும் எந்த நற்பண்புகளுக்கும் குந்தகம் ஏற்படுத்தப்போவதில்லையே! இந்த ஆடைக் கலாசாரம் மூலம் ஏற்படக்கூடிய ஒரு சிறிய தீமையைத்தான் சுட்டிக்காட்ட முடியுமா?
குரோதம் வேண்டாம் எனக்கூறிக்கொண்டு குரோதத்திற்கு வித்திடும் நடிப்புக் கலாசாரம் இனியும் வேண்டாம்...

முஸ்லிம்கள் முஸ்லீமல்லாத பாடசாலைகளில் கட்பித்து கொடுப்பது தவிர்த்துக்கொள்ள வேண்டும் அவர்கள் ஒரே கடவுளுக்கு அப்பால்பட்டு வணங்கும் கூட்டம் அவர்களின் சிந்தனை நடைமுறைகள் எல்லாம் வேறுபட்டது.நான் 90 ஆண்டு பகுதியில் பாடசாலையில் படிக்கும் போது எங்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் இருந்தார்கள் அவர்கள் எப்போதும் மனசுக்குள் துவேஷத்தை வைத்து தான் கட்பிப்பார்கள் ஒருநாளும் சரியாக சொல்லித்தரமாட்டார்கள் இன்னும் சொல்லபோனால் தமிழ் மாணவர்கள் O/L , A /L பரீட்சசையின் போது பாட வினாத்தாள்களில் "ஓம்" என்று எழுதுவார்கள் அதை திருத்துவர்கள் தமிழ் ஆசிரியர்ரென்றால் நிச்சியமாக மிக அதிக புள்ளிகள் கொடுப்பார்கள்.

Raazi Muhammadh Jaabir அவர்களுக்கு எமது நன்றிகள். இது தான் நடந்திருக்கும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். இந்த விடயத்தில் வீட்டுக் கொடுப்பு என்பதட்கு இடமே இல்லை. இது ஒரு தனி மனித சுதந்திரத்தையும் பாதிப்பதாகும். இந்து மத கல்லூரி என்பதட்காக முஸ்லிம்கள், இந்துமத கலாச்சார படி உடையணிய வேண்டும் என்று கூறிய அதிபர் மேல் ஒழுக்க, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெளத்த பிக்குவோ, பிக்குணியோ, பாதரோ, சிஸ்டரோ பாடசாலைக்கு பாடம் படிப்பிக்க வந்தால் சாரையும், வேட்டியுமா அணிந்து வர கூறுவார்கள்???? ஒரு இனத்தின், மதத்தின் உணர்வையும் கடமையும் மதிக்கத்தெரியாத இந்த அதிபரையும் அவரை சார்ந்தவர்களையும் வன்மையாக கண்டிப்பதோடு இவர்கள் மனிதகுலத்தினதும், மனிதத்தினதும் வெட்கப்பட வேண்டியவர்கள்.

Raazi Muhammadh Jaabir அவர்களுக்கு எமது நன்றிகள். இது தான் நடந்திருக்கும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். இந்த விடயத்தில் வீட்டுக் கொடுப்பு என்பதட்கு இடமே இல்லை. இது ஒரு தனி மனித சுதந்திரத்தையும் பாதிப்பதாகும். இந்து மத கல்லூரி என்பதட்காக முஸ்லிம்கள், இந்துமத கலாச்சார படி உடையணிய வேண்டும் என்று கூறிய அதிபர் மேல் ஒழுக்க, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெளத்த பிக்குவோ, பிக்குணியோ, பாதரோ, சிஸ்டரோ பாடசாலைக்கு பாடம் படிப்பிக்க வந்தால் சாரையும், வேட்டியுமா அணிந்து வர கூறுவார்கள்???? ஒரு இனத்தின், மதத்தின் உணர்வையும் கடமையும் மதிக்கத்தெரியாத இந்த அதிபரையும் அவரை சார்ந்தவர்களையும் வன்மையாக கண்டிப்பதோடு இவர்கள் மனிதகுலத்தினதும், மனிதத்தினதும் வெட்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு பவுத்த பிக்கு ஆசிரியராக, சண்முக கல்லூரிக்கு படிப்பிக்க வந்தால், அந்தக் கல்லூரி அதிபர் வாய் சிறிதுகூட, அசைந்திருக்காது.

