Header Ads



மயானத்தில் வசிக்கும், பிரியந்தவின் சோகக் கதை

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் ஒன்றாக வசிக்க முடியாத நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ஒருவர் மயானத்தில் வசித்து வருகிறார்.

கலேவல புவக்பிட்டிய பொது மயானத்தில் இந்த நபர் வசித்து வருகிறார்.

43 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்த பிரியந்த லால் ஜயவர்தன என்ற நபரே இவ்வாறு வசித்து வருகின்றார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் தனது சகோதர, சகோதரிகளுடன் இருந்து பிரிந்து சென்ற இவர், தனது தந்தை அடக்கம் செய்யப்பட்ட பொது மயானத்தில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு தந்தை உயிரிழந்த பின்னர், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் தந்தைக்கு சொந்தமான வீடு, காணிகள் என அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டு தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றியதாக பிரியந்த லால் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர்கள் கவனிக்காது கைவிட்டால், தனது புதைக்குழிக்கு அருகில் வந்து இருக்குமாறு உயிருடன் இருக்கும் போது தந்தை வழங்கிய ஆலோசனைக்கு அமைய தான் மயானத்திற்குள் வந்து வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர் தனது தந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள மரத்தடியில் தங்கியிருப்பதுடன் மழை பெய்யும் காலங்களில் மயானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சடலங்களை வைத்து ஈமகிரியைகள் செய்யும் கட்டடத்தில் உறங்குவதாகவும் கூறியுள்ளார்.

நான்கு ஆண்டுகளாக மயானத்தில் வசித்து வரும் பிரியந்த லால் ஜயவர்தன, மயானத்தில் தனக்காகவும் குழி ஒன்றை வெட்டியுள்ளார். தான் இறந்த பின்னர் அதில் தன்னை அடக்கம் செய்யுமாறு கிராம மக்களிடம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்துள்ள இவர் தனது மனைவியை அழைத்து வந்த வாழ வைக்க இடம் இல்லாத காரணத்தினால், மனைவி அவரது வலது குறைந்த சகோதரரை பராமரித்துக்கொண்டு தெய்யத்தகண்டிய பிரதேசத்தில் வசித்து வருகிறார்.

தனக்கு வாழ்க்கை குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என தெரிவிக்கும் ஜயவர்தன, உயிருடன் இருக்கும் மனிதர்களை விட இறந்தவர்கள் நல்லவர்கள் எனவும் அவர்களால் தனக்கு எந்த தொல்லையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நகருக்கு சென்று ஏதாவது வேலை செய்து அன்றைய தினம் உணவுக்காக மாத்திரம் பணத்தை சம்பாதிக்கும் அவர், சுகவீனம் ஒன்றுக்காக சிகிச்சையும் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.