இவர்களின் வீரத்தை நாதியற்ற முஸ்லிம்களின்மேல் காட்ட முனைகிறது.

Ajan Antonyraj @ சிங்களப்படையினர் முள்ளிவாய்க்கால் வரை உங்களுக்கு தீர்த்து வைத்தது காணாமலா? இன்னும் ஞானசாரவைக் கூப்பிட்டுத் தீக்கப்க போறிங்க. படையினர் எவ்வாறு தமிழ் யுவதிகளைத் எப்படித் தீத்தாங்க என்று தெரிஞ்சும் இன்னும் ஞானசார வந்து இந்து மகளிர் கல்லூரியில தீக்கனுமாக்கும் (மன்னிக்கனும் இது தேவையாற்ற விடயங்களுக்கு கொமண்ட் அடிச்சு முஸ்லிம்களைக் குழப்பும் இனவாதி ஒருவனுக்கு மாத்திரமே அன்றி நற்பன்புள்ள எனது தமிழ் உறவுகளுக்கல்ல)

Ajan Antonyraj @ சிங்களப்படையினர் முள்ளிவாய்க்கால் வரை உங்களுக்கு தீர்த்து வைத்தது காணாமலா? இன்னும் ஞானசாரவைக் கூப்பிட்டுத் தீக்கப்க போறிங்க. படையினர் எவ்வாறு தமிழ் யுவதிகளைத் எப்படித் தீத்தாங்க என்று தெரிஞ்சும் இன்னும் ஞானசார வந்து இந்து மகளிர் கல்லூரியில தீக்கனுமாக்கும் (மன்னிக்கனும் இது தேவையாற்ற விடயங்களுக்கு கொமண்ட் அடிச்சு முஸ்லிம்களைக் குழப்பும் இனவாதி ஒருவனுக்கு மாத்திரமே அன்றி நற்பன்புள்ள எனது தமிழ் உறவுகளுக்கல்ல)

Yes, Brother Jiffry, You are correct..

We Respect GOOD Tamils who respect the rights of each other, But Racist should be given correct feedback.

திருகோணமலையைச் சேர்ந்த திரு. அருண் ஹேமச்சந்திரா தனது முகநூலில் இப்படிக்கூறுகின்றார்:

இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் ? தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா ? அல்லது எவ்வித பகுத்தறிவுமல்லாமல் தான்தோன்றித் தனமாக, தனி நபர் பிரபல்யத்திற்காகவும், வாக்கு வங்கியினை விருத்தி செய்வதற்காகவும் வீதிக்கு இறங்கிச் சுய இன்பம் காணப் போகின்றீர்கள் என்பதா ?

உடை, உணவு என்பன ஒருவரின் உரிமையே தவிர, ஒருபோதும் திணிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி/ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளது உடை தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் பலர் வீதிக்கு இறங்கிப் போராடியமையினைக் காணக் கூடியதாக இருந்தது. இதற்கான தலைமையினை அங்கிகரிக்கப்பட்ட இனவாதிகள் வழங்கியமை விசேட அம்சமாகும்.

இங்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. ஒன்று, குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் பாடசாலை சீருடை விதி முறைகளை மீறி ஆடை அணிந்து வந்தமையும்,இரண்டாவதாக, குறித்த ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை நிருவாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தமையுமாகும்.

நான் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான பாடசாலைகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகளைச் சந்தித்திருக்கின்றேன். சில பாடசாலைகள் சீருடைகளை ஆசிரியைகளுக்கு வழங்குகின்றது, பலவற்றிற்கு அவ்வாறன வசதி வாய்ப்புகள் இல்லை.

இதில் என்ன விசித்திரமான விடயமென்றால், கற்பிப்பதற்கும், ஆசிரியர்களின் சீருடைகளுக்கும் எவ்வித நேரடிச் சம்பந்தமும் இல்லை என்பதே. இந்தச் சீருடைச் சட்டங்கள் குறிப்பாக பெண்களை மாத்திரம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டமை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. என்னைப் பொறுத்த மட்டில், ஆசிரிய, ஆசிரியைகள் நேர்த்தியான, ஒழுக்கமான ஆடை அணிந்து வர வேண்டும், அவை மாணவர்களின் ஒழுக்கத்துடன் தொடர்புபட்டவை என்று இவ்வாறான பின்பற்றல்களை உருவாக்கியவர்கள் யோசித்திருக்கலாம்.

இதன் அடிப்படையில், அபாயா என்றழைக்கப்படும் குறித்த ஆடையானது ஒழுக்கமற்றது ? அத்துடன் இதனை ஒத்த ஆடை அணியும் வழமையானது வெறுமனே இஸ்லாமியர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அபாயா என்பதன் தமிழ்ப் பதம் போர்வை. இஸ்லாமியர்களுடன், யூதர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளட்ட பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஆடையினை அணியும் முறையினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேற்குலகினைப் பொறுத்த வரையில் இதற்கான தடைகள் கூட பல்வேறு வழக்குகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளன. சமுக விருத்தி என்பது ஒரு போதும் உரிமைகளைப் பறிப்பதல்ல. மாறாக உரிமைகளை வழங்குவதே.
இதுவே உலகில் நாம் நாளுக்கு நாள் கண்ணூடாகக் காணும் காட்சியாகும்.

நாம், தமிழர்களை எடுத்துக் கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பல இலட்சம் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்றனர். புலம்பெயர் நாடுகளில் எமது கலாச்சாரத்தினை வளர்க்கின்றீர்கள். இராஜ கோபுரம், பால் குட பவனி, இரதோற்சவம், பறவைக் காவடி என்பன இன்று சர்வ சாதாரணமாகி விட்டன. இதற்கு எதிராக அங்குள்ளவர்கள் பாரிய தடைகளை விதிப்பதில்லை. மாறாக, பல்வகைமையினை விரும்புகின்றனர். கனடாவிலோ, இங்கிலாந்திலோ, டுபாயிலோ அவ்வாறான விடயங்களுக்குத் தடை ஏற்பட்டிருப்பின் எவ்வாறு இருந்திருக்கும் ? நீங்கள் இன்று அபாயா அணிந்து வருவதை ஏற்க மறுக்கின்றீர்கள் என்றால், அங்குள்ள தமிழர்களினதும், இந்துக்களினதும் புதிதாக உருவாக்கப்பட்ட அடையாளங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்பதனையா மறைமுகமாகச் சொல்ல வருகின்றிர்கள் ?

contd...

ஏன் அவ்வளவு தூரம் செல்கின்றோம். சற்று வடக்குக் கிழக்கிற்கு வெளியே செல்வோம். அங்கு எத்தனையோ தமிழர் பெரும்பான்மையாக அல்லாத பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் கல்வி கற்பிக்கின்றனர் ? ஒரு வேளை சட்டங்களிலும், வழமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, சிங்களப் பள்ளிக்கூடங்களில் சிங்கள முறையில் சேலை உடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டால், அங்குள்ள தமிழ் ஆசிரியைகளின் நிலை என்ன ? அல்லது நாளை முதல் அனைத்து இஸ்லாமியப் பாடசாலைகளிலும், இஸ்லாமியர் அல்லாத ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக அபாயா மாத்திரமே அணிய வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டால் இதற்கான பதில் என்ன ?

இங்கு வெறுமனே உங்களது கீழ்த்தரமான காழ்ப்புணர்வே வெளிக்காட்டப்பட்டது. வேறொன்றும் இல்லை. ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தில், ஒரு சமூகம் பேசும் மொழியினைக் கொச்சைப் படுத்துவதும், இனவாதத்தைத் தூண்டும் வாசகங்களைத் தாங்கியதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இலங்கையில் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள் கூடத் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத பேச்சு வழக்கினைக் கொண்டமையும், நான் இன்றும் வியக்கும் சிறந்த அறிவிப்பாளரான பி.எச் அப்துல் ஹமிட் அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதையும் இங்கு வெளிப்படையாகக் கூறியே ஆக வேண்டும்.

குறித்த ஆசிரியைகளின் சீருடை விவகாரம் தொடர்பாக எழுத்துமூலமாக அதிபரால் வழங்கப்பட்ட கடிதங்கள் ஏதும் உள்ளனவா ? அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதிபரால் கல்வித் திணைக்களத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் உள்ளனவா ? இவற்றினை நிச்சயம் பரிசிலிக்க வேண்டும்.

இரண்டாவது விடயமான, கணவர்களின் எச்சரிக்கை விடயமானது நிச்சயம் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியவை. நிச்சயமாக யாராலும் அவ்வாறான எச்சரிக்கைகளை விடுக்க முடியாது. இது தொடர்பாக அதிபரோ, அல்லது நிருவாகத்தில் பங்கெடுக்கும் யார் சரி முறைப்பாடுகளை மேற்கொண்டனரா ? அவ்வாறு இல்லாவிடில் ஏன் மேற்கொள்ளவில்லை ?

ஒன்றைப் புரிந்து கொள்வோம். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரே மொழியினைப் பேசும் இரு இனங்கள். நாம் மொழி ரீதியாக விரும்பியோ, விரும்பாமலோ, ஒன்று பட்டிருக்கின்றோம். இலங்கை பூராகவும் ஒரே பாடத்திட்டத்தினைப் பின்பற்றுகின்றோம். இன்று தமிழன் என்று வீதிக்கிறங்கி இனவாதத்தினை விதைப்பவர்கள் சிலரின் காலடி கூடப் பட்டிருக்காத தென்னிலங்கையில் முஸ்லிம் சமூகம் அதி யுத்த காலத்திலும் கூட தமிழை வாழ வைத்தனர், வைத்துக்கொண்டு இருக்கின்றனர். எந்தவொரு தமிழனும் வாழாத எத்தனையோ கிராமசேவகர் பிரிவுகளில் நூறு வீதமான தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்குகின்றன. முஸ்லிம்கள் அதனை விட்டுக்கொடுக்கத் தயாருமில்லை.

இங்குள்ள முக்கிய விடயம், தமிழ் உணர்வோ அல்லது, இனப்பற்றோ அல்ல. மாறாகத் தேவையற்ற இந்துத்துவம் ஊடறுக்கின்றது. தாயக மண்ணில் இந்திய ராணுவம் செய்த அட்டூளியங்களை நாம் ஒரு போதும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இன்று அவர்களது தேவை ஒரு தமிழ், முஸ்லிம் அல்லது சிங்கள முஸ்லிம் கலவரம். இது பல்வேறு வழிகளில் மக்களைச் சென்றடைகின்றது. ஆகவே நாம் இவ்விடயம் தொடர்பாகத் தெளிவடைய வேண்டும். இன்று இஸ்லாம் விரோதப் போக்கினைக் கொண்ட இந்துக்களால் மத்திய கிழக்கு நாடுகளில் உங்களது சகோதர, சகோதரிகளை வேலைக்கு அடிமைகளாக அனுப்புவதற்கு எதிராக என்ன வேலைத்திட்டங்கள் உள்ளன ? அது போன்று தமிழருக்கு எதிரானப் போக்கினைக் கொண்ட முஸ்லிம்களும், தமிழ் மொழியினைக் கை விடத் தயாரில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆகவே இது ஒரு தற்காலிக நிலைமை. இதனை முற்போக்குச் சக்திகளால் மாத்திரமே மாற்ற முடியும். இவ்வாறு அன்றாடம் தொழில் செய்து, தமது சொந்த உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதும் ஆட்சியாளனுக்குக் கிடைத்த பெரும் வெற்றியே. நீங்கள் இன்று இதற்காகப் பிளவுபட்டதனால், நாளை ஓரு போதும் உங்களது தொழில் ரீதியான உரிமைகளுக்காக ஒன்றுபடக் கூடாது என்பது அவர்களின் அவா. ஆகவே இங்கு தோல்வி அடைவது சாதாரண மக்களே.

சற்று சிந்திப்போம். இலங்கையில் தமிழ் முஸ்லிம் விரிசலை இஸ்ரேலின் மொசாட் முன்னின்று அரங்கேற்றியது. தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம் பெயர்களிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் பெயரிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும் அனுப்பப் பட்டனர். இதனால் இடம்பெற்ற தாக்கம் கொஞ்சமல்ல. இன்று புலனாய்வுக்குப் பதிலாக FAKE ACCOUNT கள் அதே வடிவில் உலா வருகின்றன. மீண்டும் விரிசல்களை உருவாக்குகின்றன.

கயவர்களின் கோஷங்களை விட, நல்லவர்களின் அமைதி பாதகமானது. இனியும் நல்லவர்கள் அமைதி காக்க வேண்டாம். முன்வாருங்கள். எங்கும், யாரும், எந்நேரமும் சென்று தலை நிமிர்ந்து வாழக்கூடியதோர் உலகினை உருவாக்குவோம்...

Post a Comment